பழநி 2வது ரோப் கார் திட்டம் ரத்தாக வாய்ப்பு?- பக்தர்கள் கவலை


பழநியில் 2வது ரோப் கார் திட்டம் அமைக்க ஒப்பந்தம் கோரிய நிறுவனம், கூடுதல் தொகை கேட்பதாக வெளியான தகவலால் இத்திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முருகனின் ஆறுபடை வீடுகளில் 3வது படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநி மலை கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இவர்களின் வசதிக்காக அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை வின்ச் கார்கள் மற்றும் ரோப் கார் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ரோப் கார் திட்டம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் கடந்த 2017ம் ஆண்டு 2வது ரோப் கார் சேவை அமைக்க ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டது. இந்த ஒப்பந்த புள்ளிகளை தனியார் நிறுவனம் ஒன்று எடுத்து இருந்த நிலையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு செலவின தொகை அதிகரித்ததால் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக கூறப்பட்டது.

ரோப் கார்

ரூ.73 கோடிக்கு டெண்டர் எடுத்த நிறுவனம், கூடுதலாக 30 கோடி ரூபாய் கேட்டதால், இத்திட்டம் தாமதமாகி வந்தது. இந்நிலையில் இந்த திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஒரு மணி நேரத்தில் 300 பேர் வரை மட்டுமே ரோப் கார் மூலம் மலை உச்சிக்கு சென்று வரும் நிலையில், 2வது ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஒரு மணி நேரத்தில் 1,200 பேர் வரை பயணிக்க முடியும் 2வது ரோப்கார் திட்டம் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு தனியார் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

x