ராமர் சிலை புகைப்படத்தை வெளியிட்டது சரி அல்ல... ராமர் கோயில் தலைமை பூஜாரி கூறும் அதிர்ச்சி தகவல்!


ராமர் கோயில் தலைமை பூஜாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ்.

ராமர் சிலை புகைப்படம் வெளியானதற்கு ராமர் கோயில் தலைமை பூசாரி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் வரும் திங்கள்கிழமை (ஜனவரி 22) பிரான் பிரதிஷ்டை விழாவுடன் திறக்கப்பட உள்ளது. இதன்மூலம் பல ஆண்டு கால ராம பக்தர்களின் கனவு நிறைவேறுகிறது. இதனால், புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படும் ராமபிரான் சிலை எவ்வாறு இருக்கும் என ராம பக்தர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரிடையேயும் மிகுந்த எதிர்பாரப்பு நிலவி வந்தது.

அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மூலவர் ராமர் சிலை.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் மூலவர் சிலைக்கு மைசூரு சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்த குழந்தை ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டது. இவரின் கைவண்ணத்தில் கருங்கல்லில் 51 அங்குலத்தில் செதுக்கப்பட்டு 5 வயது பாலகனாக கடவுள் ராமர் அருள்பாலிக்கிறார்.

கடந்த சில நாள்களாக ராமர் சிலை எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்த நிலையில் நேற்று, சிலையின் முழு உருவம் குறித்த புகைப்படங்கள் இணையதளம் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், இதுகுறித்து ராமர் கோயில் தலைமை பூஜாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறுகையில், "புதிய சிலை இருக்கும் இடத்தில், பிரான பிரதிஷ்டையின் சடங்குகள் செய்யப்படுகின்றன. சிலையின் உடல் தற்போது துணிகளால் மூடப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில்.

திறந்த கண்களுடன் வெளிப்படுத்தப்பட்ட சிலை சரியானது அல்ல. பிரான பிரதிஷ்டைக்கு முன் கண்கள் திறக்கப்படாது. அத்தகைய படம் வெளியிடப்பட்டிருந்தால் அதை யார் செய்தார்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார்.

ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன்பு ஸ்ரீ ராம ஜென்மபூமி கருவறையில் இருந்து குழந்தை ராமர் சிலை புகைப்படம் கசிந்திருப்பது கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினரை கவலையடையச் செய்துள்ளது. ராமர் சிலை புகைப்படத்தை கசியவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

சமூக வலைதளங்களில் வெளியான மூலவர் ராமர் சிலை.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் குழந்தை ராமர் சிலையின் புகைப்படம், கோயில் தளத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட நபர்களால் எடுக்கப்பட்டிருக்கலாம் என அறக்கட்டளை சந்தேகிக்கிறது. இது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x