மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை வரும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்குவதற்கு தடை ஏதும் இல்லை என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். மண்டல பூஜைக்காக திறக்கப்பட்ட ஐயப்பன் கோயில் பூஜை முடிந்ததும் மூடப்பட்டு, பின்னர் மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜையின் போது சுமார் 34 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தந்தனர். இதனால் கடுமையான கூட்ட நெரிசல் நிலவியது.
இதனிடையே மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டவுடன், நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் வரை வருகை தருகின்றனர். இதையடுத்து கோயில் வளாகத்திலேயே முன்பதிவு செய்யும் வசதியை ரத்து செய்த தேவசம் போர்டு, முன்பதிவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தது. தற்போதைய சூழலில் நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேர் வரை கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் சபரிமலை கோயில் வளாகத்தில் கட்டுக்கடங்காமல் பக்தர்களின் கூட்டம் இருந்து வருகிறது.
இந்நிலையில் முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனத்திற்காக மேலும் அதிக அளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் தேவசம்போர்டு சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு கோயிலின் பல்வேறு இடங்களிலும் சந்நிதானத்தை சுற்றிலும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மகரஜோதி நிகழ்ச்சியை காண வரும் பக்தர்கள் பலரும் கோயிலின் அருகில் உள்ள வனப் பகுதிகளில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தங்குவது வாடிக்கை. அந்த வகையில் இவ்வாண்டும் ஏராளமானோர் அவ்வாறு தங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் கோயிலின் அருகில் தங்குவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் கூடுதல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். மாளிகாபுரம் கோயில் உட்பட இதற்காக 10 இடங்களில் மகரஜோதி காண்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகரஜோதி தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக 40 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் குடிநீர் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் கதறியழுத நடிகை ராதா!
மொத்தமும் போச்சு... ஓ.பீ.எஸ். மேல்முறையீட்டு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு: அதிமுகவினர் குஷி!