[X] Close

காலா ரஜினி காளிகாம்பாளை தரிசிக்க வருவாரா?


kaala-kalikambal

சக்தி கொடு பாடல்... பாபா படத்தில்!

  • வி.ராம்ஜி
  • Posted: 12 Jun, 2018 09:21 am
  • அ+ அ-

தாயை மதிப்பவர்களைக் கொண்டே அவர்களின் குணாதிசயங்களைச் சொல்லிவிடலாம். தாயை மதித்துப் போற்றுபவர்கள், தனக்கு வந்திருக்கும் மனைவியையும் அவ்விதமே நேசிப்பார். அம்மாவையும் மனைவியையும் நேசித்துக் காப்பவர், தேசத்தின் மீதும் தேசத்தில் உள்ள மக்களின் மீதும் மிகுந்த பிரியமும் வாஞ்சையும் கொண்டிருப்பார். தன் அன்னை சொல்வதே வேதவாக்கு என வாழ்ந்து, தன் மொத்த ராஜ்ஜியத்தையும் அரவணைத்து வளர்த்த சத்ரபதி சிவாஜியைத் தெரியாதவர்கள் எவருமில்லைதானே!

சத்ரபதி சிவாஜி என்றும் வீர சிவாஜி என்றும் போற்றப்பட்டவர், தன் அம்மா சொன்னால் எதுவாயினும் செய்வார். தன் அம்மா சொல்லுவது அனைத்துமே நம்முடைய, நம் தேசத்தினுடைய நன்மைக்கே என்று உறுதியாக இருந்தார். உத்வேகத்துடன் செயல்பட்டார். வடக்கே, மகாரஷ்டிரம் உள்ளிட்ட பல பகுதிகளையும் அக்கம்பக்க நாடுகளையும் தன் ஆளுமையின் கீழ் கொண்டு வந்த வீர சிவாஜி, தெற்கே தமிழகத்திற்கும் படையெடுத்து வந்திருக்கிறார் என்கிறது வரலாறு.

அம்மாவை உயிராக மதித்து வாழ்ந்த வீர சிவாஜி, காளிதேவியே சகலமும் என பூஜித்து வந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அங்கே காளி கோயில்கள் நிறையவே உண்டு. அந்தக் கோயில்களுக்கு திருப்பணிகள் செய்தான். காளிதேவி அன்னைக்கு, ஆபரணங்கள் தயார் செய்து வழங்கினான். எப்போதும் எல்லாக் காலமும் காளிதேவியை ஆராதித்து, அரண்மனையில் சிறப்பு பூஜைகளும் அம்பிகைக்குச் செய்து வந்தான்.

அன்னையிடம் மதிப்பு, மனைவியிடம் பேரன்பு, நாட்டுமக்கள் மீது கருணை, கடவுளின் மீது பக்தி என வாழ்ந்து வந்த வீர சிவாஜிக்கு, தொட்டதெல்லாம் பொன்னானது. எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைத்தது. தன் வீரத்தாலும் சாதுர்யத்தாலும் படை பலத்தாலும் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே இருந்தாலும், எல்லாம் காளிதேவியின் கருணை என்றே சொல்லிவந்தார் என்கிறது சிவாஜி ராஜாவின் சரிதம்.

அதுமட்டுமா? காளி உபாஸகர் என்று சொல்லும் அளவுக்கு காளிதேவியின் தீவிர பக்தராகவே இருந்தார் சத்ரபதி சிவாஜி. ஒரு தேசத்தின் மீது படையெடுக்கக் கிளம்பும் போது, காளிதேவிக்குப் படையலிட்டு, ஆயுதங்களை அவள் காலடியில் வைத்துவிட்டு, ஆயுதங்களுக்கும் பூஜைகள் போட்ட பிறகுதான், போருக்குக் கிளம்புவான் வீரசிவாஜி.

சோழ தேசத்தை சரபோஜிகள் ஆட்சி செய்தார்கள் அல்லவா. அந்தப் பக்கம் சோழ தேசமும் இந்தப் பக்கம் செஞ்சி வரையிலுமாக அவர்களின் ஆட்சி நீண்டிருந்தது என்பதையும் மறக்கமுடியாது.

இந்த வீர சிவாஜி, சென்னைப் பகுதிக்கு வந்திருந்தார். அங்கே காளிகாம்பாளை மனமுருகி தரிசித்துப் பிரார்த்தனை செய்திருக்கிறார் என்கிறது ஸ்தல வரலாறு. காளிகாம்பாள் சந்நிதியில் நீண்ட நேரம் கண்மூடி அவளுடன் பேசிக்கொண்டிருந்தார். காளிதேவியின் பக்தரான அவர், இந்தக் காளி, உக்கிரமாக இல்லாமல், கருணையுடன் இருக்கிறாளே என்று சொல்லி வியந்து வியந்து தரிசித்தாராம்!

1667ம் வருடம் அக்டோபர் மாதம் போல, காளிகாம்பாளைத் தரிசித்தார் என்று சிவாஜியின் சரிதம் தெரிவிக்கிறது. அவர் குளிர்ந்தும் மகிழ்ந்தும் வியந்தும் தரிசித்த காளிகாம்பாள் , இதோ... சென்னை பாரிமுனையில் அற்புதமாகக் கோயில் கொண்டு, நமக்கெல்லாம் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.

தன் பக்தர்களின் வெற்றிக்கு கைகொடுத்திருக்கிறாள். கவலைக்கண்ணீரை கரம் நீட்டித் துடைத்திருக்கிறாள். இன்றைக்கும் பலருக்கும் வெற்றிகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்ள். ஆதரவுக் கரம் தந்துகொண்டே இருக்கிறாள்.

வீர சிவாஜிக்கு மட்டும் அல்ல... இன்னொ ரு சிவாஜிக்கும் காளிகாம்பாள் அருள்மழை பொழிந்திருக்கிறாள். அவர்... சிவாஜிராவ் கெய்க்வாட்.

ஆமாம்... இன்றைக்கு மிகப்பெரிய உச்சநட்சத்திரமாகத் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காளிகாம்பாளின் தீவிர பக்தர்.

ஒரு படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, சத்தமே இல்லாமல், யாரோ ஒருவர் மாதிரி, இமயமலைக்குச் சென்று சுற்றுவாரே ரஜினி. அதேபோல், காளிகாம்பாள் கோயிலுக்கு பல முறை சத்தமின்றி வந்து, தரிசனம் செய்வது ரஜினியின் வழக்கம்!

ஸ்ரீராகவேந்திரர் மீது கொண்ட பக்தியால், ராகவேந்திரர் என்ற படத்தில் நடித்தார். மகா அவதார் பாபாஜி மீது கொண்ட பக்தியால், பாபா என்று படமே எடுத்தார். நடித்தார். அந்த பாபா படத்தில்,

ரஜினி, நம்பியார், சுஜாதா குடியிருக்கும் வீடு, எங்கே இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கும் தெரியுமா. காளிகாம்பாள் கோயில் பகுதி அப்படியே செட் போடப்பட்டிருக்கும். ‘இந்த காளிகாம்பாள் அருளால, இங்கே ரோடு போடுவாங்க. ரெண்டே நாள்ல ரோடு போடுவாங்க’ என்று நம்பியார் சொல்வார். அதன்படி, அடுத்தடுத்து சாலை வசதிகள் மளமளவென செய்துகொடுக்கப்படும், ஞாபகம் இருக்கிறதா?

க்ளைமாக்ஸ் காட்சியில், ’சக்தி கொடு சக்தி கொடு’ என்று பாடுவார், ரஜினிகாந்த்..

நம் நடைகண்டு அகங்காரம் தூளாக வேண்டும்

நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும்

சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு

தாயும் நீயே... தந்தையும் நீயே

உயிரும் நீயே... உண்மையும் நீயே!

என்று சென்னை கிண்டியில் உள்ள கேம்பகோலா வளாகத்தில், காளிகாம்பாள் கோயில் அப்படியே செட் போடப்பட்டு, ஷூட்டிங் நடத்தப்பட்டது. முன்னதாக கோயிலுக்குச் சென்று காளிகாம்பாளை வழிபட்ட ரஜினி, பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சிவாச்சார்யரை வரவழைத்து, ஆசியும் பெற்றுக் கொண்டார். அவர் பிரசாதம் தந்து ஆசீர்வதிக்க... அந்தப் பாடலை உற்சாகத்துடன் நடித்து முடித்தார் ரஜினிகாந்த்.

முக்கியமான தருணங்களிலெல்லாம் காளிகாம்பாள் கோயிலுக்கு வருவார் ரஜினிகாந்த். சிங்கப்பூரில் சிகிச்சைக்குச் செல்வதற்கு முன்னதாக, காளிகாம்பாளைத் தரிசித்துவிட்டுத்தான் கிளம்பினார் ரஜினி. காளிகாம்பாளின் அருளை வாங்கிக் கொண்டுதான் செயலில் இறங்குவார். இப்போதைய சூழலில், ரஜினி எப்போது காளிகாம்பாள் கோயிலுக்கு வருவார் என்கிறார்கள், கோயிலைச் சுற்றியுள்ள அன்பர்கள்!

காளிகாம்பாளைத் தரிசிக்க, காலா ரஜினி எப்போது வருவார்? 

காளிகாம்பாளின் அருட்கடாக்ஷத்தை நீங்களும் பெறவேண்டுமா. ஒருமுறை அவளின் சந்நிதியில் வந்து நில்லுங்கள். கருணையும் கனிவுமாகப் பார்ப்பார் உங்களை! அருள் மழை பொழிவாள் உங்களுக்கு! 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close