தஞ்சை நந்தி பெருமானுக்கு 3 டன் காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் கொண்டு சிறப்பு அலங்காரம்!


தஞ்சை பெருவுடையார் கோயில் உள்ள நந்திக்கு காய்கறி அலங்காரம்

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் நந்தியம்பெருமானுக்கு 3 டன் எடையிலான காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தமிழர் திருநாளான பொங்கல் விழாவின் இரண்டாம் நாளான மாட்டுப்பொங்கல் விழா தஞ்சை பெருவுடையார் கோயிலில் வெகு சிறப்பாக இன்று கொண்டாடப்பட்டது. கொடிமரம் முன்பு உள்ள நந்தி மண்டப மேடையில் எழுந்தருளி இருக்கும் 12 அடி உயரமுள்ள நந்தியம் பெருமானுக்கு 2,000 கிலோ எடையில் கேரட், வெண்டை, தக்காளி, கோஸ், பச்சை மிளகாய், காலிபிளவர் உள்ளிட்ட பலவகையான காய்கறிகள், 700 கிலோ எடையில் ஆப்பிள், ஆரஞ்ச், அன்னாசி உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள், 300 கிலோ எடையில் ஜாங்கிரி முறுக்கு, உள்ளிட்ட இனிப்புகளைக் கொண்டு 3 டன் எடையில் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மகா தீபாராதனை

தொடர்ந்து 108 பசுக்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, கழுத்தில் மாலை அணிவித்து, வஸ்திரம் சாத்தப்பட்டு, மங்கள வாத்தியங்களுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோ பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு நந்தியம் பெருமானை வழிபட்டுனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நந்திக்கு காய்கறிகள், பழங்கள், இனிப்புகளால் அலங்காரம்

இதே போல் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நந்தி பகவானுக்கு காய், கனி, இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருவூடல் திருவிழாவை ஒட்டி உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், கோயில் ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டுவாயிலில் எழுந்தருளி, சூரிய பகவான் மற்றும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

x