[X] Close

உட்பொருள் அறிவோம் 23: காலம் ஒரு விசாரணை


23

  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 11:49 am
  • அ+ அ-

-சிந்துகுமாரன்

மாலை நேரம். கணவன் வெளியே கிளம்புகிறான். மனைவி தேநீர் தயாரிக்கத் தொடங்கியிருக்கிறாள். தேநீர் குடித்துவிட்டுப் போகலாமே என்கிறாள். தேநீர் தயாராவதற்குள் வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு கணவன் வெளியே நடக்கிறான்.

வீட்டுக்கருகே கடற்கரையோரத்தில் நிச்சிந்தையாக நடக்கத் தொடங்குகிறான். அவனெதிரே கடவுள் வருகிறார். ஏதேதோ பேசுகிறார்கள். எங்கெங்கோ போகிறார்கள். என்னென்னவோ காட்டுகிறார் கடவுள். பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்துவிடுகின்றன.

மறுபடி வீட்டுக்குத் திரும்புகிறான் அவன். மனைவி கேட்கிறாள், ‘தேநீர் தயாராவதற்குள் வந்துவிடுவதாகச் சொன்னீர்களே? தேநீர் தயாராகி ஐந்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது.'

‘இல்லை என் அன்பே, கொஞ்சம் காலாற நடந்துவிட்டு வந்தேன், அவ்வளவுதான்.' என்று பதில் சொல்கிறான் கணவன். மனைவி தேநீர் தயாரிக்கிறாள். கணவன் உலவச் செல்கிறான். அங்கே அவன் வேறொரு உணர்வுத் தளத்துக்கு நிலைமாறுகிறான்.

பல்லாயிரம் ஆண்டு கடவுளுடன் பேசிக்கொண்டு உலாவுவதான அனுபவம் அவனுக்கு ஏற்படுகிறது. உணர்வுநிலையில் (பிரக்ஞையில்) தளம் மாறுவதால் காலகதி மாறிப் போகிறது. மனைவி, தேநீர் தயாரிக்கும் சில நிமிடங்களில் அவன் கடவுளுடன் பல்லாயிரம் ஆண்டுகள் உரையாடிவிட்டு வருகிறான்.

அப்படியென்றால் வெவ்வேறு உணர்வுத் தளங்களில் காலத்தின் கதி வெவ்வேறாக இருக்க வேண்டும். காலத்துக்கு என்று குறிப்பிட்ட வேகம் எதுவும் இருக்க முடியாது. வெவ்வேறு மன நிலைகளில் காலத்தின் ஓட்டம் வெவ்வேறு விதமாக இயங்குவதாக இருக்க வேண்டும்.

பொதுவான காலம் உண்டா

இது எவ்வாறு சாத்தியம்? காலம் என்பதை நாம் நம் அனைவருக்கும் பொதுவானதான, புறவயமான இருப்புடைய ஒரு விஷயமாகப் பார்க்கிறோம். அது உண்மையா? காலம் அப்படிப்பட்டதா?

இதுகுறித்து, அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். 1687-ல் ஐசக் நியூட்டன் வெளியிட்ட கருத்தின்படி காலமும் வெளியும் புறவயமான இருப்புடைய, அனைவருக்கும் பொதுவான ஒன்று. அதன் அடிப்படையில்தான் நியூட்டனின் இயக்கவிதிகள் மூன்றும் அந்தக் கால வெளியில் இருக்கும் பிரபஞ்சத்தில் இயங்கிவருகின்றன.

ஆனால் 1915-ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வெளியிட்ட பொதுச் சார்பியல் தத்துவம் காலமும் வெளியும் காண்பவனின் உணர்வுநிலை (பிரக்ஞை) சார்ந்த விஷயங்கள் என்று சொன்னது. அதன்படி, காண்பவன் (Observer) நகரும் வேகத்துக்கு ஏற்பக் காலம் குறுகியோ விரிந்தோ மாற்றம் கொள்ளக்கூடியது. ஒளிவேகத்துக்கு ஈடான வேகத்தில் அல்லது அதற்கு மிக அருகில் ஒருவர் நகர்ந்து செல்லும்போது காலம் மிகவும் குறுகிப் போகிறது.

அவரவர் உணர்வுநிலை

அப்படியானதொரு வேகத்தில் முப்பது வயதானவர் ஒருவர் பூமியிலிருந்து கிளம்பி ஒரு வருடம் நீள்வெளியில் சென்றுவிட்டுத் திரும்புகிறார். அவரைப் பொறுத்தவரையில், அவருக்கு வயது முப்பத்து ஒன்று. ஆனால் இங்கே பூமியில் இருப்பவர்களுக்குப் பல ஆண்டுகள் கடந்திருக்கும். இவர் வயதே இருந்த ஒருவருக்கு இப்போது எண்பது வயது ஆகியிருக்க முடியும்!

பிரபஞ்ச அனுபவம் அவரவர் உணர்வுநிலை (பிரக்ஞை) சார்ந்தது. இப்போது அறிவியலில் தோன்றியுள்ள முக்கியமான கருத்துருவமான மனிதார்த்தத் தத்துவத்தை (Anthropic Principle) சற்று எளிமைப்படுத்திச் சொல்வதென்றால், இன்றைக்கு மனிதன் இவ்வாறு இருப்பதால் பிரபஞ்சம் இவ்வாறு இருக்கிறது. அப்படியானால் மனிதன் வேறு விதமாக இருந்தால் பிரபஞ்சமும் வேறு விதமாக இருக்கும். அந்தப் பிரபஞ்சத்தில் காலமும் வெளியும் வேறு விதமாக இயங்கும்.

நாரதரின் காலம்

நம் புராணத்தில் முகவும் சுவாரசியமான கதை ஒன்று உள்ளது. நாரதர் கிருஷ்ணனிடம், ‘கிருஷ்ணா, மாயை என்கிறார்களே, அது என்ன உன் மாயை? ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி விளக்கம் சொல்கிறார்கள். நீ கொஞ்சம் புரியும்படியாகத்தான் சொல்லேன்,' என்று கேட்கிறார்.

‘சரி, கொஞ்சம் நேரம் போகட்டும். சொல்கிறேன்,' என்கிறார் கிருஷ்ணர். ஏதேதோ பேசியபடி இரண்டுபேரும் நடக்கிறார்கள்.

நடுப்பகல் வேளை. வெயில் கொளுத்துகிறது. கிருஷ்ணர் நாரதரிடம், ‘நாரதா, மிகவும் தாகமாக இருகிறது. எங்கேயாவது போய்க் கொஞ்சம் குடிக்க நீர் கொண்டு வாயேன்,' என்கிறார். தூரத்தில் சில குடிசைகள் தெரிகின்றன. ‘இதோ, அங்கே போய்த் தண்ணீர் எடுத்து வருகிறேன்,' என்று சொல்லிவிட்டுப் போகிறார் நாரதர். முதல் குடிசைக் கதவைத் தட்டுகிறார்.

ஒரு இளம்பெண் கதவைத் திறந்துகொண்டு வருகிறாள். கொள்ளை அழகு. காண்போரைக் கவர்ந்து இழுத்துக்கொண்டு விடும் கண்கள். நாரதருக்குக் கிருஷ்ணன் தண்ணீருக்காகக் காத்து நிற்பது மறந்து விடுகிறது. தான் யார் என்பது மறந்துபோய் விடுகிறது. ‘நீ என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?' என்பதுதான் அவர் வாயிலிருந்து வெளிப்பட்ட முதல் சொற்கள்! அவள் நாணத்துடன் தலைகவிழ்ந்து தன் சம்மதத்தைத் தெரிவிக்கிறாள். இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். பல வருடங்கள் போகின்றன.

இருவருக்கும் ஏழெட்டுக் குழந்தைகள் பிறக்கின்றன. அந்தப் பெண்ணுக்குச் சொந்தமான நிலங்களை உழுது, பயிரிட்டு, விவசாயம் பார்த்துக்கொண்டிருந்தார் நாரதர். ஒரு முறை மழை பெய்யத் தொடங்குகிறது. விடாமல் தொடர்ந்து நாட்கணக்கில் பெய்கிறது மழை. எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்குகிறது.

மாடுகள், மரங்கள், குடிசைகள் எல்லாம் அடித்துக்கொண்டு போகின்றன. நாரதர் தன் மனைவியோடும் குழந்தைகளோடும் ஒரு மரத்தின்மேல் ஏறி உட்கார்ந்து கொள்கிறார். அந்த மரமும் வெள்ளத்தின் வீச்சில் வேரோடு பெயர்ந்து போகிறது. நாரதரின் மனைவி தன் கையில் பிடித்திருந்த குழந்தையோடு வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகிறாள். நாரதரின் அருகிலிருந்த குழந்தைகள் ஒவ்வொன்றாக வெள்ளத்தின் போக்கில் போகிறார்கள்.

நிலை கலங்கி, ஒன்றும் செய்ய இயலாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் நாரதர். கடைசியாக நாரதர் தன் கையில் பிடித்திருந்த குழந்தையும் பிடிநழுவி வெள்ளத்தில் காணாமல் போகிறது. அவரைச் சுற்றி தண்ணீர் மேலே ஏறிக் கொண்டிருக்கிறது. இடுப்பளவு, பின் மார்பளவு, பிறகு கழுத்தளவு ஏறுகிறது தண்ணீர். மூக்கருகில் தண்ணீர் வந்தவுடன், ‘தண்ணீர், தண்ணீர்' என்று கத்துகிறார் நாரதர்.

அடுத்த கணம். தண்ணீர் இல்லை. குடிசைகள் இல்லை. எதுவும் இல்லை. வெயிலில் நிற்கிறார் நாரதர். அருகில் கிருஷ்ணர். 'என்ன நாரதா, தாகத்துடன் பத்து நிமிடமாக நின்றுகொண்டிருக்கிறேன். எங்கே தண்ணீர்?' என்று கேட்கிறார் கிருஷ்ணர். நாரதர் ஒன்றும் புரியாமல் விழிக்கிறார். கிருஷ்ணர் சிரிக்கிறார். ‘என்ன நாரதா, மாயை புரிந்ததா?’ என்று கேட்கிறார்.

காலம் சார்ந்த மனம்

கிருஷ்ணர் என்பது உயர்ந்த உணர்நிலையின் தளத்தைக் குறிக்கிறது. நாரதர் என்பது அதற்குக் கீழானதொரு தளம். கால ஓட்டத்தின் கதி, தளத்துக்குத் தளம் மாறுபடுகிறது. மிகப் பழையதொரு கதையில் முனிகுமாரன் ஒருவன் தன் தவ வலிமையால் ‘கண்டசைலம்’ என்னும் மலைக்குள் தான் நிர்மாணித்திருந்த உலகத்தினுள் ஒரு அரசனை அழைத்துப்போகிறான்.

ஒருநாள் அங்கே கழித்துவிட்டு வெளியே வந்தபோது வெளியுலகில் பன்னிரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்துவிட்டிருக்கின்றன. அரசனின் உறவினர் யாவரும் மாண்டு போய்ப் பலகாலம் ஆகிவிட்டிருக்கிறது. பெரும் துக்கத்துள் அரசன் ஆழ்ந்துபோகிறான். காலம் மனத்தைச் சார்ந்தது என்னும் உண்மையை விளக்கி, அவனைத் துக்கத்திலிருந்து மீட்கிறான் முனிகுமாரன்.

இந்த விஷயத்தின் வேறு சில அம்சங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.

(கால விசாரணை தொடரும்)

கட்டுரையாளர்,

தொடர்புக்கு :

sindhukumaran2019@gmail.com

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close