ராமர் கோயில் குடமுழுக்கு விழா... ஜனவரியில் மட்டும் ரூ.50,000 கோடி வருவாய்


ராமர் கோயில்

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு, ஜனவரி ஒரு மாதத்தில் மட்டும் இந்தியாவில் ரூ.50,000 கோடி வருவாய்க்கான பொருளாதார ஊக்கம் கிடைக்கும் என அனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கணித்துள்ளது.

முன்னெப்போதும் கண்டிராத ஆன்மிக மற்றும் அரசியல் விழாவாக அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு வைபவம் தொடங்க இருக்கிறது. பெரும் செலவில் உருவாக்கப்பட்டு வரும் 3 அடுக்கு ராமர் கோயிலில், தரைத்தளம் மட்டுமே தற்போது தயாராகி உள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில் ஏனைய 2 தளங்களுக்கான பணிகள் கூடுதல் செலவில் நிறைவடையும்.

அயோத்தி நகரம்

அயோத்தி கோயில் மட்டுமன்றி, அயோத்தி நகரை சர்வதேச ஆன்மிக சுற்றுலாத் தலமாக்கும் முயற்சியில் பல்லாயிரம் கோடிகள் செலவிடப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் மின் வாகனங்கள் என அயோத்தி மாவட்டமே புத்துயிர் பெற்றுள்ளது.

தற்போதைய அயோத்தி நகரம் தொலைநோக்கு அடிப்படையில் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. விருந்தினர்கள், பக்தர்களை வரவேற்க நவீன வசதிகள் செய்யபடுவதோடு, வளரும் நகரின் மாசினை குறைப்பதற்கான ஏற்படுகளும் பசுமை வழியில் செய்யப்பட்டுள்ளன.

இவற்றுக்கான செலவினங்களுக்கு அப்பால், ராமர் கோயில் விழாவினை முன்னிறுத்தி வருவாய் ஆதாயமும் உண்டு என்று அனைத்திந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பான சிஐஏடி தெரிவித்துள்ளது.

கீதா பதிப்பகத்தின் ராமசரிதமானஸ் உள்ளிட்ட நூல்கள்

ராமர் மற்றும் அயோத்தி கோயில் என்பதை முன்னிறுத்தி வழிபாடு சார்ந்த பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. ராமர் மற்றும் அயோத்தி கோயில் படம் பொறிக்கப்பட்ட ஆடைகள், வீட்டுக்கான அலங்கார தோரணங்கள் உள்ளிட்டவை இதில் சேரும். வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் வரவால் உத்தரபிரதேச மாநிலத்துக்கான சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சார்ந்த வருவாயும் அதிகரித்து வருகின்றன.

இவற்றுக்கு அப்பால் ராமர், ராமாயணம், அயோத்தி உட்பட ஆன்மிகம் மற்றும் மத வழிபாடு சார்ந்த புத்தகங்கள், டிஜிட்டல் பதிவுகள் ஆகியவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது. கோரக்பூரின் கீதா பிரஸ் பதிப்பத்தின் ராமசரிதமானஸ், அனுமன் சாலிசா உள்ளிட்ட புத்தகங்கள் இருப்பு தீருமளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளன.

x