[X] Close

உட்பொருள் அறிவோம் 19: தசாவதாரக் கோட்பாடு சொல்வது என்ன?


19

  • kamadenu
  • Posted: 13 Jun, 2019 11:21 am
  • அ+ அ-

-சிந்துகுமாரன்

மேற்கத்திய விஞ்ஞானம் நம் மனங்களில் உலகம் பற்றிய சித்திரத்தை உருவாக்கியிருக்கிறது. நம் பள்ளிகளில் கல்வித் திட்டத்தின் அங்கமாக, பாடமாக அது போதிக்கப்படுகிறது. ஆனால், நம் கலாச்சாரத்துக்கே உரித்தான விஷயங்கள் இன்று வெறும் (மூட)நம்பிக்கைகளாக ஆகிவிட்ட அவலமான நிலை நம்மைச் சுற்றிலும் நிலவிவருகிறது.

மனிதப் பிரக்ஞை பற்றிய நம் கலாச்சாரத்தின் ஆழமான கண்டுபிடிப்புகள் தம் உண்மையான பொருளிழந்துபோய் வெறும் வழிபாட்டு முறைகளெனக் கொள்ளப்பட்டு வருகின்றன. நம் மூதாதையர்கள் தம் பிரக்ஞையின் ஆழங்களுக்குள் ஆழ்ந்து சென்று கண்டுபிடித்தவை ஆழமும் அர்த்தமும் நிறைந்தவை.

மேற்கத்திய கலாச்சாரம் நிறுவியுள்ள மனம் புறவுலகம் சார்ந்தது. வடிவியல் (Geometry) பிரபஞ்சத்தை அளக்க முற்பட்டது. அதன் பௌதிக அமைப்பை அளக்கும் பொருட்டுப் பல அலகு களை உருவாக்கியது. பிரபஞ்சத்தின் அமைப்பு, அதன் வயது, விரிவு போன்றவற்றை அது ஆராய்ந்தது.

ஆசியக் கண்டம் அகத்தின் ஆழங்களில் தன் தேடலை ஊடுருவ விட்டது. அது அளக்க முடியாதது என்பதை அது உணர்ந்துகொண்டது. இந்தத் தன்மையைத் தெளிவாக விளக்கியது திருமந்திரம்.

அடிமுடி காண்பார் அயன் மால் இருவர்

படி கண்டிலர் மீண்டும் பார்மிசை ஏகி

அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல

முடி கண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே

புற அறிவு சார்ந்த மனச்சுயத்தின் செயல்பாடுதான் அயன் - பிரும்மா. தான் அளந்து கண்டுவிட்டதாக மனித மனம் சொல்லும் உண்மையற்ற நிலையை இந்தப் பாடல் வெளிக்காட்டுகிறது. புறத்துக்கு ஆதாரமாக இருப்பது அகம் என்பது நம் கண்டுபிடிப்பு. அணுப்பொருள் இயக்கம் குறித்த தேடல் (subatomic physics) இந்த உண்மையை அறிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறது.

இதுபோல் பிரபஞ்சத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்த பல உண்மைகளை நம் கலாச்சாரம் பிரித்துக் காட்டியிருக்கிறது.

‘பரிணாம வளர்ச்சி'க் கோட்பாடு (Theory of Organic Evolution), மேற்கத்திய மனம் உலகில் உயிரினங்களின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்த இயக்கம் பற்றி நிறுவியுள்ள கருத்து. இதையும் நம் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் ‘தசாவதாரம்’ என்னும் கருத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

மேற்கத்திய விஞ்ஞானத்தின் பார்வையில், பூமியில் உயிர் தோன்றி, கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல்களுக்கு உட்பட்டு, பல உயிரினங்கள் உருவான பிறகே பிரக்ஞை தோன்றியது என்று சொல்கிறது. ஒரு செல் உயிரினங்கள், நீரில் வாழும் உயிரினங்கள், நிலத்திலும் நீரிலும் வாழ்பவை, ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள், எனப் பல கட்டங்களுக்கு அப்பால் மனிதன் என்னும் இனம் தோன்றி, அதன் பிறகுதான் பிரக்ஞை தோற்றம் கொண்டது என்கிறது விஞ்ஞானம்.

ஆனால், பரிணாமம் என்பதே பிரக்ஞையின் படிப்படியான வெளிப்படுதல்தான் என்கிறது நம் மெய்ஞ்ஞானம். தசாவதாரம்தான் பிரக்ஞையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றியதான நம் பரிணாமக் கோட்பாடு.

இதன்படி பிரக்ஞை என்பது காலத் துக்கு அப்பாற்பட்டது; முதலும் முடிவும் அற்றது; அநாதியானது. இந்தப் பிரபஞ்சத்திற்கே ஆதார மானது. பிரபஞ்சம் அழிந்த பின்பும் தான் அழியாமல் நிற்கக்கூடியது.

பரிணாமம் காலத்தின் ஓட்டத்தில் நிகழ்வது. அதனால் பரிணாமம் என்னும் இயக்கம் தொடங்குவதற்கு முன்பேயே பிரக்ஞை காலமற்று இருந்து வந்திருக்கிறது. பிரக்ஞைதான் உலகத்தில் படிப்படியாகத் தான் வெளிப்படுவதற்கு உகந்தவாறு பரிணாமத்தையே தோற்று வித்திருக்கிறது. இந்த ஆழமான, அற்புதமான உண்மையைத்தான் தசாவதாரம் வெளிக்காட்டுகிறது.

இப்போது இந்த விஷயத்தை இன்னும் விரிவாகப் பார்ப்போம். தசாவதாரங்கள் என்னென்ன?

1. மச்சாவதாரம் (மீன்)

2. கூர்மாவதாரம் (ஆமை)

3. வராகவதாரம் (காட்டுப் பன்றி)

4. நரசிம்மாவதாரம் (மனித-மிருகம்)

5. வாமனாவதாரம் (சிறிய மனிதன் - தனக்குள்ளே அனைத்தையும் அடக்கிவிடும் திரிவிக்கிரமாவதாரத்தையும் உள்ளடக்கியது)

6. பரசுராமாவதாரம் (உக்கிரமான மனிதன்)

7. ராமாவதாரம் (புறவயமான தர்மத்தின், அதாவது சமூகத்தின் கட்டுக்கோப்புக்குள் இயங்கும் மனிதன்)

8. பலராமாவதாரம் (விவசாயத்தைக் கண்டுபிடித்த மனிதன்)

9. கிருஷ்ணாவதாரம் (புறதர்மத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு அகவயமான தர்மத்தின் இயக்கத்தில் நிலை கொண்ட மனிதன்)

(பலராமாவதாரத்தை விட்டுவிட்டு அதற்குப் பதிலாகப் புத்தரை ஒன்பதாவது அவதாரம் என்று கொள்வோரும் உண்டு)

10. கல்கி அவதாரம் (மண்ணின் ஆகர்ஷணத்திலிருந்து விடுபட்டு விண்ணில் ஏகிவிட்ட மனிதன்)

இதையும் விஞ்ஞானம் சொல்லும் பரிணாம வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தசாவதாரக் கோட்பாடு சொல்வது என்ன என்பது தெளிவாக விளங்கிவிடும்.

நீரில் மட்டுமே வாழக்கூடிய மீன் (மச்சம்) முதல் அவதாரம் எனவும், நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய ஆமை (கூர்மம்) இரண்டாவதாகவும், நிலத்தின்மேல் வாழ்ந்தாலும் நிலத்தின் ஆழங்களுக்குள் தோண்டிப் போகும் காட்டுப் பன்றி (வராகம்) மூன்றாவது அவதாரம் எனவும் கொள்ளப்படுகிறது.

பிரளயம் என்பது உயிர்ச்சக்தி மேற்கொள்ளும் உருவங்களையும் வடிவங்களையும் அழித்து, மீண்டும் அடிப்படை நிலையான அரூபசக்தியாக நிலைக்கச் செய்வது. பிரபஞ்சமும் பிரளயமும் (Cosmos and Chaos) மாறி மாறி நிகழும் செயல்பாடு.

 பிரளயத்தின்போது உயிரினங்களின் சாரத்தை அழிந்துவிடாமல் காக்கும் வேலை அடிப்படை முக்கியத்துவம் கொண்டது. உயிர்ச்சக்தி உருவமும் வடிவமும் கொண்டு பிரபஞ்சமாக வெளிப்படும்போது, அதற்கெதிராக நின்று அதை அழிக்கும் சக்திகளிடமிருந்து பிரபஞ்சத்தைக் காத்தது மச்சாவதாரம்.

மந்திர மலையை அச்சாகக் கொண்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது மலைக்கு ஆதாரமாக நின்றது கூர்மம். பாற்கடலைக் கடைவது என்பது பிரக்ஞையின் உள்சுழற்சியைக் குறிக்கிறது.

அதிலிருந்து வெளிப்படுவது பல புதிய சக்திகள், படைப்பு முறைப்பாட்டில் வெளிப்படும் நஞ்சு, பின் கடைசியாக மரணத்தை வெல்லும் வல்லமை கொண்ட அமிர்தம்; அதாவது காலத்தால் அழியாத தத்துவத்தைக் கண்டடைவது. இதற்கு வழிகாட்டுவது கூர்மாவதாரம்.

வராக அவதாரம் செய்தது என்ன? பூமியைக் கடலின் ஆழத்திலிருந்து வெளியே கொண்டு வரும் வேலையைத்தான் வராக அவதாரம் மேற்கொண்டது. நனவற்ற நிலையில் இருக்கும் பிரக்ஞையின் இருண்ட ஆழங்களிலிருந்து உலகப் பிரக்ஞையை முதல் முறையாக நனவுநிலைக்கு வெளிக்கொண்டு வந்ததற்கான அடையாளம் கூர்மாவதாரம். பிரக்ஞை சுயவுணர்வு அடையும் நிலையை அது காட்டுகிறது.

அடுத்ததாக நர-சிம்மம் என்று மனித அம்சம் பாதியும் சிங்கமெனும் மிருக அம்சம் பாதியுமாக வரும் அவதாரம். மிருக நிலையிலிருந்து விலகி, ஆனால், இன்னும் முழு மனிதனாகப் பரிணமிக்காத நிலையைக் காட்டுகிறது இது. மிருகங்களுக்கும் மனிதனுக்கும் இடையில் வேறு பல இனங்கள் இருந்தன என்று நமக்குத் தெரியும். அவற்றை இந்த அவதாரம் குறிப்பதாகக் கொள்ளலாம்.

(தசாவதாரத்தின் இரண்டாம் பகுதி அடுத்த இதழில் தொடரும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: sindhukumaran2019@gmail.com

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close