[X] Close

'மாந்தி’ தரும் பலன்கள் - ஜோதிடம் அறிவோம் - 2 - 47


jodhidam-arivom-2-47

  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 11:21 am
  • அ+ அ-

இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

’மாந்தி’ தரும் தோஷங்கள் என்னென்ன என்பது பற்றி இப்போது பார்ப்போம்.  

மாந்தி என்பவர் யார்? சனியின் மகன்தான் மாந்தி.  

இவர் எப்படி உருவானார்? ராவணன் தேவலோகத்தை தன்பிடியில் கொண்டு வந்து நவகிரகங்களையும் சிறைப்பிடித்து தன் அரியணையின் படிகட்டாக வைத்துக்கொண்டான். 

ராவணனுக்கு இந்திரஜித் பிறக்க இருக்கும்போது,தன் மகனுக்கு மரணமே இல்லாதபடி ஜாதகத்தை அமைக்க விரும்பினான் ராவணன். நவகிரகங்களும் இவன் கட்டுப்பாட்டில் இருப்பதால், தன் ஆஸ்தான குருவின் ஆலோசனைப்படி நவகிரகங்களையும் மரணம் இல்லாத அமைப்பில் நிற்க வைத்தான்.

அப்படி எல்லா கிரகங்களும் வரிசைப்படுத்திய பின் குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கியது, சனி பகவானுக்கு கால் ஊனம். அது மட்டுமல்ல பலவீனமான உடல் அமைப்பு. எனவே நீண்ட நேரம் நிற்க முடியாமல் தடுமாறி தன் காலை அடுத்த ராசியில் வைக்கப்போகிறார். இதைப்பார்த்த ராவணன்... தன் வாளால் சனியின் காலை வெட்டினார்.

அந்த கால் சென்று விழுந்த இடம் 7ம் இடம். அந்த கால்தான் “மாந்தி.” அந்த ஏழாமிடம்தான் மாரகம் எனும் மரணத்தைத் தரும் இடம்.

இல்லையே... ஜோதிடத்தில் 8 ம் இடம்தானே ஆயுளைச் சொல்லும். நீங்கள் 7ம் இடம் என்கிறீர்களே ... என்று எவரேனும் கேட்கலாம்.

8 ம் இடம் ஆயுளை மட்டுமே குறிக்கும். அந்த ஆயுள். எப்போது முடியவேண்டும் என்பதை அந்த ஆயுள் ஸ்தானத்திற்கு விரய ஸ்தானமான 7ம் இடம்தான் தரும். 7ம் இடம் மட்டுமல்ல இரண்டாமிடமும் மரணத்தைத் தரும். காரணம் ... ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்திற்கு எட்டாமிடம் இந்த இரண்டாமிடம் ஆகும். சரி நாம் இப்போது விளக்கத்தைப் பார்ப்போம்.

இந்த மாந்தியை தமிழகத்தில் எந்த ஜோதிடரும் முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பதில்லை. கேரளாவில் இந்த மாந்தியை முன்னிலைப்படுத்தியே பார்க்கப்படுகிறது.

அப்படி இந்த மாந்திக்கு ஏன் முக்கியத்துவம் தருகிறார்கள் கேரள மக்கள்?

ஜோதிடத்தை நம்புவது மட்டும் முக்கியமல்ல... முன் ஜன்ம வினை, முன்னோர் வினை என இவற்றையும் நம்ப வேண்டும். அப்படி நம்பினால்தான் மாந்தி தரும் பலன்கள் மீது நம்பிக்கை வரும்.

காரணம் என்ன? மாந்தி என்பவர் மரணம் தருபவர். ஒருவருக்கு எப்போது மரணம் என்பதை தீர்மானிப்பதும், அதை எப்படி வழங்கவேண்டும் என்பதை தீர்மானிப்பது சனியும், ராகுவும். அந்த மரணத்தை தருவது மாந்தி மட்டுமே.

ஆக, நம் முன் ஜன்ம வினை, நம் முன்னோர் செய்த வினை இதையெல்லாம் கணக்கிடப்பட்டு  மரணத்தின் தன்மை.... அதாவது நிம்மதியான இறுதியா, அல்லது குடும்பத்தினருக்கு சலிப்பு உண்டாக்கும் வகையில் இறுதிப் பயணமா.. அல்லது கோரமான இறுதியா... அல்லது தன்னைத்தானே முடித்துக்கொள்ளும் இறுதிப்பயணமா..... என்பதை முடிவு செய்து வழங்குபவர் இந்த மாந்தி தான்.

அது மட்டுமல்ல... பொருளாதார நிலை, தன வரவு, தொழில் நிலை .... அதன் வளர்ச்சி, உத்தியோகத்தில் ஸ்திரத்தன்மை, அதில் பதவி உயர்வு, இப்படி பலவற்றையும் முடிவெடுக்கிற இடத்தில் இருக்கிறார் “மாந்தி.”

சரி, இவர் எந்த இடத்தில் இருந்தால் நன்மை தருவார் என்பதை முதலில்  பார்ப்போம். தோஷம் உண்டாக்கும் இடத்தை பிறகு ஆராய்வோம்.

உப ஜெய ஸ்தானம் எனும் 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் மாந்தி இருந்தால் பெரும் நன்மைகள் உண்டாகும். இது லக்னத்திலிருந்து கணக்கிடப்படவேண்டும் (ராசிக்கு அல்ல).

இந்த 3ம் இடம் என்பது ஒரு மனிதனின் முயற்சியைச் சொல்லும். அதுமட்டுமல்ல... அந்த ஜாதகரின் வெற்றியையும் சொல்லும். 

பொதுவாக இந்த 3ம் இடத்தில் ராகு, சனி, சூரியன், கேது, மாந்தி இருப்பது வெகுவான நன்மைகளைத்தரும். செவ்வாய் இருந்தாலும் நன்மையே. ஆனால் இளைய சகோதரர் இருக்க மாட்டார். அப்படியே இருந்தாலும் பயன்பட மாட்டார்.

ஆக 3ல் மாந்தி இருப்பது நன்மை தருமே தவிர, தீமை எதுவும் தராது, அடுத்து,

6ம் இடம்., (நோய்,கடன்,எதிரி ஸ்தானம்) ஒரு மனிதனின் உழைப்பைக் காட்டும் இடம், அயராத உழைப்பு, பட்டறிவு மட்டுமல்லாமல் பகுத்தறியும் தன்மை, அனுபவப்பாடம் பயன்பாடு என இந்த ஆறாமிடத்தில் மாந்தி இருந்தால் உழைப்பும், உழைப்புக்கேற்ற வருமானமும், பதவி உயர்வும், சகல செல்வ வளமும் உண்டாகும்,

10ம் இடத்தில் மாந்தி இருந்தால் தொழிலில் எதிர்ப்பு என்பதே இல்லாமல் தனி ராஜாங்கமே உண்டாகும். பிரமாண்டமான வளர்ச்சி, பல நூறு கிளைகள் உள்ள நிறுவனங்களை நிறுவுதல். என வளர்ச்சி உண்டாகும். 10 ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்கிறது, ஜோதிட விதி.. அது மாந்தியாக இருந்தால் மிகமிகச் சிறப்பு.

11ம் இடம் லாப ஸ்தானம் ஆகும். எவ்வளவு பெரிய தொழில் செய்தாலும் லாபம் என்பது இல்லை என்றால் அந்தத் தொழில் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. ஆக இந்த இடம் வலுப்பெற வேண்டுமானல் ராகு மற்றும் மாந்தி இருந்தால் மட்டுமே லாபம் கொட்டோகொட்டென்று கொட்டும்.

 ஆக மாந்தி இந்த 3,6,10,11 ஆகிய ஸ்தானங்களில் இருப்பது மிகப்பெரிய நன்மை என்பதை தெரிந்து கொண்டோம் அல்லவா!

இனி தோஷம் தரும் இடங்கள் எவை? என்ன மாதிரியான தோஷம் தரும்? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...

பித்ரு தோஷம், பிரேத சாபம், மாத்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம் இவையனைத்தையும் தருபவர் “மாந்தி” என்பதை அறிவீர்களா?....! 

மாந்தி தன் தாய் தந்தையுடனும், சகோதரனுடனும்  காட்சிதரும் ஆலயம் எங்குள்ளது? 

மாந்தி தன் சாபம் நீங்க...  பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம் எங்கே உள்ளது? 

மாந்தியின் மனம் குளிர என்ன விதமான பரிகாரங்கள் உள்ளன?

அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம்......

- தெளிவோம்

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close