கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்டம் ஹரிப்பாட்டில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகன் கோயில்களில் மிகவும் பழமையான கோயில் ஆகும். தட்சிண பழநி என்றும், கேரள பழநி என்றும் அழைக்கப்படும் இக்கோயில் கலியுகத்துக்கு முன்பே நிறுவப்பட்டதாக அறியப்படுகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய கோயிலாக உள்ள இத்தலத்தில், கொடிக் கம்பமும் மிகப் பெரியதாக உள்ளது தனிச்சிறப்பு. மாலை நேரத்தில் கொடியேற்று வைபவம் நடைபெறும் கோயில்களில் இதுவும் ஒன்று.
தல வரலாறு
ஒருசமயம் சூரபத்மன் என்ற அரக்கன், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பலவிதத்தில் இன்னல்கள் அளித்து வந்தான். தன்னை யாரும் அழிக்கக்கூடாது என்று பிரம்மதேவரிடம் வரம் கேட்டிருந்தான் அவன். ஆனால், விதிப்படி 7 மாதக் குழந்தையால் சூரபத்மனுக்கு அழிவு ஏற்படும் என்ற நிபந்தனையுடன் பிரம்மதேவர் அவனுக்கு வரம் அருளினார்.
பல முறை தேவர்களுக்கும் சூரபத்மனுக்கும் போர் நடைபெற்றது. ஒவ்வொரு போரின்போதும் சூரபத்மனுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால், உடனே குருதி பெருகி, ஒவ்வொரு துளிக்கும் ஓர் அசுரர் வீதம் புதுப்புது அசுரர்கள் உருவாகினர். இத்தகைய மாயக்காரனாக விளங்கும் சூரபத்மனை அழிக்க வேண்டும் என்று நினைத்த தேவர்கள் இதுகுறித்து பிரம்மதேவரிடமும், சிவபெருமானிடமும் முறையிட்டனர்.
தக்க தருணத்தில் தேவர்களைக் காத்தருள்வதாக உறுதியளித்த சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உருவாக்குகிறார். அவை ஒன்றிணைந்து கார்த்திகேயன் என்ற குழந்தையாக மாற்றம் அடைந்தன. இக்குழந்தையை பார்வதி தேவி 7 மாத காலம் பாதுகாத்து பராமரித்து வந்தார். இதை அறிந்த சூரபத்மன், கார்த்திகேயனை அழிக்க பல வழிகளில் முயன்றான். கந்த சஷ்டி தினத்தில் விஸ்வரூபம் எடுத்த கார்த்திகேயன், சூரபத்மனை அழித்தார்.
குழந்தை கார்த்திகேயன் வளர்ந்த பிறகு பல திருவிளையாடல்கள் புரிந்தார். தந்தைக்கே உபதேசம் செய்தார். பிரம்மதேவரின் படைப்புத் தொழிலை தானே மேற்கொண்டார். பல தலங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குழந்தை வடிவில் பரசுராமர் உருவாக்கிய கேரளாவுக்குச் சென்றார்.
கார்த்திகேயனின் வருகையை அறிந்த திருமால் (ஹரி), அவரை வாழ்த்தி பல பாடல்கள் பாடி வரவேற்றார். திருமால் பாடிய பாடல்கள் ‘ஹரிப் பாடல்கள்’ என்று அழைக்கப்பட்டன. திருமால் பாடிய இடம் ‘ஹரிப்பாடு’ என்று அழைக்கப்பட்டது.
கார்த்திகேயனின் வருகைக்கு மகிழ்ந்த திருமால், அவரை அத்தலத்திலேயே அமர்ந்து அருள்பாலிக்குமாறு கேட்டுக் கொண்டார். தனது மாமனின் விருப்பப்படி முருகப்பெருமான், சுப்பிரமணிய சுவாமியாக ஹரிப்பாடு தலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
கோயில் அமைப்பும் சிறப்பும்
முன்பு ஏக சக்கரம், ஹரிகீத புரம் என்று இத்தலம் அழைக்கப்பட்டது. அரபிக்கடலுக்கு அருகில் உள்ள ஹரிப்பாடு, மாவேலிக்கரை மற்றும் திருக்குன்ற புழாவை இணைக்கும் இடமாகப் போற்றப்படுகிறது. இவ்விடம் மயூர சண்டேச பூமி என்று அழைக்கப்படுகிறது.
ஹரிப்பாடு கோயிலில் நான்கு கோபுரங்கள் உள்ளன. கோயிலின் கிழக்கு நுழைவாயிலில் இருந்து பெரிய மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் 70 அடி உயரமுடைய மிகப் பெரிய கொடிமரத்தைக் காணலாம். ராஜ கோபுரத்தின் கீழே பதிந்துள்ள காலடிகள் முருகப்பெருமானின் காலடிகள் என்று அறியப்படுகிறது.
வட்ட வடிவில் உள்ள கருவறையில் முருகப் பெருமான் (ஹரிகீத புரேஷன்) ஒரு முகம், நான்கு கரங்களுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். எப்போதும் திருநீறு அல்லது சந்தனக்காப்புடன் காட்சி அருள்கிறார். ஒரு கையில் வேல், மற்றொரு கையில் வஜ்ராயுதம் கொண்டு அருள்பாலிக்கிறார். ஒரு கையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் விதமாக அபய முத்திரையுடனும், மற்றொரு கையை தொடை மீது வைத்தும் அருள்கிறார். பதினெட்டு மண்டலங்களின் இறைவனாக இத்தலத்து முருகன் போற்றப்படுகிறார்.
எட்டடி உயரத்தில் பிரம்மாண்டமாக உள்ள முருகன் விக்கிரகத்துள் முப்பெரும் தேவர்களான சிவபெருமான், திருமால், பிரம்மதேவர் இருப்பதாக ஐதீகம். குழந்தை வடிவில் எழுந்தருளியுள்ளதாலும், முருகப்பெருமானின் திருமணத்துக்கு முன்பே அமைந்த கோயில் என்பதாலும், இத்தலத்தில் வள்ளி, தெய்வயானை இல்லை. கோயில் வளாகத்தில் கூத்தம்பலம் (நடன சபை) உள்ளது. கந்தனின் வாகனமாக கருதப்படும் மயில்கள் கோயில் வளாகத்தில் நிறைந்து காணப்படுகின்றன.
முருகன் சந்நிதிக்கு அருகே தட்சிணாமூர்த்தி, விநாயகர், திருவம்பாடி கண்ணன், நாகர், சாஸ்தா, கீழ்த்தயார் கோயில் சுப்பிரமணிய சுவாமி அருள்பாலிக்கின்றனர்.
கேரள முறைப்படி இத்தலத்தில் பூஜைகள் நடைபெறுகின்றன. சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு கோயில் இருந்ததாகவும், கி.பி 1096-ம் ஆண்டில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டதால், மூலவர், தங்கக் கொடி மரம், கூத்தம்பலம் தவிர அனைத்தும் எரிந்து விட்டதாகவும், அதன் பிறகு இக்கோயில் சித்திரைத் திருநாள் ராம வர்மா மன்னர் காலத்தில் புனரமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தங்கக் கொடி மரமும் மீண்டும் நிறுவப்பட்டது.
ஜலோத்சவம்
தொடக்க காலத்தில் பரசுராமரால் வழிபடப்பட்டு வந்த கந்தனின் விக்கிரகம், காலப்போக்கில் கோவிந்தமுட்டம் உப்பங்கடலில் உள்ள கந்த நல்லூர் என்ற இடத்தில் விடப்பட்டு பின்னர் மீட்கப்பட்டு, நெல்புரகடவில் கரைக்கு கொண்டு வரப்பட்டது. இதை நினைவுகூரும் வகையில் பயிப்பாடு வல்லம் களி அல்லது ஜலோத்சவம் என்ற திருவிழா இங்கு கொண்டாடப்படுகிறது. 3 நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழா திருவோணத்துக்கு (ஆவணி மாத திருவோண நட்சத்திர தினம்) பிறகு பையாப்பட்டு ஆற்றில் நடத்தப்படும். விக்கிரகம் மீட்கப்பட்ட பிறகு கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த தாரகன்மார் என்பவருக்கு சொந்தமான ஓர் ஆலமரத்தடியில் அரை நாழிகை (12 நிமிடங்கள்) பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இப்போதும் இந்த இடத்தில் ‘அரை நாழி அம்பலம்’ என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கோயில் உள்ளது.
மகர மாதம் (தை மாதம்) பூச நட்சத்திர தினத்தில் இக்கோயிலுக்கு முதன்முதலில் குடமுழுக்கு நடத்தப்பட்டதால், ஒவ்வொரு வருடமும் இந்த நாள், கோயிலின் ஸ்தாபக நாளாகக் கொண்டாடப்படுகிறது. குடமுழுக்கு தினத்தில் திருமால் ஒரு துறவியாகத் தோன்றி குடமுழுக்கை நடத்தியதாக கூறப்படுகிறது.
17 முருகன் தலங்களை இணைத்தால் ஓம் வடிவம்
முருகப் பெருமானின் 17 முக்கிய தலங்களை இணைத்தால் ‘ஓம்’ வடிவம் அமைவதாக தெரிவிக்கப்படுகிறது. கர்நாடகாவில் தொடங்கி கேரள மாநிலத்தில் முடியும் இந்த ஓம் வடிவ தலங்களில், 14 தலங்கள் தமிழகத்திலும், 2 கர்நாடகாவிலும், 1 கேரளத்திலும் அமைந்துள்ளன.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலை மலை (பழமுதிர்ச்சோலை), மருதமலை, வடபழநி (சென்னை), வைத்தீஸ்வரன் கோவில் (முத்துக்குமார சுவாமி), சிக்கல் (நாகப்பட்டினம்), திருச்சி வயலூர், ஈரோடு சென்னிமலை, கோபி பச்சமலை, கரூர் வெண்ணைமலை, கர்நாடகா குக்கே சுப்ரமண்யா, கர்நாடகா கட்டி சுப்ரமண்யா, கேரளா ஹரிப்பாடு ஆகிய 17 முக்கிய திருத்தலங்களை இணைத்தால் ‘ஓம்’ வடிவம் கிடைப்பது ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் கருதப்படுகிறது.
திருவிழாக்கள்
சித்திரை உற்சவம் (மேஷ மாதம்), ஆவணி உற்சவம் (சிம்ம மாதம்), மார்கழி உற்சவம் (தனுர் மாதம்) ஆகிய 10 நாள் உற்சவங்கள் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இடவ மாதத்தில் (வைகாசி) பிரதிஷ்டா நாள், கன்னி மாதத்தில் (புரட்டாசி) நவராத்திரி, துலா மாதத்தில் (ஐப்பசி) ஸ்கந்த அஷ்டமி, விருச்சிக மாதத்தில் (கார்த்திகை) கார்த்திகைத் திருவிழா ஆகிய திருவிழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாட ப்படுகின்றன. அனைத்து மாதங்களிலும் கார்த்திகை நட்சத்திர தினத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
கோயில் திருவிழாக்களில் காவடி ஆட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. திருவிழாக் காலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, கடம் பாயசம், சத்து ஔஷதம், பஞ்சாமிர்தம், உன்னியப்பம் உள்ளிட்டவை நைவேத்தியமாக படைக்கப்படும். பக்தர்களுக்கு பிரசாதமாக துலா பாயசம் வழங்கப்படும்.
திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. வேண்டுதல் நிறைவேறியதும், பக்தர்கள் இத்தலத்துக்கு வந்திருந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
தினமும் காலை 4 முதல் 11-30 மணி வரையும், மாலை 5 முதல் 8 மணி வரையும் இக்கோயில் நடை திறந்திருக்கும்.
அமைவிடம்: ஆலப்புழாவில் இருந்து 30 கி.மீ தொலைவில் ஹரிப்பாடு உள்ளது. பேருந்து அல்லது தனியார் டாக்ஸி மூலம் ஹரிப்பாட்டை அடையலாம். நகரப் பேருந்து போக்குவரத்து வசதியும் உள்ளது. இக்கோயிலில் இருந்து 1 கி.மீ தொலைவில் மண்ணார் சாலையில் புகழ்பெற்ற நாகராஜா கோயில் அமைந்துள்ளது.