[X] Close

விவிலிய மாந்தர்கள்: அழகும் அறிவும் ஆயுதம்


  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 15:32 pm
  • அ+ அ-

-ஜோ. ஆரோக்யா

யூதேயா என்று அழைக்கப்பட்ட இஸ்ரவேல் தேசத்தை பெரும் வல்லரசுகள் பலமுறை வென்று, அங்கு வாழ்ந்த யூத மக்களை அடிமைகள்போல் நடத்தியிருக்கின்றன. அவர்களில் அசீரியர், பாபிலோனியர் முக்கியமானவர்கள். பாபிலோனியப் பேரரசனாகிய நெபுகாத்நேச்சார் தனது படைகளை அனுப்பி யூதேயாவைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டபோது, யூத மக்களின் தலைவர்களும் மூப்பர்களும் படைகளில் இருந்த இளைஞர்களும் பயந்து நடுங்கினார்கள்.

அதற்குக் காரணமும் இருந்தது. எதிரிகள், தங்கள் மீது போரைத் திணித்தபோதெல்லாம்,  தளபதிபோல் நின்று போரில் வென்றளித்த கடவுளாகிய பரலோகத் தந்தை மீது வைத்திருந்த நம்பிக்கையில் அவர்கள் திடமாக இல்லை. அத்துடன் சர்வாதிகாரப் பேரரசன் நெபுகாத்நேச்சாரின் படைத் தளபதியாகிய ஒலோபெரின் என்பவனின் போர் வெறி அவர்களைக் குலைநடுங்க வைத்தது. தனது பெரும் படையுடன், அவன் யூதேயா நோக்கி வரும் வழியெங்கும் பல பெரிய தேசங்களை எளிதில் வென்றான். பல நகரங்களைக் கொள்ளையடித்து மீண்டும் அவற்றை எழுப்ப முடியாதவாறு அழித்துப்போட்டான். ஒலோபெரின் வெல்ல முடியாதவன் என்று யூதர்கள் நினைத்தார்கள். மலைப்பகுதிகளின் தேசமான யூதேயாவை ஒலோபெரின் சுற்றிவளைத்துக்கொண்டபோது மக்கள் மேலிருந்து கீழே இறங்கிச் செல்ல முடியவில்லை. வாழ்வோ சாவோ இனி எதிரியை எதிர்த்துப் போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை இஸ்ரவேலர்களுக்கு ஏற்பட்டது. எனவே, போருக்குத் தயாரானார்கள்.

தண்ணீரைத் தடுத்த தளபதி

தன்னை எதிர்கொள்ள இஸ்ரவேலர்கள் தயாராகிவிட்டார்கள் என்ற தகவல் தளபதி ஒலோபெரினுக்கு வந்து சேர்ந்தது. தன்னிடம் நிர்க்கதியாகச் சரணடைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்த அவனுக்குக் கோபம் வந்தது. அந்த வேளையில் இஸ்ரவேலர்கள் தரப்பிலிருந்து அக்கியோர் என்ப‌வ‌ர் அவ‌னுடன் சமாதானத் தூதுவராக வந்தார். அவர் ஒலோபெரினிடம், “இஸ்ர‌வேலர்கள் க‌ட‌வுளின் ம‌க்க‌ள். அவ‌ர்க‌ளைப் போரால் ஒருபோதும் அழிக்கமுடியாது.” என்றார். இதைக் கேட்டுக் கோபம் கொண்ட ஒலோபெரின்,  அக்கியோரைத் தன் முன்னால் நிற்காமல் ஓடிவிடும்படி விரட்டிவிட்டான். அதன்பின்னர், தனது படைப்பிரிவுகளின் தலைவர்களை அழைத்த ஒலோபெரின், யூதேயாவுக்குள் நுழைந்து இஸ்ரவேலர்களை அழித்தொழிக்கப் படைகளைப் பள்ளத்தாக்கின் முகாமிலிருந்து மலைதேசம் நோக்கி நடத்திச் செல்லுங்கள் கட்டளையிட்டான். ஆனால், ஆக்கியோர் வந்து எச்சரித்துச் சென்றது. படைத்தலைவர்களின் மனதில் அச்சத்தை விதைத்திருந்தது. அவர்கள் கூட்டாகத் தளபதி ஒலோபெரினிடம் வந்தார்கள். “இஸ்ரவேலர்களை வாளின் முனையில் வீழ்த்துவதைவிட மிக எளிதாக அவர்களைச் சரணடைய வைக்க ஒரு திட்டம் இருக்கிறது. இஸ்ர‌வேல் தேசத்துக்குள் செல்லும் எல்லா நீரூற்றுக்களையும் நாம் கைப்ப‌ற்றிவிடுவோம். குடிக்கத் த‌ண்ணீர் இல்லாவிட்டால் தொண்டை வறண்டு இறந்துபோவதைவிட உயிரைக் காத்துக்கொள்வதற்காக வேறு வழியின்றி  நம்மிடம் மண்டியிடுவார்கள்” என்று கூறினர். தளபதிக்கும் இந்தத் தந்திரம் பிடித்துப்போனது. நீரூற்றுக்கள் அனைத்தையும் மடைமாற்றினார்கள். இதைச் சற்றும் எதிர்பார்க்காத இஸ்ரவேலர்கள் தண்ணீர் இன்றி வாடினார்கள்.

மக்களின் முடிவும்  கைம்பெண்ணின் துணிவும்

யூதேயா முற்றுகையிடப்பட்டு 34 நாள்கள் ஓடி விட்டன. குடிநீர் இல்லாமல் குழந்தைகள், முதியோர், பெண்கள், இளைஞர்கள் எனத் தாகத்தால் மயக்கமடைந்து நகரின் தெருக்களிலும் வாயில்களிலும் விழுந்து கிடந்தார்கள். இந்தச் சமயத்தில் இஸ்ரவேலர்களின் மூப்பரான ஊசியா “இன்னும் ஐந்து நாட்கள் மட்டும் காத்திருப்போம். அதற்குள் நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்கு இரக்கம் காட்டுவார். கடவுளின் உதவி கிடைக்காவிட்டால் நாம் ஒலோபெரின் படைகளிடம் சரணடைந்துவிடலாம்” என்று கூறினார். இதை ஜூடித் எனும் கைம்பெண் கேள்விப்பட்டார்.

இளவயதிலேயே தன் கணவரான மனாசே என்பவரை இழந்தவர் அவர். பெரும் செல்வந்தரான ஜூடித், கணவரின் இறப்புக்குப்பின்னர், ஊரார் போற்ற அடக்கத்துடன் வாழ்ந்துவந்தார். அன்றைய சமுதாயச் சூழ்நிலையில் பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே இருந்தனர். அதிலும் கைம்பெண்கள் மேலும் ஒடுக்கப்பட்டார்கள். ஒலோ பெரின் படைகளின் முற்றுகையால் தம் தேசத்தின் மக்கள் வாடுவதைக் கண்ட ஜூடித், துணிவுடன் இஸ்ரவேல் தலைவர்களை அழைத்தார். கடவுளாகிய ஆண்டவரின் வல்லமை குறித்து ஐயுற்றவர்கள் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டினார். மேலும், ‘கடவுளின் உதவியோடு நம் மக்களுக்கு நான் விடுதலை பெற்றுத் தருவேன்’ என்று கூறினார். ஜூடித்தைத் தலைவர்கள் அங்கீகரித்தனர்.

தந்திரத்துக்குப் பதிலடியாகத் தந்திரம்

ஜூடித் தம் கைம்பெண் கோலத் தைக் களைந்தார்; அழகிய மென்பட்டு ஆடை அணிந்து விலை உயர்ந்த நகைகளால் அழகுபடுத்திக் கொண்டார். கவர்ந்திழுக்கும் ந‌றும‌ண‌த்தைப் பூசிக்கொண்டு த‌ன‌து ப‌ணிப்பெண்ணையும் அழைத்துக் கொண்டு எதிரிக‌ளின் கூடார‌ம் அமைக்கப்பட்டிருந்த பள்ளத்தாக்கை நோக்கிப் போனார். ஜூடித்தைக் கண்ட ஒலோபெரினின் மெய்க் காவலர்கள் அவரைத் தங்கள் தளபதியின் கூடாரத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஜூடித்தின் அழகைக் கண்ட மாத்திரத்தில் மதிமயங்கிப்போனான் வெற்றிகளைக் குவித்த அந்தத் தளபதி. ஜூடித்தை வைத்த கண் வாங்காமல் பார்த்த அவன், “ நீங்கள் யார்?” என்றான். “ நான் உங்கள் வெற்றிகளையும் வீரத்தை அறிந்து வியந்தவள். உங்களுக்கு உதவ வந்திருக்கிறேன். இஸ்ரவேலர்கள் தங்கள் கடவுளிடம் நம்பிக்கை இழந்துவிட்டனர். அவர் களை நீங்கள் தாக்கச் சரியான தருணம் எதுவென்பதை அறிந்து சொல்ல வந்திருக்கிறேன்.” என்றார்.

இதைக் கேட்டு ஜூடித்தை நம்பிய அவன், எதிரிகளிடமிருந்து நமக்கொரு நண்பனா என்பதைக்கூட யோசிக்காமல், அவளுக்கும் தனது படைப்பிரிவுத் தலைவர்களுக்கும் அவன் விருந்தளித்தான். விருந்து முடிந்து படைப்பிரிவுத் தலைவர்கள் அனைவரும் சென்ற பிறகும் ஜூடித் ஒலோபெரினுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக மதுவைப் பரிமாறிக்கொண்டே இருந்தார். இறுதியில் போதையின் பிடியில் தன்னிலை மறந்து தவழத் தொடங்கிய அவனை மஞ்சத்துக்கு இழுத்துச் சென்றார். அத்தனை போதையிலும் ஜூடித்தை தன் அருகில் அழைத்தான். அவனால் இனி நகரமுடியாது என்பதை அறிந்த ஜூடித், தூணியில் மாட்டப்பட்டிருந்த அவனது வாளை எடுத்தார். அவனது தலைமுடியைத் தன் கைகளால் இறுகப் பிடித்துக்கொண்டு, தலையைத் தனியே கொய்து எடுத்தார். அக்கணமே அங்கிருந்து தனது பணிப்பெண்ணுடன் மலையேறி நகரத்துக்கு வந்தார் ஜூடித். தலைவர்களும் மூப்பர்களும் அவளை எதிர்கொண்டு வந்தனர். ஜூடித் தான் எடுத்து வந்திருந்த பையிலிருந்து ஒலோபெரினின் தலையை வெளியே எடுத்துக் காண்பித்தார். “தளபதியை இழந்த படையை, இனி நாம் வெல்வது எளிது.” என்றார்.

ஜூடித்தின் திட்டத்தை ஏற்றுக்கொண்ட இஸ்ரவேலர்கள் பாபிலோனிய, அசீரிய கூட்டுப்படையைச் சிதறடித்து வெற்றி கண்டார்கள். ஜூடித்தின் துணிவையும் நாட்டுக்காக அவர் செய்த தியாகத்தையும் போற்றும் வகையில் புகழ் பாக்களை எழுதி இஸ்ரவேலர்கள் கீதம் இசைத்தார்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close