[X] Close

முல்லா யார்?: நாம்தாம்


  • kamadenu
  • Posted: 20 Jun, 2019 10:36 am
  • அ+ அ-

சுய ஆய்வுக்காக மனத்தைத் தயார்படுத்தும் பயிற்சிக்காக, சூபி ஞானிகளால் தயாரிக்கப்பட்டவையே முல்லா கதைகள். தினசரி வாழ்விலிருந்து ஒரு சம்பவத்தைத் துண்டித்து எடுத்து நம் முன் போட்டு, அதில் நம் கவனத்தைக் குவியவைத்து நம்மையே கேள்வி கேட்க, சுயவிமர்சனம் செய்துகொள்ள உருவாக்கப்பட்டவையே அந்தக் கதைகள்.

முல்லா நஸ்ருதீன்,  சூபி ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதாப்பாத்திரம்.  சூபிகளுக்கு ‘இதயத்தின் ஒற்றர்கள்’, ‘மனத்தின் இயக்கங்களை வேவு பார்ப்பவர்கள்’ என்றும் ஒரு பொருளுண்டு.

இதயத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அரபிச் சொல் ‘கல்பு’. சூபி மொழியில் கல்பு என்ற வார்த்தை ‘தலைகீழாகப் புரட்டுவது’, ‘சாரத்தை எடுப்பது’, ‘மாவைப் பதமாகச் சுட்டு ரொட்டியாக்குவது’ என்ற பல உள்ளர்த்தங்களைக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் மனதை ஆராயப் பயன்படுத்துவது குறித்து சூசகமாகச் சொல்லும் அர்த்தமுடைய சொற்களாகும்.

ஆர்வக் குறுகுறுப்பு அடங்காமல் முல்லா யார்? அவர் எங்கு, எப்போது வாழ்ந்தார்? முல்லா ஒரு சூபியா? அவருடைய போதனைகளில் மதிப்பு வைக்கலாமா என்பது குறித்து கட்சி கட்டிக்கொண்டு பெரிய விவாதமே நடந்திருக்கிறது.

அடையாளத்தை விட்டுச் செல்லாதவர்கள்

முல்லாவின் மூலத்தோற்றத்தைக் கண்டறிய ஆசைப்படுபவர்களுக்கு, ஒரு சூபி ஞானியின் பதில்- ‘ஒரு சிலந்தியின் கால்களில் மையைத் தடவி, அதை ஊர்ந்துபோக விடுங்கள். அதனால் உருவாகும் கால்தட வரைபடம் முல்லாவைப் பற்றி சரியான சேதியையோ அவரைப் பற்றி வேறு சேதிகளையோ காட்டும்’. சூபிகள் தங்களின் மரபுப்படி தங்கள் செய்திகளை மட்டும் விட்டுச் செல்வதில் பிரியப்பட்டிருக்கின்றனர். பூமியில் தனது மற்ற அடையாளங்களைக் கொடுத்துவிட்டுப் போவதில் ஆர்வமற்று இருந்திருக்கின்றனர்.

வெளியே ஒட்டுப்போட்டும், உள்ளே அழகான விருட்சங்களின், மலர்களின் வேலைப்பாடுகளுடன் நெய்த கம்பளி அங்கியை அணிந்துகொண்டும் நாடோடியாகச் சுற்றும் முல்லாவின் நாட்டுப்புற அம்சம் எல்லாரையும் ஈர்க்கும். காலம் காலமாக அவருடைய கதைகளை பல்வேறு நாக்குகள் பரப்பிக்கொண்டிருக்கின்றன.

சூபிகளின் நடைமுறைச் செயல்பாடுகள், நம் பொட்டில் தட்டி நமது புலன்களை, சிந்தனைகளை ஆக்கிரமித்து, அலைக்கழித்து நம்மை சுவாதீனத்துக்குக் கொண்டுவர முற்படுபவை. இதற்கு உதாரணமாக சூபி மரபில் ஒரு கதை சொல்வார்கள்.

மர உச்சியிலிருந்து குரங்கு ஒன்று, சூபியின் மீது தேங்காயை எறிந்தது. கால் மீது பலமாக விழுந்த தேங்காயை அந்த சூபி எடுத்தார். அதிலுள்ள தண்ணீரைக் குடித்தார். பருப்பைத் தின்றார். அதன் சிரட்டையைக் குடைந்து சீராக்கி ஒரு குவளையை உண்டாக்கினார்.

சூபிகளின் வாழ்வியல் செய்திகள் ஒரு சமனை, இசைவை இலக்காகக் கொண்டவை. சூபி வாழ்க்கை முறை உள்ளுணர்வு, சிந்தனை, சொல், செயல்களுக்கிடையில் சமனை வேண்டுபவை. மனத்தின் செயல்பாடுகளை மேம்பட்டவையாகக் கருதி, உடலின் தேவைகளை சூபிகளின் வாழ்வு ஒடுக்கச் சொல்வதில்லை.

பரவசமான ஆன்மிக அனுபூதி நிலையிலேயே திளைத்துக்கொண்டிருக்காமல், உலகியல் வாழ்க்கையிலும் கால் பதிக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்பவை சூபிகளின் செயல்கள்.

‘மேலிருப்பவற்றுக்கு உள்ள அதே மதிப்புதான் கீழிருப்பவற்றுக்கும்’ என்று இம்மை, மறுமை விஷயம் வரும்போது உலகியல் வாழ்க்கையிலும் சூபி மரபில் வலியுறுத்திச் சொல்வார்கள். இஸ்லாத்தின் உயிரோட்டமுள்ள உள்அர்த்தங்களைச் சுமந்து செல்லும் தூதுவர்களே சூபி ஞானிகள்.

அர்த்தத் தளங்களைக் கொண்ட திருக்குர்ஆன்

சூபிகளைப் பொறுத்தவரை திருக்குர்ஆனின் இறைவசனங்கள் நேரடியான, எளிமையான, ஒரு பொருள் அர்த்தத்தைத் தருவன அல்ல. அவரவர் பக்குவத்தைப் பொறுத்து நாம் பல நிலைகளில் வியாக்கியானப்படுத்திக் கொள்ள இயல்வதான செறிவான அர்த்தத் தளங்களைக்கொண்டது என்பார்கள் சூபிகள்.

இதன் தொடர்ச்சியாக, இஸ்லாம் ஒரு பழைய கெட்டித்தட்டிப் போன கற்கால மதம் என்று இன்று எழும் அவதூறுகளுக்குப் பதிலாக, நவீன காலத் தேவைகளுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் அருளப்பட்ட இறைவசனங்களிலிருந்து புதுப்புது வியாக்கியானங்களைப் பெற்றுக்கொள்வதற்கு இஜ்திகாத் முறை இருக்கிறதென்று இஸ்லாமிய மார்க்க வல்லுநர்கள் பேசிவருவதை இந்த இடத்தில் மனங்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒருவர் நகைச்சுவையைத் தானே உருவாக்கிச் சிரித்துக்கொண்டிருக்க முடியாது. சிரிப்பைப் பகிர்ந்துகொள்ள, பற்ற வைக்கக்கூட ஒருவர் தேவை. அந்தத் தன்மையைக் கொண்டவைதான் முல்லா கதைகள்.

முல்லாவைக் காரியக்காரராக, கர்வியாக, ஞானியாக, கருமியாக, அசடராக, திருடராக, நீதிபதியாக, தேசத்தைக் காக்க வாளெடுக்கும் வீரர்கள் மத்தியில் புல்தடுக்கி பயில்வானாக என்று பல வேடங்களில் சந்திக்கிறோம்.

முல்லா பங்கேற்ற கதாபாத்திரங்கள் எல்லாமே நம் வாழ்க்கையில் சந்தித்தவைதான். நாமும் முல்லா மாதிரியே ஏதோவதொரு தருணத்தில் உணர்ந்திருக்கிறோம், செயலாற்றியிருக்கிறோம். இந்தப் பொதுத்தன்மைதான் மனத்தடைகள் அற்று முல்லாவிடம் நம்மை ஆசுவாசமாக உணரச் செய்கிறது.

நவீன யுகத்தில் முல்லாவை நாம் அடையாளம் கண்டுகொள்ள சிரமப்பட வேண்டியதில்லை. முல்லாவிடம் வயதாகாத ஒரு கழுதைகூட இருக்கும். கழுதையில்லாவிட்டாலும் முல்லாவே பேச்சின் நடுவே திடீரென்று கழுதை மாதிரி கனைக்கக்கூடும்.

(’என்றார் முல்லா’ நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரையின் சுருக்கம், ’என்றார் முல்லா’ முல்லா நஸ்ருத்தீன் கதைகள், தமிழில்: சஃபி, வெளியீடு: உயிர்மை பதிப்பகம், தொடர்புக்கு : 044- 48586727)

- சஃபி

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close