ராமேசுவரம்/திருச்சி/ஈரோடு/சிவகாசி: ஆடி அமாவாசையையொட்டி ராமேசுவரம், ஸ்ரீரங்கம், கூடுதுறை, சதுரகிரியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்படிகலிங்க பூஜை, சாயரட்சை பூஜை, கால பூஜைகள் நடைபெற்றன. அங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்தனர்.
பின்னர், கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி, ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். மேலும், பர்வதவர்த்தினி அம்பாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஸ்ரீராமர், சீதா, லட்சுமணன் மற்றும் ஹனுமன் ஆகியோர் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள்பாலித்தனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேசுவரத்துக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன. ராமேசுவரத்தில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அம்மா மண்டபத்தில்... ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரிக் கரையில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும், பசுமாட்டுக்கு அகத்திக்கீரை, வாழைக்காய், வாழைப்பழம், பச்சரிசி-வெல்லம்-எள் ஆகியவற்றை வழங்கினர்.
அம்மா மண்டபம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பொதுமக்கள் குவிந்ததால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. காவிரியில் அதிக அளவு தண்ணீர் சென்றதால், ஆற்றுக்குள் இறங்கி நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதேபோல, திருவையாறு புஷ்ப மண்டப படித்துறையிலும் நேற்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
பவானி கூடுதுறையில்... தென்னகத்தின் காசி எனப் போற்றப்படும் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். காவிரியில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால், பக்தர்கள் ஆற்றில் நீராட அனுமதிக்கப்படவில்லை.
இதனால், கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த குழாய் நீரில் நீராடி, தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரங்களில் அமர்ந்து தர்ப்பணம் செய்தனர். கொடுமுடியிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதேபோல, தமிழகம் முழுவதும் நீர்நிலையோரங்களில் லட்சக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
சதுரகிரி மலையில்.. மதுரை மாவட்டம் சதுரகிரியில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மலையேறி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளை வழிபட்டனர். இதையொட்டி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.