மகாளய அமாவாசை... முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்


மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் தர சிறப்பான நாள் என்பதால் இன்றே ஏராளமானோர் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்துள்ளதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மகாளயம் என்றால் மிகப்பெரிய என்று அர்த்தம். மகாளய அமாவாசை நாளில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் அளித்து வழிபடுவது மரபு. தமிழகத்தில் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் தொடங்கி காவிரி தீர்த்தகரைகள், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடல், முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி வரைக்கும் முக்கிய ஆலயங்களில் பக்தர்கள் தர்ப்பணம் அளித்து வழிபடுவது மரபு.

பவுர்ணமி முடிந்து பிரதமை முதல் புரட்டாசி அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் நம் முன்னோர்கள் பூமிக்கு வந்து நாம் கொடுக்கும் தானங்களை ஏற்றுக்கொள்வதாக ஐதீகம். மகாளய அமாவாசை தினத்தன்று தமிழகத்தில் அதிகாலை முதலே ஏராளமானோர் புனித நீராடி திதி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.

அந்தவகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலானது 12 ஜோதிடர் லிங்கங்களில் ஒன்றாகவும், தீர்த்தம் மூர்த்தி ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்டு பாவங்களை போக்கும் முக்கிய ஸ்தலமாகும். மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை நாளில் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

மேலும், ஆடி, புரட்டாசி, தை போன்ற மாதங்கள் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தம் கடற்கரையில் முன்னோருக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து அக்னி தீர்த்தம் கடலில் புனித நீராடி, கோவிலுக்குள் இருக்கும் 22 புனித தீர்த்தத்தில் நீராடி விட்டு ராமநாதசுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் வழிபடுவார்கள்.

நாளைய தினம் மகாளய அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் இன்று முதலே ராமேஸ்வரத்திற்கு வருகை தந்துள்ளனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்திடும் வகையில் நான்கு ரத வீதிகளிலும் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

திருட்டு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

x