பழநி தண்டாயுதபாணி கோயிலில் ஜனவரி 25-ம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் மதுரையில் இருந்து பழநிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் தண்டாயுதபாணி திருக்கோயில் உள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் இருந்து அன்றாடம் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இக்கோயிலில் ஜனவரி 25-ம் தேதியன்று தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது.
இதற்காக பயணிகளின் வசதிக்காக மதுரை - பழநி இடையே ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், " பழநி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி மதுரை - பழநி தைப்பூச சிறப்பு ரயில் (06722) குறிப்பிட்ட இரு நாட்களிலும் மதுரையிலிருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்டு காலை 08.30 மணிக்கு பழனி சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் பழநி - மதுரை தைப்பூச சிறப்பு ரயில் (06721) பழநியில் இருந்து மாலை 05.45 மணிக்கு புறப்பட்டு இரவு 08.15 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.