அயோத்தி ராமர் கோயிலுக்கு வித்தியாசமான முறையில் நன்கொடை: 'அனுமன்' படக்குழு அறிவிப்பு!


ஹனுமன் திரைப்படம்

தெலுங்கு படமான 'அனுமன்' திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அப்படத்திற்கு விற்கப்படும் டிக்கெட் ஒவ்வொன்றிலிருந்தும் ரூபாய் ஐந்தை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என அப்படக்குழு அறிவித்துள்ளது.

படக்குழுவுடன் நடிகர் சிரஞ்சீவி

டோலிவுட்டில் தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா நடித்த 'அனுமன்' திரைப்படம் ஜனவரி 12-ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை பிரசாந்த் வர்மா இயக்கியுள்ளார். இப்படத்தில் தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அம்ரிதா ஐயர், வினய் ராய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹைதராபாத்தில் நடந்த, இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட்டில் சிறப்பு விருந்தினராக, தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்துகொண்டு, ஹீரோவுக்கு அனுமனின் கதாயுதத்தை வழங்கினார். இதுதொடர்பான வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, ''ராமர் கோயில் திறப்பு விழாவில் 'அனுமன்' படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

ராமர் கோயில் கட்டுவதற்காக, தங்கள் படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் 5 ரூபாயை நன்கொடையாக வழங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தச் செய்தியை படக்குழு சார்பில் நான் அறிவிக்கிறேன். ஒரு உன்னதமான முடிவை எடுத்த இப்படக் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

'அனுமன்' திரைப்படம்

கடந்த மாதம் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் அதிகம் பேரால் பார்க்கப்பட்டது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் தனக்கென ஒரு சூப்பர் ஹீரோ சினிமா யுனிவர்ஸை உருவாக்க முயற்சித்துள்ளார். இந்த நிலையில் படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் ராமர் கோயிலுக்கு ரூபாய் ஐந்து தருவதாக அவர்கள் அறிவித்துள்ளதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

x