[X] Close
 

பித்ருக்கள் ஆசி தரும் அமாவாசை தர்ப்பணம்! மறக்காமல் முன்னோரை வணங்குங்கள்!


vaikasi-amavasai

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Jun, 2018 14:20 pm
  • அ+ அ-

அமாவாசை நாளில் (13.6.18) பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்யுங்கள். மறக்காமல் முன்னோர் ஆராதனை செய்யுங்கள். நம்மையும் நம் சந்ததியையும் வாழச் செய்வார்கள் முன்னோர்கள் என்பது ஐதீகம்!

இந்துக்களின் வழிபாடுகளில் முன்னோர் ஆராதனை, மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வீட்டில் ஏதேனும் விழாக்கள், மங்கல காரியங்கள் நடைபெறும் போது கூட, குடும்பத்தில் சுமங்கலிகளாக இறந்தவர்களை நினைத்து, பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுவது வழக்கம். அப்போது சுமங்கலிகளை அழைத்து, அவர்களுக்கு மரியாதை செய்து, நம்மால் முடிந்த மங்கலப் பொருட்களை வழங்குவார்கள். புடவை, ஜாக்கெட் கொடுப்பார்கள்.

அதேபோல், இறந்துவிட்ட முன்னோருக்கு ஒரு வருடத்தில் 96 முறை தர்ப்பணம் செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம். ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போதும், கிரகணத்தின் போதும் புரட்டாசி மகாளய பட்ச காலத்தின் 15 நாட்களிலும் தர்ப்பணம் செய்யச் சொல்லி அறிவுறுத்துகின்றனர்.

முக்கியமாக, மாதந்தோறும் வருகிற அமாவாசையில் தர்ப்பணம் செய்யவேண்டும். அமாவாசை என்பதே முன்னோருக்கான நாள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

முன்னோரை வழிபட வழிபட, நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். நாம் நன்றாக, சிறப்பாக வாழ்கிறோமோ இல்லையோ நம்முடைய சந்ததியினர் வாழையடி வாழையாக குறைவின்றி வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

இதோ... நாளைய தினம், புதன்கிழமை (13.6.18) அமாவாசை தினம். இந்த நாளில், பித்ருக்கள் எனப்படும் முன்னோரை தர்ப்பணம் செய்து வழிபடுங்கள். வீட்டில் அவர்களின் படங்களுக்கு பூக்களிட்டு, ஊதுபத்தியிட்டு, பிரார்த்தனை செய்யுங்கள்.

நாளைய அமாவாசை நாளில், காகத்துக்கு உணவிட்ட பிறகு சாப்பிடுங்கள். மேலும் முன்னோரை நினைத்து, உங்களால் முடிந்த அளவுக்கு ஒரு ஐந்துபேருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்குங்கள். இன்னும் முடிந்தால், நம் தாய்தந்தைக்குப் பிடித்த உணவு என்னவோ, அந்த உணவை பிறருக்கு வழங்குங்கள்.

நாம் செய்யும் தர்ப்பணத்தின் மூலமாகவும் தீப தூப ஆராதனைகளின் மூலமாகவும் அவர்களை நினைத்து அன்னதானம் மேற்கொள்வதன் மூலமாகவும் முன்னோர்கள் அகம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள். அரவணைப்பார்கள். அருள்பாலிப்பார்கள். நம் வம்சத்தை வழிநடத்துவார்கள் என்பது உறுதி!

அமாவாசை தர்ப்பண வழிபாடு... மறக்காதீங்க!

 

தொடர்புடைய செய்திகள்

 



MGR - Kindle Edition


[X] Close