[X] Close

சர்வதேச யோகா தினம் இன்று!  யோகம் தரும் யோகா!  


yoga-day

  • வி.ராம்ஜி
  • Posted: 21 Jun, 2018 06:14 am
  • அ+ அ-

  ‘கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா?‘ என்று சொல்லுவதைக் கேட்டிருக்கிறோம்தானே. ஆனால், அதன்படி கேட்டு நடப்பதே இல்லை. பரபரவென ஓடிக்கொண்டே இருக்கிறோம். நல்லதோகெட்டதோ, சரியோ தப்போ... இயங்கிக்கொண்டே இருக்கிறோம். செயலில் தெளிவு வேண்டுமெனில், அதற்கு முன்னதாக சும்மா இரு என்றே முனிவர்களும் தபஸ்விகளும் சொல்லிவைத்திருக்கிறார்கள். 
  அதுமட்டுமா? உடலின் எல்லா பாகங்களுக்கும் சரிசம வேலைகளைக் கொடுக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.  நாம் இயங்குவதற்கு உடலும் முக்கியம். மனமும் அவசியம். இந்த உடலும் மனமும் நேர்க்கோட்டில் பயணித்தால்தான் எண்ணமும் அழகாகும். செயலும் சிறப்பாகும்! 
   இதை நமக்கு வழங்குவதே யோகா. அதனால்தான் யோகா பயிற்சியை மேற்கொள்ளச் சொல்லி, வலியுறுத்தி, வழிவகைகளை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள் முன்னோர்கள். 
  யோக சூத்திரத்தை நமக்கு அருளிய பதஞ்சலி முனிவரை மனதில் நினைத்து, வணங்கி இந்த யோகா தினத்தில் இருந்தேனும் அந்தப் பயிற்சியை மேற்கொள்வோம். 
  
பயிற்சிக்கு முன் கவனிக்கவும்...

* யோகா பயிற்சிக்கு நல்ல காற்றோட்டமுள்ள இடமாக தேர்ந்தெடுக்க வேண்டும். 
* ஆசனம் செய்யும் சமயம், கூடிய வரை சூரிய வெப்பம் இல்லாமலிருப்பது நல்லது. 
* அதிகாலை நேரம் அல்லது சூரியன் மறைந்த பிறகு பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. 
* குறிப்பிட்ட நேரத்தில் அன்றாடம் பயிற்சி செய்ய வேண்டும்.
* காலைக் கடன்களை முடித்த பின்பு குளித்துவிட்டு வெறும் வயிற்றுடன் பயிற்சியை செய்ய வேண்டும். தண்ணீர் வேண்டுமெனில் அருந்திக் கொள்ளலாம். 
* காலை அல்லது மாலை நேரத்தில் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை பயிற்சி செய்வது போதுமானது. மாலை நேரத்தில் பயிற்சி செய்வதென்றால் சாப்பிட்ட பின்பு 3 மணி நேரத்திற்கு பின்பு செய்ய வேண்டும்.
* நல்ல கனமான விரிப்பு, உடலை அழுத்தாமல் இருக்க வேண்டும். ஆண்கள் இடுப்பில் மட்டுமே. குறைவான அதாவது, அரைக்கால் சட்டை அல்லது லங்கோடு போன்றவற்றை அணிந்து கொள்ளலாம். பெண்கள் பைஜாமா, சுடிதார் போன்ற ஆடைகளை அணிந்து யோகாசனம் செய்யலாம். ஆடைகள் உடலை இறுக்காத வண்ணம் இருக்க வேண்டும்.
* நோய்கள் இருக்கும் போது (வயிற்று வலி, கால்வலி, தலைவலி) ஆசனம் செய்யக் கூடாது. 
* பயிற்சி முடிந்த உடனே உணவு அல்லது சிற்றுண்டி உண்ணக் கூடாது. நீர் அருந்துவதாக இருந்தால் கூட கால் மணி நேரம் கழித்தே அருந்த வேண்டும்.
* பயிற்சியை தொடங்குவதற்கு முன்போ, பின்போ கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடக் கூடாது.
* ஆசனப் பயிற்சியின் போது சுவாசத்தை இழுத்து விடுவது பயிற்சியின் ஓர் அம்சமாக இருந்தாலொழிய சுவாசம் விடுவது வழக்கம் போலவே இருக்க வேண்டும்.
* பயிற்சியில் ஈடுபடும்போது ஒவ்வொரு இயக்கமும் முறையாக சரியாக இருக்குமாறு கவனிக்க வேண்டும். அவசரம் கூடாது. மிகவும் நிதானமாக செயல்முறையில் ஈடுபட வேண்டும்.
* ஆசனப் பயிற்சி இயக்கம் ஒரு ஒழுங்கு முறையுடன் அமைந்து நளினமாக, அழகாக அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
* பயிற்சி செய்வதற்கு சிரமமாக இருந்தால், சற்று ஓய்வு எடுத்து மிகவும் நிதானமாக முயற்சி செய்து பார்க்க வேண்டும். பிடிவாதமாக உடலை வருந்திக் கொள்ளக் கூடாது.
* ஆசனப் பயிற்சியில் ஈடுபடும் தொடக்க நாளில் சற்று உடலுக்கு சிரமமாக இருக்கக் கூடும். வலி முதலிய வேதனைகள் தோன்றக்கூடும். அது தற்காலிக நிலைதான். பழகிய பிறகு அந்த தொந்தரவுகள் தானாக அகன்றுவிடும். வலி இருந்தாலும் பயிற்சியை நிறுத்தி விடாமல் வலியை தாங்கிக் கொண்டு செய்ய வேண்டும் பின்பு சரியாகிவிடும் என்கிறார்கள் உலக சமுதாய சேவா சங்கத்தின் மனவளக்கலை அமைப்பினர். 
  மனவளக் கலை என்பது வேதாத்திரி மகரிஷி அமைத்துக் கொடுத்த எளிய, இனிய, உன்னத, உயிர்ப்பான பயிற்சி. 
  யோகா நாளில்... பயிற்சியில் ஈடுபடுவோம். பயனுள்ள வாழ்க்கையை வாழ்வோம். 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close