காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆதிசங்கரர் ஜெயந்தி இன்று நிறைவு


சிறப்பு அலங்காரத்தில் ஆதிசங்கரர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா இன்றுடன் (மே 21-ம் தேதி) நிறைவடைகிறது. ஆதிசங்கர பகவத் பாதர் 2,532 ஆண்டுகளுக்கு முன் நந்தன வருஷம் வைகாசி மாதம் சுக்ல பட்ச பஞ்சமி தினத்தில் அவதரித்தார்.

காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் அதன் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதிசுவாமிகள் ஆலோசனையின் பேரில், ஆதிசங்கரர் 32-வது வயதில் சித்தி அடைந்து, 2,500 ஆண்டுகள் ஆன நிகழ்வும் நடைபெற்று வருகிறது. ஆதிசங்கரர் சித்தி அடைந்தது ரத்தாக்‌ஷி வருஷம் வைகாசி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிசங்கரர் அவதரித்த விழா, காமாட்சி அம்மன் கோயிலில் இந்த ஆண்டு மே 12-ம் தேதி தொடங்கியது. இந்த சங்கர ஜெயந்தி பூர்த்தி விழா மே 21-ம் தேதி (இன்று) நடைபெறுகிறது. இதனையொட்டி காமாட்சி அம்மன், ஆதிசங்கரர் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ராஜவீதியில் உலா வர உள்ளனர். இதில் சங்கர மடத்தின் பக்தர்கள் பலர் பங்கேற்கின்றனர்.