வெள்ளிக்கிழமை; நிலை வாசலிலும் விளக்கேற்றுவோம்!


தீபம்

தீபம் என்பது மங்கலத்தின் அடையாளம். தீபத்தை ஒளி என்றும் பிரகாசம் என்றும் ஜோதி என்றும் சுடர் என்றும் சொல்லிப் புகழ்கின்றன ஞானநூல்கள்.

வீட்டில் எந்தவொரு மங்கலகாரியம் நடைபெற்றாலும் முதலில் தீபத்தை ஏற்றிவைத்துத்தான், வழிபாட்டைத் தொடங்குகிறோம். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்கிறது சாஸ்திரம்.

தினமும் நம் வீட்டுப் பூஜையறையில் காலையும் மாலையும் விளக்கேற்றித்தான் நம் வழிபாட்டைத் தொடங்குகிறோம். அந்தக்காலத்தில், மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத நிலை இருந்தது. அப்போது கோயிலிலும் தெருக்களிலும் தீபஸ்தம்பம் என்றே மிக உயரமான தூண்களை ஊன்றிக் கட்டினார்கள் மன்னர்கள். அதன் உச்சியில் தீப்பந்தமிட்டு தெருவுக்கே வெளிச்சம் கிடைக்கச் செய்தார்கள். அப்படி மாலை கவிந்து இருள் சூழும் வேளையில், வெளிச்சம் வந்தவுடன், அந்த வெளிச்சத்தையே, ஒளியையே, கடவுளாக பாவித்து, எங்கே நின்றுகொண்டிருந்தாலும் உடனே பாவனையாக கண்ணில் ஒற்றிக்கொண்டு வணங்கினார்கள்.

தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிற இந்த வழக்கமானது, மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு, ஜெகஜோதியாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலத்திலும் மாலையில் சுவிட்ச் போட்டதும் லைட்டுகள் எரியத் தொடங்கும் போது, உடனே பாவனையாக கண்ணில் ஒற்றிக்கொண்டு வணங்குகிற வழக்கம் இருக்கிறது.

மலையே சிவம், சிவமே மலையெனத் திகழும் திருவண்ணாமலையில், ஜோதிவடிவினராக தன்னை வெளிப்படுத்தினார் சிவபெருமான். திருக்கார்த்திகை மாதத்தில், கார்த்திகை தீப நன்னாளில், அதனால்தான், வீடு முழுக்க, வாசல் முழுக்க விளக்கேற்றி வைத்து வழிபடுகிறோம்.

‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை’ என்று வள்ளலார் பெருமானும் தீபமே கடவுள் என அருளியிருக்கிறார்.

கோயிலுக்கு எப்போதெல்லாம் தரிசனம் செய்யச் செல்கிறோமோ, அப்போது ஆலயத்தில் விளக்கேற்றச் சொல்லி அறிவுறுத்துகின்றன ஞானநூல்கள். மாதந்தோறும் கோயில்களுக்கு விளக்குத் திரி மற்றும் எண்ணெயை தானமாக வழங்குபவர்களும் இருக்கிறார்கள். அப்படி தானம் செய்வது மகா புண்ணியம் என்று ஆச்சார்யர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

துர்கைக்கு விளக்கேற்றுகிறோம். நவக்கிரகங்களில் சனீஸ்வரருக்கும் குரு பகவானுக்கும் விளக்கேற்றுகிறோம். எலுமிச்சையில் துர்கைக்கும் அம்மனுக்கும் தீபமேற்றி வணங்குகிறோம்.

தீபம் ஏற்றுவதே புண்ணியம். அதிலும் எத்தனை வகை தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோமோ, அதற்குத் தக்க பலன்களும் புண்ணியங்களும் உண்டு.

ஒரு தீபமேற்றி வழிபட்டால், மனதில் அமைதி நிலவும். குழப்பங்கள் யாவும் விலகும். ஒன்பது தீபங்களேற்றி வழிபட்டால், நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும். தீயசக்திகள் அண்டாது.

12 தீபங்கள் ஏற்றி வழிபட்டால், ஜென்ம ராசியில் உள்ள தோஷங்கள் நீங்கும்; எதிர்ப்புகள் அகலும். 18 தீபங்களேற்றி வழிபட்டால், இல்லத்தில் சர்வ சக்தியும் குடிகொள்ளும்.

மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. எனவே, 27 தீபங்களேற்றி வழிபட்டால், நட்சத்திர தோஷங்கள் அனைத்தும் விலகும். 27 நட்சத்திரங்கள் மற்றும் ஒன்பது கிரகங்கள் ஆகியவற்றுக்காக 36 தீபங்களேற்றி வழிபட்டால், எடுத்த காரியம் அனைத்தும் கைகூடும். திருமணம் முதலான தடைபட்ட சுபகாரியங்கள் அனைத்தும் விரைவில் நடந்தேறும்.

48 தீபங்களேற்றி வழிபட்டால், தொழில் வளரும், மனோபயம் நீங்கும். மனோபலம் பெருகும். 108 தீபங்களேற்றி வழிபட்டால் நினைத்த காரியம் அனைத்தும் நடந்தேறும். நாமும் நம் சந்ததியும் செழிப்புடனும் சிறப்புடனும் வாழலாம். நம் புண்ணியங்கள் அனைத்தும் நம் சந்ததியைச் சென்றடையும். வாழையடி வாழையென அவர்கள் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள்.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பூஜையறையில் மாலை வேளையில் விளக்கேற்றுகிற போது, வீட்டு நிலைவாசற்படியிலும் இரண்டு அகல் விளக்குகள் ஏற்றிவைத்து வேண்டிக்கொண்டால், கிரகலட்சுமியும் ஐஸ்வர்ய லட்சுமியும் நம் இல்லத்தில் குடியிருந்து, சுபிட்சத்தையும் நிம்மதியையும் தந்தருளுவார்கள்.

x