[X] Close

தெய்வத்தின் குரல்: ஈஸ்வரன் தந்த ஆற்றல்


  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 11:53 am
  • அ+ அ-

ஆர்மோனியத்திலும், நாயனத்திலும், புல்லாங் குழலிலும் காற்றைப் பலவிதமாக அளவுபடுத்திச் சில இடைவெளிகளால் விடுகிறதால் தானே சப்தம் உண்டாகிறது? நம் தொண்டையிலும் அப்படிப்பட்ட அமைப்பு இருக்கிறது. தொண்டை மட்டுமில்லை; நாபிக்குக் கீழே மூலாதார ஸ்தானத்திலிருந்து சுவாசம் என்கிற காற்றின் கதியைப் பல தினுசில் அளவுபடுத்திக் கொண்டு வருவதால்தான் நாம் பேசவும் பாடவும் முடிகிறது.

பகவான் பண்ணின இந்த மனுஷ்ய வாத்தியம் ஆர்மோனியம், நாயனம் முதலியவற்றை விட சிரேஷ்டமானது. எப்படியென்றால், அவற்றில் வெறும் ஒலிகளை மட்டும்தான் எழுப்ப முடியும். அ, க, ச, ங மாதிரியான அக்ஷரங்களை எழுப்ப முடியாது. மனுஷ்யனுக்கு மட்டுமே இந்தத் திறமை இருக்கிறது.

மனுஷ்யனுக்கு மட்டுமே இந்த ஆற்றலை ஈஸ்வரன் தந்திருக்கிறான் என்பதாலேயே அதன் முக்கியத்துவத்தை அறியலாம். இதை வைத்துக் கொண்டு தேவ சக்திகளைப் பிடிக்க வேண்டும். அதனால் உலக நலனை உண்டாக்க வேண்டும்; நம் ஆத்மாவை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

யோக சாதனையாகவே ஆகிறது

காற்றானது இப்படி நமக்குள்ளே பலவிதமாகச் செல்கிறபோது அதுவும் ஒரு தினுசில் யோக சாதனையாகவே ஆகிறது. சுவாச கதியினால் நம் நாடிகளில் ஏற்படுகிற சலனங்களால்தான் நம்முடைய உணர்ச்சிகள், சக்திகள் எல்லாம் உருவாகின்றன என்றும், ‘அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்தில் உண்டு’ என்றபடி இதே சலனங்கள் வெளி லோகத்திலும் அனேகவிதமான அதிர்வுகளை ஏற்படுத்தி உலக வியாபாரத்தை உண்டாக்குகிறது என்றும் முன்னேயே சொன்னேனல்லவா? இதனால்தான் மூச்சையடக்கி யோக சித்தி பெற்ற மஹான்களுக்கு உள்ள அதே சக்தி மந்திர சித்தி பெற்றவர்களுக்கும் உண்டாகிறது. யோகம் என்று நாம் பொதுவிலே சொல்வது ராஜ யோகம் என்றால், இதை மந்திர யோகம் என்றே சொல்லலாம்.

மந்திரங்களில் ஒவ்வொரு அக்ஷரமும் இப்படி உண்டாக வேண்டும், அதன் ஸ்வரம் இப்படியிருக்க வேண்டும், ‘மாத்திரை’ என்பதான அதன் நீளம் இப்படியிருக்க வேண்டும் என்றெல்லாம் சிக்ஷா சாஸ்திரம் விளக்குகிறது.

‘க’ மாதிரியான ஒரு சப்தம் கழுத்துக்கும் தொண்டைக்கும் நடுவேயிருந்து இப்படி வரவேண்டும்; இன்னொன்றிலே மூக்காலும் (nasal) வரவேண்டும் (அதாவது ஞ மாதிரியானவை); இன்னின்ன பல்லிலே நாக்குப் பட்டு வரவேண்டும் (‘த’ முதலிய சப்தங்கள்) ; இன்னின்ன மேலண்ணத்தில் நாக்குப் பட ஒலிக்க வேண்டும் (‘ல’ போன்றவை) ; முழுக்க உதட்டை மடித்து வரவேண்டிய சப்தம் (‘ம’) ; பல்லும் உதடும் சேர்ந்து உண்டாக்க வேண்டியது (‘வ’- labio-dental என்று சொல்கிறது) – என்றிப்படி ரொம்பவும் நுட்பமாக அக்ஷர லக்ஷணங்களைச் சொல்லியிருக்கிறது. இது ரொம்பவும் விஞ்ஞானபூர்வமாக இருக்கிறது. இப்படியிப்படி அங்கங்களையும் தசைகளையும் மூச்சையும் இயக்கினால் இன்ன அக்ஷரம் வரும் என்று சிக்ஷா சாஸ்திரத்தில் சொல்லியுள்ளபடியே நாம் நடைமுறையில் செய்து பார்த்தால் இருக்கிறது. அறிவியலாக இருந்துகொண்டே இது மந்திர யோகமாக, சப்த யோகமாகவும் இருக்கிறது.

அனேக பாஷைகளை ஒப்பிட்டு, ஆராய்ந்து, எது முந்தி, எது பிந்தி என்று நிர்ணயிக்கிற Comparitive Philology க்கே முக்கியமான ஒரு சமாசாரம் தெரிகிறது. சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், ஜெர்மன் (ட்யூடானிக் என்பது; இங்கிலீஷ் பாஷையும் ட்யூடானிக்கில் சேர்ந்ததுதான்) இன்றைய பிரெஞ்சு உள்பட அனேக பாஷைகளுக்கு மூலமான ஸெல்டிக் போன்ற பல மொழிகள் ஒரே தாய்பாஷையிலிருந்து வந்தவை என்று சொல்லி இவற்றை ‘இண்டோ யூரோபியன் குரூப்’ என்று பைலாலஜியில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். எது தாய்ப்பாஷை என்பதில் மட்டும் முடிவான அபிப்ராயம் ஏற்படவில்லை.

சம்ஸ்கிருதம் தான் ஆதி பாஷை, தாய்பாஷை என்றால் அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால், இப்போது சொன்ன ‘தந்தம்’ போன்ற வார்த்தைகள் சம்ஸ்கிருதம்தான் மூலபாஷை என்று சொல்வதற்குச் சான்றாக இருக்கின்றன.

Dental [டென்டல்] என்று இன்றைக்கு ஆங்கிலத்தில் சொல்வதும் பல்லைக் குறிப்பதுதான். ‘தந்த் – டென்ட்’ என்கிறதில் நிறைய ஒற்றுமை நமக்குத் தெரிகிறது. பிரெஞ்சு, லத்தீன் முதலான பாஷைகளிலும் ‘டென்ட்’ சம்பந்தமே தெரிகிறது. அதாவது ‘ட’ காரம் வருகிறதே தவிர, சம்ஸ்கிருதத்தில் உள்ள ‘தந்த’த்தில் வருகிற ‘த’ காரம் இல்லை. “இருந்துவிட்டுப் போகட்டும்.

இதனால் சம்ஸ்கிருதம் மூலபாஷை என்று எப்படி ஆகும்? ஏன் ‘டென்டல்’ என்பதிலிருந்துதான் சம்ஸ்கிருத ‘தந்தம்’ வந்தது என்று வைத்துக் கொள்ளக் கூடாது?” இப்படிக் கேட்டால், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன் எல்லாவற்றுக்கும் சமஸ்கிருதமே தாய்ப்பாஷை என்பதற்கு ‘தந்தம்’ என்கிறதில் வருகிற சப்தங்களே ஆதரவாயிருக்கிறது. எப்படி யென்றால் மேலே சொன்னது போல், “தந்தம்” என்பதைச் சொல்லவே தந்தம் (பல்) வேண்டியிருக்கிறது.

‘டென்டல்’ முதலான மற்ற பாஷை வார்த்தைகளைச் சொல்லிப் பாருங்கள். அதிலே பல் சம்பந்தமே இல்லை. நாக்கின் நுனி மேலண்ணத்தில் படுவதாலேயே ‘டென்ட்’ சப்தம் உண்டாயிருக்கிறது. வார்த்தையே அர்த்தத்தைக் குறிப்படுமானால், அது சம்ஸ்கிருத ‘தந்த’த்தில் தான். அதனால் இது தான் மூல ரூபம்; இதுதான் திரிந்து ‘டென்டல்’ வந்தது என்று தெரிகிறது.

உதடு படாத ராமாயணம்

உதடுபடாத சப்தங்களைக் கொண்ட வார்த்தைகளாலேயே ஆன ராமாயணம் ஒன்றை ஒருத்தர் எழுதியிருக்கிறார். அதற்கு ‘நிரோஷ்ட ராமாயணம்’ என்றே பேர். ‘ஓஷ்டம்’ என்றால் உதடு: அதிலிருந்து ‘ஒளஷ்ட்ரகம்’, அதாவது தமிழில் ஒட்டகம் என்ற பேர் வந்தது. ஒட்டகத்திற்கு உதடு தானே பெரிசாக இருக்கிறது? சம்ஸ்கிருதத்தில் ‘ஒளஷ்ட்ரகம்’ என்பது தமிழில் ‘ஒட்டகம்’ ஆயிற்று.

‘நிர்- ஓஷ்டம்’ என்றால் உதடு இல்லாதது என்று அர்த்தம். தன்னுடைய பாஷா சாமர்த்தியத்தைக் காட்டுவதற்காக அவர் இப்படி நிரோஷ்டமாக ராமாயணம் பண்ணினதாகத் தோன்றலாம். ஆனால், எனக்கு இன்னொரு காரணமும் தோன்றுகிறது. அவர் ரொம்பவும் ஆசார சீலராக இருந்திருக்கக்கூடும்! அதனால் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் கதையைப் பாராயணம் செய்கிற போது, எச்சில் படாமலே இருக்க வேண்டும் என்று இப்படி உதடு சேராத விதத்தில் பண்ணினார் போலிருக்கிறது!

(தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம்)

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close