[X] Close

தெய்வத்தின் குரல்: பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்!


  • kamadenu
  • Posted: 06 Jun, 2019 11:14 am
  • அ+ அ-

பக்தர், யோகி ஆனாலும் திருமழிசையாழ் வாருக்கும் சுத்தமான பிரேமையினாலே இரண்டு பாசங்கள் மட்டும் இருந்தன போலிருக்கிறது! சிஷ்யன் கணிகண்ணனை விட்டுப் பிரிய முடியாத பாசம் அவருக்கு இருந்தது. அதேபோல அந்த ஆலய மூர்த்தியாக அர்ச்சாவதாரத்திலிருந்த புஜங்க சயனப் பெருமாளிடமும் அவருக்கு அலாதியான பாசமிருந்தது.

அதனால் கணிகண்ணனின் பின்னோடேயே அவரும் புறப்பட்டுவிட்டார். அவன் அவரைக் கூப்பிடவில்லை. ‘தான் எங்கேயாவது காடு, மலை என்று போய்விடலாம்; குருவையும் அங்கேயெல்லாம் இழுத்தடித்து சிரமப்படுத்த வேண்டாம்; இங்கேயே அவர் பாட்டுக்குப் பெருமாள் சந்நிதியில் இருந்து கொண்டிருக்கட்டும்; அவர் எங்கேயிருந்தாலும் நாம் எங்கேயிருந்தாலும் அவருடைய அருள் நம்மைக் கட்டிக் காக்கும்; சரீர ரீதியில் எங்கேயிருந்தாலும் நம்முடைய இதயத்தில் அவர் எப்போதும் இருந்து கொண்டுதானிருப்பார்’ – என்ற தெளிவோடு கணிகண்ணன் புறப்பட்டுவிட்டான்.

ஆனாலும், அவருக்கு அப்படி இருக்க முடியவில்லை. ஸ்வயநலம் கலக்காத வாத்ஸல்யங்களில் இருக்கிற அழகு உலகத்துக்குத் தெரிய வேண்டுமென்பதற்காக மிகவும் பெரியவர்கள்கூடப் பந்த பாசமிருக்கிறதுபோல இருப்பதுண்டு. அநேக கதைகளைப் புராணங்களில் இப்படிப் பார்க்கிறோம்.

கணிகண்ணனின் பின்னோடேயே புறப்பட்ட ஆழ்வார், அந்த மாதிரியே பாசத்துடன் பெருமாளும் தன் பின்னாடி தொடர்ந்து வருவாரென்று நினைத்துக்கொண்டு ஆலயத்தில் இருக்கப்பட்ட தம்முடைய அபிமான மூர்த்தியைப் பார்த்தார்.

ஆனால், ஸ்வாமி லீலா விநோதனல்லவா? அதனால் அவன் பாட்டுக்கு நிம்மதியாக சேஷ பர்யங்கத்தில் படுத்துக்கொண்டே இருந்தான்.

அப்போதுதான் இந்தக் கதை ஆரம்பத்தில் நான் சொன்னாற்போல சிஷ்யனுக்காக குருவானவர் ஸ்வாதீனத்துடன் ஸ்வாமிக்கே ஆர்டர் போட்டார்.

தான் பரம பாகவதன், இந்த அர்ச்சையிடமே அபிமானம் வைத்தவன், ஆனபடியால் தன்னை பகவான் பின்தொடர்ந்து வரவேண்டும் என்று தற்பெருமையாக ஆழ்வார் ஆர்டர் போடவில்லை. பின்னே என்ன போட்டார்?

“கணிகண்ணன் போகின்றான்…”

தான் போவதைச் சொல்லிக்கொள்ள வில்லை. சிஷ்யன் போகிறானே, ஊரைவிட்டுக் கிளம்பிவிட்டானே, அதையே சொல்கிறார். “குழந்தை ஊரைவிட்டு, மனசு வெறுத்துப் போகிறது. அதன்கூடவே நீ சதாகாலமும் இருந்து ரட்சிக்க வேண்டாமா?”

ஆழ்வார் சதாவும் தன்னை ரக்ஷிக்கிறார், ரக்ஷிப்பாரென்ற உறுதி கணிகண்ணனுக்கு இருந்தாலும் தாம் ரக்ஷிப்பதாக அவர் நினைக்கவில்லை. வெளியிலே தடபுடலாக பகவானுக்கு உத்தரவு போட்டாலும், உள்ளுக் குள்ளே ரக்ஷணமெல்லாம் அவனால்தான் நடக்கிறது. தாம் ஒன்றுமே இல்லை என்ற எளிமையோடுதான் இருந்திருக்கிறார்! அதனால்தான் கணி கண்ணன் போகிறபோது பேசாமல் படுத்துக்கொண்டிருக்கிற ஸ்வாமியிடம் இப்படிக் கேட்கிறார்:

“குழந்தையோடு நீயும் போகாமல் ஜம்மென்று பாம்பு மெத்தையில் படுத்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்,

ஓய்? இப்படி நீள நெடுகப் படுத்துக் கிடக்காதீர்! இது கொஞ்சங்கூட நன்றாயில்லை” (என்கிறார்) .

“கணிகண்ணன் போகின்றான், காமரு பூங்கச்சி

மணிவண்ணா ! நீ கிடக்க வேண்டா!”

“இப்படிப் படுத்துக்கொண்டு கிடக்காதே. நான் தைரியமாக, துணிச்சலோடு உள்ளது உள்ளபடி சொல்கிறவன்; ஸத்யத்தின் சிவப்பேறிய நாக்கோடு உள்ளது உள்ளபடி பாடுகிற கவி.”

“துணிவொன்றிச் செந்நாப் புலவோன் யான் ” என்று சொல்லிக்கொள்கிறார். “நான் பயப்படாமல் வாய் சிவக்க ஸத்யத்தையே பாடுபவன்” என்று சொல்வதிலேயே “நீ பொறுப்பில்லாமல் படுத்துக்கொண்டிருந்தால் அதை உள்ளபடி உலகத்துக்குத் தமுக்குப் போட்டு விடுவேன்!” என்று எச்சரிக்கிற மாதிரி பாட்டு போகிறது.

“கணிகண்ணன் போகின்றான் , காமரு பூங்கச்சி

மணிவண்ணா ! நீ கிடக்க வேண்டா ! துணிவொன்றிச்

செந்நாப் புலவோன் யான் சொல்கின்றேன் …”

“குழந்தை போகிறான். மனசு தாளாமல் நானும் போகிறேன். நீ மட்டும் சுகமாகப் படுத்துக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? [குரலை உயர்த்தி] கிளம்பு, வாரிச் சுருட்டிக்கொண்டு, பெரிசாக சேஷ பர்யங்கம் விரித்துக்கொண்டிருக்கிறாயே, அதைச் சுருட்டிக்கொண்டு நீயும் எங்களோடு புறப்படு.

“நீயும் உன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் !”

— அழுத்தமான ஆர்டராகவே போடுகிறார்!

“கணிகண்ணன் போகின்றான், காமரு பூங்கச்சி

மணிவண்ணா ! நீ கிடக்க வேண்டா ! – துணிவொன்றிச்

செந்நாப் புலவோன்யான் செல்கின்றேன், நீயுமுன்றன்

பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள் “.

பகவான் சயனித்துக் கொண்டிருக்கிற போது ஆதிசேஷன் அவருக்குப் படுக்கை. அவரே எங்கேயாவது போகிறாரென்றால் அப்போது அவன் அவருக்கு ஆயிரம் தலையாலும் குடைபிடித்துக்கொண்டு போவான். சென்றால் குடையாம்.

க்ருஷ்ணாவதாரம் ஆனவுடன் வஸுதேவர் குழந்தையை மழை வெள்ளத்தில் தூக்கிக்கொண்டு போகும்போது ஆதிசேஷனேதான் குடை பிடித்தான்.

ஆர்டர் போடுகிறபோதும் ஸ்வாமியிடம் ஆழ்வாரின் கரிசனம் குறையவில்லை. ‘பாம்பு மெத்தையிலிருந்து இறங்கி நீ வா’ என்று மட்டும் சொல்லாமல், ‘ஸ்வாமிக்கு வெயில் படாமல், மழை படாமல் குடை வேண்டுமே’ என்ற கரிசனத்தில் சேஷசயனத்தையும் சுருட்டிக் கூட எடுத்துக்கொண்டே புறப்படச் சொல்கிறார்!

ஆர்டர் போட்டாரோ இல்லையோ, பெருமாளும் அப்படியே பண்ணிவிட்டார்! அதற்குமேல் விளையாட்டுப் பார்த்து பக்தர் மனசு வருத்தப்படும்படி பண்ணக் கூடாதென்று, அவர் சொன்னபடியே வாரிச் சுருட்டிக் கொண்டு கணிகண்ணனோடும் ஆழ்வாரோடும் தானும் புறப்பட்டுவிட்டார்!

‘சொன்ன வண்ணம் செய்தது’ இதோடு முடியவில்லை. மூன்று பேரும் அப்படியே புறப்பட்டு நாலு, அஞ்சு மைல் போகிறதற்குள் நன்றாக இருட்டிவிட்டது. மனுஷ்யர்கள் மாதிரியே விளையாடணும் என்று பகவானுக்கு இருந்ததால், “ராத்ரி ஆயிடுத்து. அதனால், இனிமேலே பிரயாணம் பண்ண வேண்டாம். இங்கேயே ராத் தங்கிவிட்டு கார்த்தாலே கிளம்பலாம்” என்று சொன்னான். பகவான் தான் சொன்னானோ, ஆழ்வார்தான் சொன்னாரோ? அவனே இவர் சொன்னவண்ணம் செய்பவனாகத்தானே இருந்தான்?

ஆகக்கூடி, பாலாற்றங்கரையிலே குளுகுளு என்று காற்று வீசுகிற இடத்திலே மூன்று பேரும் ராப்பொழுதை சொஸ்தமாகக் கழித்தார்கள்.

இதற்குள்ளே – கோயிலைவிட்டுப் பெருமாள் புறப்பட்ட அந்த நிமிஷத்திலிருந்தே – காஞ்சிபுரத்தில் என்ன ஆச்சு என்றால், ஒரேயடியாக அலக்ஷ்மி (அமங்களம்) வந்து கப்பிக் கொண்டுவிட்டது. பகவான் ஊரைவிட்டுப் போய்விட்டானென்றால் அவனுடைய வக்ஷஸ்தலத்திலேயே வாஸம் பண்ணிக்கொண்டிருக்கும் லக்ஷ்மியும்தானே கூடப் போய் விடுவாள்? அதனால் ‘நகரேஷு காஞ்சி’ என்று ப்ரஸித்தி பெற்ற ராஜதானியிலே லக்ஷ்மீகரமே போய் மூதேவி வந்து மூடிக்கொண்டுவிட்டது. ஒரே இருட்டு! ஒரு இடத்திலேயாவது தீபமே ஏற்றிக் கொள்ளவில்லை! தேவாலயங்களிலும் தீபமில்லாமல் பூஜையெல்லாம் நின்று போயிற்று. எல்லார் மனசுலேயும் வேறு ஒரேயடியாக இருள் கப்பிக்கொண்டு விட்டது. இனம் தெரியாமல் ஒரே துக்கம், ஒரே திகில்.

எல்லாரும் போய் ராஜாவிடம் முறையிட்டார்கள். அவனுக்கும் ஒரே வியாகுலம், பய ப்ராந்தியாகத்தான் இருந்தது. பெருமாள் ஊரைவிட்டுப் போனதில்தான் இப்படி உத்பாதமாக ஆகிவிட்டது என்று புரிந்தது. “இதோ போய் அவர் காலில் விழுந்து பிரார்த்தித்துக்கொண்டு அவரை மறுபடி அழைத்துக்கொண்டு வருகிறேன்” என்று புறப்பட்டான்.

இருட்டிலே ராஜாவைக் காபந்து பண்ணி ஊரெல்லைக்கு அழைத்து வருவதற்குள் பொழுது விடிந்துவிட்டது.

பாலாற்றங்கரையில் பகவான் ஆழ்வாரோடும் கணிகண்ணனோடும் தங்கியிருந்த இடத்துக்கு ராஜா மறுநாள் காலம்பற வந்து சேர்ந்தான்.

(தொடரும்)
தெய்வத்தின் குரல் ஐந்தாம் பாகம்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close