[X] Close

சூபி வழி 17: நதி பாலம் அர்த்தம்


17

  • kamadenu
  • Posted: 30 May, 2019 11:34 am
  • அ+ அ-

-முகமது ஹுசைன் 

நீ முழுமையாகி

நதியைக் கடக்கவென

ஒரு பாலம் உருவாக்கப்பட்டுள்ளது

ஆனால்,

நீ முழுமையான பிறகு

நதி, பாலம் என்பதன்

அர்த்தம்தான் என்ன?

                                 -ஹகீம் ஸனாய்

தன்னைத் தன்னுள் தேடி, வாழ்வைத் தன்னுள் வாழ்ந்து, அதன் மூலம் இறைவனைக் கண்டெடுத்த மாபெரும் சூபி ஞானியே அஹ்மது இப்னு கஸ்ரவிய்யா. தான் வாழ்ந்த காலத்தில் மிகவும் கொண்டாடப்பட்ட ஞானி அவர். ஹாத்திம் அஸம் அவர்களின் முதன்மைச் சீடர் அவர்.

அபூ யஸீத் பிஸ்தாமியின் நெருங்கிய நண்பர் அவர். தனது வாழ்நாளில் எண்ணற்ற மாணவர்களுக்கு ஆன்மிகத்தைப் போதிக்கும் ஆசானாக விளங்கினார். ஆன்மிக வழியில் செல்பவர்களுக்கு இன்றும் அவரே கலங்கரை விளக்கம்,

மெய்ஞ்ஞானத் தேடலிலும், இறைவனின் மீதான ஒப்பற்ற நேசத்திலும், கேள்விக்கு அப்பாற்பட்ட பக்தியிலும் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை  அவர் கழித்தார். இறைவனின் மீதான அவரது நேசம் சக மனிதர்களின் மீதாகவும் இருந்தது; அவரது தேடல் தன்னுள்ளான சுய தேடலாக இருந்தது. சிறு வயதிலிருந்தே அவருடைய நாட்டம் இறைவனில் இருந்தது. கேளிக்கைகளில் அவருடைய மனம் ஒருபோதும் ஈடுபட்டதில்லை.

“இறைவனே அழிவற்றவன். நிலையானவன். மற்றவை அனைத்தும் நிலையற்றவை, அழியக்கூடியவை. இறைவனே உலகம். அவனுடனான நெருக்கமே மனிதனுக்குப் பலம். இறைவனே இன்பத்தின் ஊற்று. துன்பத்தின் நிவாரணி.

அவனைத் தவிர்த்து மற்றொன்றில் இன்பத்தைத் தேடினால் அது துன்பத்தையே பரிசளிக்கும். இறைவனைத் தன்னுள் தேடுபவன் இறைவனை அடைவான். உண்மையான இறை நேசம், உலகையும் அதன் மீதான பற்றையும் துறக்கச் செய்யும்.

அந்த நேசத்தால், இதயமும் ஆன்மாவும் இறைவனின் நினைவில் முழுவதுமாக மூழ்கித் திளைக்கும்” என்பதே அவருடைய சீடர்களுக்கான முக்கிய அறிவுரையாக எப்போதும் இருந்தது.

போர்வீரனின் உடை

சூபி உலகில் பெரும் மகானாக அவர் விளங்கியபோதும், போர் வீரர்கள் அணியும் ஆடைகளையே அவர் எப்போதும் அணிந்திருப்பார். அவரது அறிவாலும் அழகாலும் கவரப்பட்ட பாத்திமா என்பவர், அவர் மீது காதல்கொண்டு, மணமுடிக்கத் தூது அனுப்பினார். அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனத்தையே அவர் பதிலாக்கினார்.

அதனால் மிகுந்த சோகத்துக்கு உள்ளான பாத்திமா மீண்டும் ஒரு தூதுவரிடம் “உங்கள் அழகில் நான் மதி மயங்கவில்லை. உங்கள் அறிவில்தான் மதி மயங்கினேன். சாதாரண இல்லற வாழ்வு மட்டும் எனது நோக்கமல்ல. உங்கள் ஆன்மிக வாழ்வில் பங்கு பெறுவதே எனது நோக்கம்.

உங்கள் ஞானத்தையும் தேடலையும் பகிரும் தோழியாக என்னை ஏற்றுக்கொள்வீர்களா?” என்று சொல்லி அனுப்பினார். இதற்கும் கஸ்ரவிய்யா எந்த மறுமொழியும் கூறவில்லை. ஆனால், நேரடியாக பாத்திமாவின் வீட்டுக்குச் சென்றார், அவருடைய பெற்றோரைச் சந்தித்தார். சம்மதம் பெற்றார். அவரைத் தனது வாழ்வின் அங்கமாக்க, அந்தக் கணமே மணமுடித்தார்.

குடிசை வீட்டில் குடியேறிய மனைவி

செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தைச் சேர்ந்த பாத்திமா, வளமான வாழ்வையும்  தந்தையின் அரண்மனை போன்ற வீட்டையும் துறந்து கஸ்ரவிய்யாவின் குடிசை வீட்டில் குடியேறினார். கஸ்ரவிய்யா – பாத்திமா இணையின் இல்லற வாழ்வு மெய்த்தேடலில் ஊறித் திளைத்த ஒன்றாக இருந்தது.

அவர்களது பகலும் இரவும் இறைவனுக்கான தொழுகையில் நிரம்பி வழிந்தது. இறைவனின் மீதான பரிபூரண நேசத்தில் அவர்களுக்கு இடையிலான நேசமும் வளர்ந்தது. பாத்திமாவின் இறைநேசம் கஸ்ரவிய்யாவின் இறைநேசத்துக்கு இணையானது.

“பெண்களின் உடையில் ஒளிரும் ஓர் உண்மையான ஆன்மாவே பாத்திமா” என்று தன்னுடைய சீடர்களிடம் பிஸ்தாமி  எப்போதும் பெருமையுடன் சொல்வார்.

ஓர் இரவில் தூங்கும்போது, அவர் வீட்டில் ஒரு திருடன் புகுந்துவிட்டான். அவனிடம் “இன்று இரவு மட்டும் என்னுடன் இரு. காலையில் விடிந்தவுடன் உனக்கு வேண்டியதை உன் எதிர்பார்ப்புக்கும் மேலாகக் கொடுத்து வழியனுப்பி வைக்கிறேன்” என்று சொன்னார்.

திருடனும் சம்மதித்தான். தனது தொழுகையில் அந்தத் திருடனையும் இணைத்துக்கொண்டார். தான் திருட வந்ததை மறந்து அவன் நெக்குருகிப் பிரார்த்தனையில் மூழ்கியிருந்தான். யாரோ தோளைத் தட்டவே கண்களைத் திறந்து பார்த்தான். அவன் எதிரில் கஸ்ரவிய்யா பெரும் மூட்டையுடன் நின்றுகொண்டிருந்தார்.

“என் வீட்டிலிருந்த செல்வம் அனைத்தும் இந்த மூட்டையினுள் உள்ளது. நீ இதைச் சந்தோஷமாக எடுத்துக்கொண்டு செல்” என்று அவனிடம் அவர் கூறினார். வாய் விட்டு ஓவென்று அழுத அவன், தலையில் அடித்தபடி அவர் வீட்டிலிருந்து வெளியில் ஓடினான். 

“உங்களது வறுமையைப் பிறரிடம் மறையுங்கள். வறுமை இறைவன் உங்களுக்கு அளித்தகொடை” என்று சொன்ன கஸ்ரவிய்யா தனது வாழ்வின் இறுதிவரை வறுமையில்தான் உழன்றார், மரணப்படுக்கையின்போது “எனது வாழ்நாள் முழுவதும் நான் தட்டிக்கொண்டிருந்த கதவு இப்போது திறக்கப்பட உள்ளது.

எனது இறைவனைக் காணும் நேரம் நெருங்கிவிட்டது” என்று சொன்ன மறுகணம், தனது 95-ம் வயதில் இவ்வுலகைப் பிரிந்து அவர் சென்றார். சூபி உலகின் ஆலமரம் அவர். அவருடைய விழுதுகள் இன்று உலகெங்கும் கிளைபரப்பி ஞான ஒளியை நம்மீது பாய்ச்சிக் கொண்டிருக்கின்றன.

(ஒளி வீசட்டும்)

கட்டுரையாளர்,

தொடர்புக்கு: mohamed.hushain@thehindutamil.co.in

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close