இன்று மாசி மகம்.
இந்த நன்னாளில், எவருக்கேனும் புத்தாடை வழங்கலாம். பத்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்கலாம். பெரியவர்களை நமஸ்கரித்து ஆசி பெறுவது நம் குடும்பத்தில் சுபிட்சத்தைக் கொடுக்கும். பித்ருக்களின் ஆசியையும் வழங்கியருளும்.
மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் நிறைந்திருக்கும் நாள், விசேஷமான நாளாக, புண்ணியம் நிறைந்தநாளாகப் போற்றப்படுகிறது. மாசி மக நட்சத்திர நன்னாளில், தானங்கள் செய்யவேண்டும் என்றும் புனித நதிகளில் நீராடவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்ய பெருமக்கள். இந்தநாளில், நம்மால் முடிந்த அன்னதானம் செய்யலாம். பொருட்கள் ஏதேனும் தானம் செய்து இறைவழிபாடு மேற்கொள்ளலாம். இவற்றையெல்லாம் செய்து பிரார்த்தித்துக் கொண்டால், நம் மனதில் இருந்த குழப்பமும் தேவையற்ற பயமும் நீங்கும். நம் இல்லத்தில், மங்கல காரியங்கள் விரைவில் நடந்தேறும்.
பொதுவாகவே மாசி மாதத்தில் நாம் செய்யும் சடங்குகளும் வழிபாடுகளும் மிக மிக வலிமையைக் கொடுக்கும் என்கிறது சாஸ்திரம். மாசி மாதத்தில் உபநயனம், காது குத்துதல், கிரகப்பிரவேசம், புதிய தொழில் தொடங்குதல் என எது செய்தாலும் நல்ல விருத்தியாகும் என்பது ஐதீகம். அதனால்தான், மாசி மாதம் என்பதே மகிமை மிக்க மாதம் என அறிவுறுத்தியிருக்கின்றன சாஸ்திர நூல்கள்.
கலைகளையும் கல்வியையும் கற்றுத் தெளிவதற்கு ஏற்ற மாதம் என்றும் ஆச்சார்யர்கள் தெரிவிக்கிறார்கள். மாசி மாதத்தில் நாம் செய்யும் சிவ வழிபாடு, மகாவிஷ்ணு வழிபாடு, அம்மன் வழிபாடு, முக்கியமாக மகாலக்ஷ்மி வழிபாடு என எதுவாக இருந்தாலும் பன்னிரெண்டு மாசி மாதத்தில் செய்த பூஜைகளுக்கான பலன்களைக் கொடுக்கும். நம் சந்ததியினருக்கும் அந்தப் புண்ணியங்கள், பலன்களாகப் போய்ச் சேரும்!
மாசி மாதத்தில், மகம் நட்சத்திர நன்னாளை மாசி மகம் என்று போற்றுகிறோம். இந்தநாளில், புனித நீராடுவது விசேஷம். கங்கை, காவிரி, பவானி, தாமிரபரணி முதலான புண்ணிய நதிகளிலும் நீர் நிலைகளிலும் நீராடுவது நம் முன் ஜென்ம பாவங்களைப் போக்கவல்லவை. புனித நதிகளில் நீராடி, நம் குலதெய்வத்தையும் இஷ்டதெய்வத்தையும் மனதாரப் பிரார்த்தனை செய்துகொண்டால், முன் ஜென்ம வினைகள் தீரும். வாழ்க்கையில், நம் ஜாதக ரீதியாக இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும்.
மாசி என்றதும் மாசி மகம் என்றதும் நமக்கு கும்பகோணம் நினைவுக்கு வரும். கும்பகோணம் என்றதும் மகாமகக் குளம் நினைவுக்கு வரும். இந்தக் குளத்தில் நீராடுவதற்கு முன்னதாக சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்.
நாம் எந்தவொரு சடங்கு சாங்கியங்களைச் செய்வதாக இருந்தாலும் முன்னதாக சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும். அன்றைய திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் முதலானவற்றைக் கொண்டு, அதற்கு உரிய மந்திரங்களை உச்சரித்து எந்த நோக்கத்துக்காக, எத்தகைய பலன் வேண்டும் என்பதற்காகப் பூஜையைச் செய்கிறோமோ அதற்கு உரிய வேண்டுகோளை அந்தந்த கடவுளுக்கு முன் சமர்ப்பணம் செய்து தொடங்கவேண்டும். இதையே சங்கல்பம் என்கிறோம்!
கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடுவதற்கு முன்னதாக, காவிரித்தாயை நினைத்து சங்கல்பம் செய்து கொண்டு பிறகு, நீராட வேண்டும். அதேபோல், பஞ்ச கவ்யம் உட்கொள்ளச் சொல்லி சாஸ்திரம் வலியுறுத்துகிறது. மகாமகக் குளத்தில் உள்ள ஒவ்வொரு தீர்த்தத்திலும் சங்கல்பம் செய்து நீராடுவதுதான் பாவங்களைப் போக்கி, புண்ணியங்களைத் தரும் என்பதை பலர் புரிந்துகொள்ளவேண்டும்.
கும்பகோணம் என்றில்லை. மகாமகக் குளம் என்றில்லை. உலகில் நாம் எங்கே இருந்தாலும் நாம் நம் வீட்டிலேயே குளித்தாலும், அந்தத் தண்ணீரை, கங்கையாகவும் காவிரியாகவும் புண்ணிய நதியாகவும் பாவித்து நீராடலாம், நீராட வேண்டும் என்கிறது சாஸ்திரம். தீபாவளித் திருநாளில் கூட நாம் நம் வீட்டில் குளித்தாலும், ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?’ என்று கேட்பதன் தாத்பர்யம் இதுதான்! அப்படியான சங்கல்பத்தை எடுத்துக் கொண்டு, நீராடிய பிறகு, குலதெய்வ வழிபாட்டை, இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும். மாசி மகம் எனப்படும் புண்ணிய நாளில், நம்மால் முடிந்த தானங்களைச் செய்யவேண்டும்.
பொதுவாகவே, வருடந்தோறும் வருகிற புண்ணிய காலங்களில் தானம் செய்வது அவசியம். இது அளவற்ற பலன்களைத் தரும். மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியவர்களுக்கும் பார்வையற்றவர்களுக்கும் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்யவேண்டும்.
முற்காலத்தில் அரசர்கள் முதல் செல்வந்தர்கள் உட்பட எல்லோருமே எளியவர்களுக்கும் கல்விமான்களுக்கும், வேதம் படித்தவர்களுக்கும் தானங்கள் அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதேபோல், புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும்போதும், புனித நதிகளில் நீராடும்போதும் மற்றும் முன்னோர்களை நினைவுகூரும்போதும் தானங்கள் செய்ய வேண்டும் என்பது நம் வாழ்வில் இருக்கிற கடமைகளில் மிக முக்கியமான கடமை.
மாசி மகத்தன்று நம்மால் முடிந்த தான தர்மங்களைச் செய்யலாம். ‘‘பசு, பூமி அல்லது தானியங்கள், ஆபரணங்கள், உணவு முதலானவற்றை அந்தக் காலத்தில் தானமாக வழங்கினர் என்கின்றன கல்வெட்டுக் குறிப்புகள். இளநீர் ஓடு அல்லது பூசணிக்காயில் துளையிட்டு அந்தத் துளைக்குள் நவரத்தினங்களை இட்டு நிறைத்து வைத்தும் தானம் செய்துள்ளதாக சரித்திரச் சான்றுகள் தெரிவிக்கின்றன. இன்றைய காலகட்டத்தில், நம் தகுதிக்கேற்ப, குடை, உடை, போர்வை, காலணி, தானிய வகைகள், பழங்கள், அன்னதானம் என பயனுள்ளவற்றைத் தானமாக வழங்கலாம்’’ என்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்!
எனவே, மாசி மகத்தில் தானம் செய்வோம்... தனம் பெருக வாழ்வோம்!