பிரதமர் நரேந்திர மோடி, 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டியை துவக்கி வைக்க, சென்னைக்கு இன்று மாலை வருகிறார். நாளை ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.
உ.பி., மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும், 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, கடந்த 12-ம் தேதியில் இருந்து பிரதமர் மோடி விரதம் மேற்கொண்டு வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலும்; திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலும் முக்கியத்துவம் வாய்ந்த புனிதத் தலங்களாக திகழ்கின்றன. எனவே, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு முன் ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
‘கேலோ இந்தியா' விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க இன்று மாலை சென்னை வரும் மோடி, இரவு ராஜ்பவனில் தங்குகிறார். நாளை காலை, 8:30 மணிக்கு திருச்சிக்கு தனி விமானத்தில் செல்கிறார். காலை 11:00 மணிக்கு காரில், சென்னை பைபாஸ் சாலை, திருவானைக்காவல் வழியாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் மோடி, தாயார், ரெங்கநாதர் மற்றும் அங்குள்ள சன்னதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.
மதியம் அவர், திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் செல்கிறார். அங்கிருந்து, ராமநாதசுவாமி கோவிலுக்கு செல்கிறார். ராமர் வாழ்க்கை வரலாற்றில் தொடர்புடைய இக்கோவிலில் புனித நீராடி, தீர்த்தத்தை அயோத்தி ராமர் கோவிலுக்கு எடுத்துச் செல்கிறார். ராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். இரவு ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார். 21-ம் தேதி காலை மீண்டும் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கோவிலுக்கு காரில் சென்று தரிசனம் செய்கிறார்.
பிறகு, ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வரும் மோடி, அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார். 22-ம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொண்டு குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோயில், ராமநாதசுவாமி கோயில்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.