சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளதையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். இதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை தற்போது நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் இன்று மாலை 6:20 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பந்தளத்தில் இருந்து திருவாபரண பெட்டி சபரிமலைக்கு கிளம்பி உள்ளது. இன்று மகரவிளக்கு பூஜை நடைபெறுவதை ஒட்டி அதிகாலை 2:40 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மகர சங்கராந்தி எனப்படும் சிறப்பு பூஜையும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
மாலை 6:20 மணியளவில் பந்தளத்தில் இருந்து சந்நிதானத்திற்கு கொண்டுவரப்படும் தங்க திருவாபரணத்தை, தந்துரி மகேஷ் மோகனூரு, மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி ஆகியோர் பெற்றுக்கொண்டு ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற உள்ளது. இதயொட்டி தற்போது சபரிமலையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளனர். வீட்டில் இன்று மாலை தெரிய உள்ள மகரஜோதியை காண சந்நிதானத்திற்கு அருகில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலையில் தற்போது ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதால் கூடுதலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சபரிமலை முழுவதும் பக்தர்கள் குவிந்துள்ளதால், தரிசனத்திற்காக பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஜோதி தரிசனத்திற்கு பிறகு புல்மேடு வழியாக ஊர் திரும்பும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அங்கும் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.