ஶ்ரீரங்கம் கோயில் கருவறைக்குள் பிரதமர் நரேந்திர மோடியை அனுமதிக்கக் கூடாது, அது ஆகமங்களுக்கு எதிரானது என்று அயோத்தியைத் தொடர்ந்து ஶ்ரீரங்கத்திலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ந் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறுவதற்கு நாட்டில் உள்ள சங்கராச்சாரியார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அயோத்தி ராமர் கோயில் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் திறக்கக் கூடாது; பிரதமர் மோடி கோயிலில் சிலையை பிரதிஷ்டை செய்வது சனாதனங்களுக்கு எதிரானது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ள சங்கராச்சாரியார்கள் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் புறக்கணித்துள்ளனர்.
இந்தநிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கோயில்களில் வழிபாடு நடத்தி வருகிறார். அதன் ஒருபகுதியாக எதிர்வரும் 21-ந் தேதி தமிழ்நாட்டின் ஶ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் தரிசனம் செய்கிறார். இந்நிலையில் ஶ்ரீரங்கம் கோயில் கருவறைக்குள் பிரதமர் மோடியை அனுமதிப்பது ஆகமத்துக்கு எதிரானது என அங்கிருந்து எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.
கோயில்கள் தொடர்பாக பொதுநல வழக்கு தொடரும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவரான ரங்கராஜன் நரசிம்மன் இதை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 'கருவறைக்குள் யாரும் நுழைந்துவிட முடியாது. கடவுளுக்கு மலர்கள் உள்ளிட்டவைகளால் நேரடியாக பூஜை செய்ய முடியாது. கருவறைக்குள் போவது, கடவுளுக்கு பூஜை செய்வது அர்ச்சகர்கள்தான். ஶ்ரீரங்கம் பெருமாள் கோயிலுக்கு என தனியே புனிதமான நந்தவனமும் உள்ளது. அர்ச்சகர்கள்தான் ஆரத்தி காட்ட வேண்டும். பக்தர்கள் அதை செய்யக்கூடாது.
இடதுகையை பயன்படுத்துவது அமங்களத்தின் குறியீடு. ஆகையால் ஆலயங்களில் வலது கையை பயன்படுத்த வேண்டும். இவற்றை எல்லாம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் பிரதமர் மோடி ஶ்ரீரங்கம் வருவதற்கு முன்னதாக அவரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்' என்று ரங்கராஜன் நரசிம்மன் பதிவிட்டுள்ளார்.
அயோத்தியில் பிரதமர் மோடி கருவறைக்குள் நுழையக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில் தெற்கிலும் அப்படி ஒரு எதிர்ப்பு கிளம்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரங்கராஜன் நரசிம்மனின் இந்தப் பதிவுக்கு வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பி உள்ளது. ரங்கராஜன் நரசிம்மனை சிலர் விமர்சிக்கும் நிலையில் அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
அமைச்சர் உதயநிதிக்கு சம்மன்... விசாரணைக்கு ஆஜராக உத்தரவு! நீதிமன்றம் அதிரடி!
போர் மூளும் அபாயம்... ஈரான் உள்ளே புகுந்து பாகிஸ்தான் விமானப்படை பதில் தாக்குதல்!