அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியது என்று இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பிரதீபா சிங் தெரிவித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங் தற்போது அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ளார். இவருக்கு ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இவரது மகன் முன்னாள் அமைச்சர் விக்ரமாதித்ய சிங் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கப் போவதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
கும்பாபிஷேகத்துக்கு செல்வது குறித்து, தான் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கூறியிருக்கும் பிரதீபா சிங், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சி உண்மையில் பாராட்டுக்குரியது என்று மனப்பூர்வமாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

"எனது கணவரும் முன்னாள் முதல்வருமான வீரபத்ரசிங், கடவுள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். இமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு ஆலயங்களை அவர் புதுப்பித்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் 98 சதவீதம் இந்துக்கள் இருக்கிறார்கள். நாங்கள் கடவுள் ராமர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். எங்கள் மதம் முன்னேற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
அயோத்தி ராமர் கோயில் இயக்கத்துக்கு எனது தந்தையும் எப்போதும் ஆதரவாக இருந்துள்ளார். எங்களைப் பொறுத்தவரை இது அரசியல் விவகாரம் கிடையாது. இது மதம் சார்ந்த விஷயம். நாங்கள் இந்துக்கள். எங்கள் மதத்தை முன்னோக்கி கொண்டு செல்வது, எங்கள் பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை வைப்பது ஆகியவை எங்கள் கலாச்சாரம். இந்த திசையில் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம்' என அவர் கூறியிருக்கிறார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள நிலையில், பிரதமரின் இந்த முயற்சியை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில தலைவர் ஒருவர் மனம் விட்டுப் பாராட்டியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.