ராமர் கோயில் கும்பாபிஷேகம்... 11 நாள் விரதத்தைத் தொடங்கினார் பிரதமர் மோடி!


விரதம் தொடங்கினார் பிரதமர் மோடி.

அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 11 நாள் விரதத்தை துவக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

அயோத்தியில் வரும் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டையும் கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. அன்றைய தினம் கோயில் கருவறைக்குள் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும்போது, பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல் ஆகியோர் கருவறைக்குள் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனிதமான சிலை பிரதிஷ்டை நிகழ்வை முன்னிட்டு, கடைப்பிடிக்க வேண்டிய 11 நாள் விரதத்தை பிரதமர் மோடி இன்று முதல் துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் ஹிந்தியில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ’அயோத்தியில் ராம் லல்லாவின் பிரதிஷ்டைக்கு இன்னும் 11 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்த புனிதமான சந்தர்ப்பத்தின் சாட்சியாக இருப்பதற்கு நான் அதிர்ஷ்டசாலி. பிரான் பிரதிஷ்டையின்போது அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கருவியாக இறைவன் என்னை உருவாக்கியுள்ளார். இதை மனதில் கொண்டு, இன்று முதல் 11 நாள் சிறப்பு சடங்கைத் தொடங்குகிறேன். உங்கள் அனைவரிடமும் நான் ஆசீர்வாதங்களை நாடுகிறேன்.

பிரதமர் மோடி.

இந்த நேரத்தில், என் உணர்வுகளை வார்த்தைகளில் கூறுவது மிகவும் கடினம். ஆனால், நான் என் பங்கிற்கு ஒரு முயற்சி செய்துள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்து சாஸ்திரங்களின்படி, ஒரு தெய்வ சிலையின் 'பிரான் பிரதிஷ்டா' என்பது ஒரு விரிவான சடங்காகும். விழாவுக்கு முன் பின்பற்ற வேண்டிய குறிப்பிட்ட விதிகள் உள்ளன.

இடைவிடாத பணிச் சூழல், பொறுப்புகள் இருந்தபோதிலும் அனைத்துச் சடங்குகளையும் கடுமையாக பின்பற்ற பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதன் காரணமாக, அவர் 11 நாள் அனுஷ்டானத்தை தொடங்கியுள்ளார். இந்த விரத காலத்தில் தினமும் பிரம்மமுகூர்த்த நேரத்தில் துயில் எழுவது, பூஜைகள், எளிமையான உணவு போன்ற நடைமுறைகளை பிரதமர் மோடி கடைப்பிடிக்க உள்ளார்.

x