[X] Close

சூபி வழி 20: ஒருபோதும் மறக்காதீர்கள்


20

  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 11:42 am
  • அ+ அ-

-முகமது ஹுசைன் 

தாகமுள்ளவர்களைத் தண்ணீரும்

தேடிக் கொண்டிருக்கிறது

                                        - ஜலாலுதீன் ரூமி

‘ஞானிகளுக்கு எல்லாம் ஞானி’ என்ற கூற்றுக்கு முற்றிலும் பொருத்தமான ஞானி ஹஸன் பஸரீ. ஞானத்தைக் கற்றலின் மூலமோ அனுபவத்தின் வாயிலாகவோ அறியாமல், இறைவனின்மீது கொண்ட நேசத்தால் மட்டும் கண்டடைந்த பெரும் மேதை அவர்.

இன்பம், துன்பம் என்ற படிநிலைகளுக்கு அப்பாற்பட்ட படிநிலையில் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய மாமனிதர் அவர். சரி, தவறு என்னும்  சராசரித் தீர்மானங்களுக்குள் சிக்கி உழலாமல், அவ்விரண்டுக்கும் இடையிலான பாலமாகத் தனது வாழ்வைத் தகவமைத்துக் கொண்டவர் அவர்.

ஓர் அடிமையின் மகனான அவர் மதினா நகரில் 642- ம் ஆண்டு பிறந்தார்.சிறுவயது முதலாக ஆன்மிகத்தில் மிகுந்த தேடல்கொண்டிருந்தார். அவரது தீவிரமான ஈடுபாடு,  மெய்ஞ்ஞானத்தின் ஆழ்நிலைகளுக்கு அவரை இட்டுச்சென்றது. நேர்மையின் உருவமாக இருந்த காரணத்தால், மனத்தில் பட்டதை யாரிடமும் வெளிப்படையாகப் பேசும் துணிவு அவரிடம் எப்போதும் இருந்தது.

“தான் காணும் யாவரும் தன்னைவிட மேலானவர் என்று கருதுவதே உண்மையான பணிவு” என்று தன்னுடைய சீடர்களிடம் எப்போதும் கூறுவார். ஒருநாள் தன்னுடைய சீடர்களுடன் வெளியே சென்றிருந்தபோது ஒருநாய் எதிரில் வந்தது. அப்போது ஒரு சீடர் அவரிடம், “தாங்கள் மேலானவரா? அந்த நாய் மேலானதா?” என்றுகேட்டார்.

“இறைவனின் தண்டனையிலிருந்து நான் விடுதலை அடையும்வரை, என்னைவிட அந்த நாயே மேலானது” என்று கூறினார். மேலும், தன்னுடைய சீடர்களைப் பார்த்து, “நாய் பசித்திருக்கும். பசித்திருத்தல் துறவிகளின் நற்பண்பாகும். துறவிகளைப் போன்று அதற்கென்று தங்குவதற்கு இடம் கிடையாது. துறவிகளைப் போன்று இரவில் சிறிது நேரமே அது தூங்கும்.

துறவிகளைப் போன்று அதற்கென்று உடைமையோ உறவோ கிடையாது. இறைவன் அளிக்கும் சோதனைகளைப் புன்னகையுடன் ஏற்றுக்கொள்ளும் துறவியைப் போன்று, தன்னை அடிக்கும் எசமானரையும் அது புன்னகையுடன் எதிர்கொள்ளும். எனவே, நாய் என்று அதை இழிவாகக் கருதாமல், அதனிடம் இருக்கும் நற்பண்புகளை உங்கள் இயல்பாக மாற்றிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.

தனிமையிலேயே இருங்கள்

மறுமையைக் குறித்து அவருள் மிகுந்திருந்த அச்சத்தின் காரணமாக, சிரிப்பதையே அவர் மறந்திருந்தார். தவறுகளைச் செய்துவிட்டு பின்னர் அதற்காக வருந்தி இறைவனிடம் மன்னிப்பு கோருவதைவிடத் தவறுகளைச் செய்யாது கட்டுப்பாட்டுடனும் மாண்புடனும் வாழ்வதே நன்று என்பதே ஹஸனின் கொள்கை.

தனது வாழ்க்கையையும் இந்தக் கொள்கைப்படியே அமைத்துக்கொண்டார். பிறருக்காக அன்றி தனது உள அமைதிக்காக அவர் தவறுகளற்று வாழ்ந்தார். தெரியாமல் நிகழ்ந்த சிறு தவறுக்கும் மனம்வருந்திப் பல நாட்கள் வாய்விட்டுக் கதறி அழுவது அவரது  வாடிக்கையாக இருந்தது. தனிமையை விரும்பி ஏற்றுக்கொண்டார்.

“ஒருவரின் குறை மற்றொருவருக்குத் தெரிய வந்தால் அதன் காரணமாக நம்பிக்கையிழப்பும் பகைமையும் ஏற்படும். எனவே, இறைவனிடம் உங்கள் குறைகளைச் சொல்லும்போது தனிமையிலேயே இருங்கள்” என்று தன்னுடைய சீடர்களிடம் அது குறித்து விளக்கம் அளித்தார்.

ஒருமுறை இறந்த ஒருவரை அடக்கம் செய்துவிட்டு எல்லாரும் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, இவர் மட்டும் திரும்பிச் செல்லாமல், அங்கேயேஅமர்ந்திருந்து வாய்விட்டுக் கதறி அழுதுகொண்டு இருந்தார். அவரை யாராலும் சமாதானப்படுத்த முடியவில்லை.

அவர் அழுவதைப் பார்த்து,அவருடைய சீடர்களும் அழத் தொடங்கினர். அங்கிருந்த மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கிருந்த முதிய மனிதர் ஒருவர் ஹஸனைப் பிடித்து உலுக்கி அழுவதற்கான காரணத்தைக் கேட்டார்.

  “இந்தப் பிறப்பின் முடிவும் மறுமையின் தொடக்கமும் இந்தப் புதைகுழிதான். உங்களது வாழ்வின் முடிவு இதுவாக இருக்கும்போது இதுகாறும் நீங்கள் எதைக் கண்டு பெருமையடைந்தீர்கள்? மறுமையின் தொடக்கமும் இந்தக் குழிதான் எனும்போது, நீங்கள் எதைக்கண்டு அச்சமற்றவராக வாழ்ந்தீர்கள்?” என்று அந்த முதியவரிடம் ஹஸன் திருப்பிக் கேட்டார். அதைக் கேட்டுஅங்கிருந்த மக்கள் அனைவரும் வாய்விட்டு அழத் தொடங்கினர்.

சிறிது நேரம் கழித்து அங்கிருந்த மக்களை நோக்கி, “செம்மறியாடுகூட, இடையனின் சத்தம் கேட்டதும், மேய்வதை விட்டுவிட்டு, அவனது திசை நோக்கிக் குதித்து ஓடும். ஆனால், மனிதனோ தனது மன இச்சைக்கு அடிபணிந்து, இறைவனையே மறக்கும் நிலைக்குச் செல்கிறான். மனத்தின் இச்சையை அகற்றாவிட்டால் இறைவனைக் காண முடியாது என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்” என்று கூறினார்.

துறவியாக இருந்தபோதும் பல்வேறு மார்க்கப் போர்களில் ஹசன் பங்கேற்றுள்ளார். எப்போதும் தூய ஆடைகளையே அவர் அணிவார். அவருள் நிறைந்திருக்கும் ஞானத்தால், அவரது அழகிய முகம் எப்போதும் ஒளிர்ந்தவிதமாக இருக்கும்.

இனிய குரலுக்குச் சொந்தக்காரர். அவர் ஆற்றும் உரை, கேட்பவரை மெய்மறக்கச் செய்யும், ஞானக்கடலில் நீந்தச்செய்யும், கடவுளுள் கரையச்செய்யும். மக்களை ஆன்மிகப் பாதையில் மடைமாற்றிவிட அவரது பார்வை ஒன்றே போதுமானதாக இருந்தது.

சூபி உலகுக்கு ராபியா பஸரீ போன்ற எண்ணற்ற ஞானிகளை அவரது சொல்லும் வாழ்வும் அளித்துள்ளது. திருக்குர்ஆனுக்கு அவர் எழுதியுள்ள விளக்கவுரை, இன்றும் ஆகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.  அவர்அளவுக்குப் பெயரும் புகழும் கொண்ட ஞானி எவரும், இந்த உலகில் இதுகாறும் பிறக்கவில்லை.

கி.பி. 728- ல் இவ்வுலகைவிட்டு அவர் மறைந்தபோதும், அவருடைய சீடர்களின் மூலமாக அவரது வாழ்வு இன்றும் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.

(வாழ்வு உண்டு)

கட்டுரையாளர்,

தொடர்புக்கு :

mohamed.hushain@thehindutamil.co.in

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close