ராமர் கோயில் அழைப்பிதழ் எப்படியிருக்கும்? - இணையத்தில் வைரலாகும் வீடிேயோ!


ராமர் கோயில் அழைப்பிதழ்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

ராமர் கோயில் அழைப்பிதழ்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோயில் மூலவர் பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள், நாட்டில் உள்ள முக்கிய விருந்தினர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கி விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராமர் கோயில், மூலவர் ராமர் சிலை மட்டுமின்றி, ராமர் கோயிலுக்கான அழைப்பிதழும் எப்படி இருக்கும் என மக்களிடையே பரவலாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் ராமர் கோயில் அழைப்பிதழின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட அட்டைகள், சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் அமைந்துள்ளன. இதில் கோயிலின் படம், ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அழைப்பிதழில், "சிறப்பு விருந்தினரே, பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு, ராம் லல்லா தரிசனத்துக்காக அனைத்து பக்தர்களையும் அயோத்தியின் மரியதாபூர் பெருமையுடன் வரவேற்கிறது. சுமார் நானூற்று தொண்ணூற்று ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாபெரும் நிகழ்வைக் காணும், வாழ்நாளில் ஒரு முறை கிடைக்கும் அரிய வாய்ப்பாக இது இருக்கும். 2024 ஜனவரி 22 அன்று இந்த சிறப்புமிக்க தருணத்தில் பங்கேற்க நீங்கள் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

அழைப்பிதழில் ராமர் கோயில் குறித்த கையேடுகள், ஸ்ரீ ராமரின் திருவுருவம், மூலவர் பிரதிஷ்டை நிகழ்ச்சி நிரல், வி.வி.ஐ.பி. அழைப்பாளர்களுக்கு உதவும் பிற விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், ராமர் கோயில் சிலை பிரதிஷ்டையின்போது, பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் மற்றும் அறக்கட்டளையின் தலைவர் நிருத்யா கோபால் தாஸ் ஆகியோர் கருவறைக்குள் இருப்பார்கள் எனவும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமர் கோயில் அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

x