‘ராம நாமம் பாடுங்கள்’ என்றதற்காக எதிர்ப்புக்கு ஆளான சின்னக் குயில் சித்ரா... ஆதரவுக் கரம் நீட்டிய பாஜக


கே.எஸ்.சித்ரா

ராம நாமம் பாடுமாறு சின்னக்குயில் சித்ரா கோரிக்கை வைத்ததை அடுத்து, அவருக்கு இணையத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

சின்னக்குயில் சித்ரா என்று அன்போடு ரசிகர்களால் விளிக்கப்படும் கே.எஸ்.சித்ரா, அயோத்தி ராமர் கோயில் விழாவினை முன்னிட்டு, பொதுவெளியில் முன்வைத்த கோரிக்கைக்காக பெரும் சைபர்வெளித் தாக்குதலுக்கு ஆளானார். சித்ராவுக்கு ஆதரவு - எதிர்ப்பு என இணையம் ரெண்டுபட்டதும் நடந்தது.

தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகி கே.எஸ்.சித்ரா. ஜனவரி 22 தினத்தின் அயோத்தி ராமர் கோயில் விழாவை முன்னிட்டு, ராமரின் துதிகளைப் பாடவும், வீடுகளில் விளக்கு ஏற்றவும், வீடியோவில் ஒன்றில் தோன்றி வேண்டுகோள் வைத்தார். இன்ஸ்டா ஸ்டோரியாக வெளியான இந்த வீடியோ வைரலானதில், கேரளாவை மையமாகக் கொண்டு இதற்கு சமூக ஊடகங்ளில் கடும் எதிர்ப்பு உருவானது.

தற்போது 60 வயதாகும் சித்ரா, மலையாளம், தமிழ் உட்பட பல மொழிகளில் 25,000-க்கும் மேற்பட்ட பின்னணி பாடல்களைப் பாடி உள்ளார். அவற்றின் மூலம் ரசிக உள்ளங்களை கொள்ளை கொண்டதோடு, பின்னணி பாடலுக்கான தேசிய விருதுகளை 6 முறை வென்றுள்ளார். அவரது குரல் அன்றாடம் எதிரொலிக்கும் சமூக ஊடகங்களில், கடந்த 3 தினங்களாக அதிருப்தியும் அதிகரித்தது.

சமூக ஊடக தளங்களில் பரவும் குறுவீடியோவில் தோன்றும் சித்ரா, ”அயோத்தி ராமர் கோயில் விழாவை முன்னிட்டு அனைவரும் ராம நாமத்தை ஜெபியுங்கள். ஐந்து திரிகள் கொண்டு விளக்குகள் ஏற்றி, ஜனவரி 22 அன்று 'ஸ்ரீ ராமா.. ஜெய ராம, ஜெய ஜெய ராம' என மந்திரம் பாடுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து ’அயோத்தியின் வரலாற்றையும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதையும் வசதியாக மறந்துவிட்டவரின் கோரிக்கை இது’ என்று சித்ராவுக்கு எதிராக பொதுவெளி தாக்குதல்கள் கிளம்பின. இடதுசாரிகள் ஆட்சியிலான கேரளம் என்பதால், சித்ராவுக்கு எதிரான சீற்றம் வலுவாக ஒலித்தது.

வெகு தாமதமாகவே, சித்ராவுக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன. சக பாடகரான ஜி.வேணுகோபால், ’44 வருடங்களாக இசை, பின்னணி பாடல் ஆகியவற்றை மட்டுமே அறிந்த சித்ரா மீது அரசியல் நோக்கிலான இந்த தாக்குதல் அநாவசியமானது’ என்றார்.

தொடர்ந்து மாநில பாஜக தலைவரான கே.சுரேந்திரன், ”மதிப்பிற்குரிய பாடகி கே.எஸ். சித்ரா அவர்கள் மீது இடதுசாரி ஜிகாதிகள் நடத்திய இணையத் தாக்குதல்கள் திகைப்படையச் செய்கின்றன. கேரளாவில் பினராயி விஜயன் ஆட்சியில், ஒரு இந்து சுதந்திரமாக பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்கள் உள்ளன. இதில் காங்கிரஸ் மௌனம் காப்பது வெட்கக்கேடானது. கே.எஸ்.சித்ராவுக்கு பாஜக கேரள பிரிவு அசைக்க முடியாத ஆதரவை நல்குகிறது" என்று வரிந்து கட்டினார். அவரைத் தொடர்ந்து களத்தில் குதித்த பாஜகவினர், சித்ராவுக்கு ஆதரவாக தீவிரமாக களமாடி வருகின்றனர்.

x