அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் தேசம் முழுவதும் உள்ள மக்களை கலந்துகொள்ள வைப்பதற்காக ஆர்எஸ்எஸ், விஹெச்பி அமைப்புகளும் பாஜகவும் ரொம்பவே மெனக்கிடுகின்றன.

இதன் மூலம் ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வும் ராமர் கோயில் கும்பாபிஷேகமும் தேசம் தழுவிய திருவிழாவாக மாற்றப்பட்டு வருகிறது.
இதனிடையே, பாஜகவுக்கு மாற்று சிந்தனை கொண்ட கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கும் மடாதிபதிகளுக்கும் சிறப்பு அழைப்புகள் வைக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்திருக்கின்றன.

“ஆன்மிக விழாவை அரசியல் விழாவாக்க பாஜக முயற்சிக்கிறது பாஜக. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், அனைவருக்கு பொதுவான ராமரை வைத்து பாஜக அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறது” என புறக்கணிப்புக்கான காரணத்தைச் சொல்கிறார்கள்.

இதேபோல், ராமர் சிலையை மோடி கையால் பிரதிஷ்டை செய்வதை தங்களால் ஏற்கமுடியாது என்று சொல்லி முக்கிய மடாதிபாதிகள் சிலர் பகிரங்கமாகவே அறிவித்து கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்திருக்கிறார்கள்.
இருப்பினும் இந்தியா முழுமைக்கும் இருந்து சுமார் 4 ஆயிரம் சாதுக்களையும் மடாதிபதிகளையும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள வைக்க திட்டமிட்டிருக்கிறது விழாக்குழு. அந்த வகையில் தமிழகத்திலும் முக்கிய மடாதிபதிகள் அனைவருக்கும் முறைப்படி அழைப்பிதழ் வைக்கப்பட்டு வருகிறது.
மற்ற இடங்களுக்கு இந்து இயக்கத்தினரும் அபிமானிகளும் அழைப்பிதழ் வைத்து அழைப்பு விடுத்துவரும் நிலையில், தமிழகத்தில் முக்கிய மடாதிபதிகளுக்கு அவர்கள் சார்ந்த பகுதிகளில் இருக்கும் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ்களை உரிய மரியாதையுடன் வைத்து கும்பாபிஷேகத்துக்கு அழைத்து வருகிறார்கள்.

இப்படி அழைக்கப்படும் மடாதிபதிகளின் வருகை குறித்து உறுதிசெய்துகொண்டு அவர்களுக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக தமிழகம் மற்றும் உபி மாநில போலீஸார் தொடர்ச்சியாக மடாலய நிர்வாகிகளுடன் பேசி வருகிறார்கள்.
சிறப்பு அழைப்பாளர்கள் என்ற கேட்டகிரியில் வழங்கப்பட்டு வரும் இந்த அழைப்பிதழ்கள் ஆளுநர் அலுவலகம் மூலமாக பல்கலை துணைவேந்தர்களுக்கு அனுப்பப்பட்டதாலேயே துணைவேந்தர்கள் இந்த விஷயத்தை ஸ்ரத்தை எடுத்துச் செய்துவருவதாகச் சொல்லப்படுகிறது.
