சிங்கபெருமாள் கோவிலில் உள்ள பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவிலில் நேற்று நடைபெற்ற பாடலாத்திரி நரசிம்மப் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்ற திரளான பக்தர்கள். | படம்: எம்.முத்துகணேஷ் |

செங்கல்பட்டு/ஆவடி: செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள் கோவிலில் உள்ள பாடலாத்திரி நரசிம்மப் பெருமாள் கோயிலில் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.

இந்த கோயிலில் மலையைக் குடைந்து, ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட பாடலாத்திரி பெருமாள், முக்கண்ணோடு அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு வைகாசிப் பெருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தினமும் பல்வேறு வாகனத்தில் நரசிம்ம பெருமாள் வீதியுலா வந்தார்.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க, அகோபிலவள்ளி தாயார் சமேதமாக நரசிம்மர் தேரில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். வீதியுலாவைத் தொடர்ந்து தேர் மீண்டும் நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன் மற்றும் பணியாளர்கள், பட்டாச்சாரியர்கள் மற்றும் உற்சவ உபயதாரர்கள் செய்திருந்தனர்.

மாடம்பாக்கம்: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள பழமையான தேனுகாம்பாள் உடனுறை தேனுபுரீஸ்வரர் கோயிலில் கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் ‘சிவ சிவ’ பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் உப்பு, மிளகு, வாழைப்பழத்தை தேர் மீது வீசி நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் க.விஜயன் மற்றும் மாடம்பாக்கம், நூத்தஞ்சேரி, பதுவஞ்சேரி கிராம மக்கள் செய்திருந்தனர்.

திருமுல்லைவாயில்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் உள்ள பழமையான கொடியிடைநாயகி சமேத மாசிலாமணீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், சிறப்பு அலங்காரத்தில் மாசிலாமணீஸ்வரர், கொடியிடைநாயகியுடன் எழுந்தருளினார். ஆவடி எம்எல்ஏ சா.மு.நாசர், கோயில் பரம்பரை அறங்காவலர் பாபு என்கிற பொன்னம்பலம், செயல் அலுவலர் பிரபாகரன் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

இதில், திருமுல்லைவாயில், ஆவடி, அம்பத்தூர், பாடி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இக்கோயிலில் வரும் 22-ம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.