[X] Close

உங்கள் ஜாதகத்தில் அரசு உத்தியோகம்!


jodhidam-arivom-2-42

  • kamadenu
  • Posted: 24 May, 2019 10:44 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2  - 42: இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே. இந்த பதிவில் பார்க்க இருப்பது யாருக்கெல்லாம் அரசு வேலை கிடைக்கும், அரசில் உயர் பதவி கிடைக்கும், அரசு தொடர்புடைய வேலை அமையும், அல்லது அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும் என்பதையெல்லாம் பார்ப்போம்.

அதேசமயம் அரசுப் பணிக்கு நிறைய தேர்வுகள் எழுதியும், பலமான பரிந்துரை இருந்தும் ஏன் வேலை கிடைக்கவில்லை? என்ன பரிகாரம் செய்யலாம்? என்பதையும் பார்க்கலாம்.

அதுமட்டுமல்ல... அரசுப் பணியேதான் இலக்கா? தனியார் துறையில் சாதனை செய்து உயர்ந்த வாழ்வு அமையுமா? 

அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் வெறும் அலுவலர் மட்டுமே, அதை தாண்டி உயர் பதவி எல்லாம் கனவுதான் என விரக்தியில் இருப்பவர்களுக்கும் இந்த பதிவில் விடை உண்டு.  

உங்கள் ஜாதகத்தில் (ஆண்) குருவுக்கு 5,9 ல் சனி பகவான் இருந்தால்,  100 சதவீதம் வேலைக்காக எந்த பெரிய முயற்சியும் இல்லாமல் just like that என்பதுபோல படிக்கும் போதே வேலை உறுதியாகும்.

இந்த குருவும் சனியும் சூரியனோடு இருந்தால் அரசு வேலை நிச்சயமாக உண்டு. தனியார் நிறுவனமாக இருந்தால் நிச்சயமாக உயர் பதவியில்தான் இருப்பீர்கள்.

இந்த குரு சனி சூரியனோடு, செவ்வாய் இருந்தால் காவல்துறை, ராணுவம் போன்ற துறைகளில் உயர் பதவி உண்டு. சிலருக்கு அரசியல் ஈடுபாடும், அரசியல் சார்ந்த பதவிகளும் கிடைக்கும்.

குரு சனி சூரியன் செவ்வாய் ராகு தொடர்பு... மருத்துவராகவும், அதுவும் அறுவை சிகிச்சை நிபுணராக புகழ் பெற்ற மருத்துவராகவும் இருப்பார்கள். விளையாட்டுத் துறையில் புகழ் பெறுவார்கள்.  அதன்மூலம் அரசு கௌரவ வேலை கிடைக்கும்.

குரு சனி புதன் தொடர்புடையவர்கள் வங்கிப்பணி,இன்சூரன்ஸ், பத்திரப்பதிவுத் துறை, நூலகர், பேராசிரியர், விரிவுரையாளர் போன்ற வேலை உண்டாகும்.

மேற்கண்ட அனைத்தும் அரசுத் துறையில் வேலை கிடைப்பதற்கான கிரக அமைப்பு என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஆனால் இப்போது அரசு வேலையை விட தனியார் துறையில்தானே அதிக சம்பளம் கிடைக்கிறது? அதுவும் பலருக்கும் லட்சங்களில்தான் சம்பளமே தொடங்குகிறது!

ஆனால் வேலை நிரந்தரம் என்பது கிடையாது. எந்த நேரத்தில் வேலை போகும் என்ற மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். ,அதேசமயம் தனித்திறமை, ஆளுமை உள்ளவர்களுக்கு பெரிய கவலை இருக்காது.

இருக்கட்டும், கிடைத்த வேலை நிரந்தரமாகவும், அச்சம் இல்லாத நிலை தொடரவும், அரசுப் பணி கிடைக்கவும், அரசுத் தேர்வுகளில் நிச்சயம் வெற்றி பெறவும் இந்தப் பரிகாரத்தை செய்து வாருங்கள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாலயம் சென்று ஈசனுக்கு, அந்த லிங்கத்திருமேனிக்கு தேன் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள். செந்தாமரை மலர் மற்றும் எருக்கம்பூ கொண்டு அர்ச்சனை செய்துவர வேலையில் இருக்கும் தடை மட்டுமல்ல, பணியிடத்தில் இருக்கும் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் கூட காணாமல் செய்துவிடும். மருத்துவக் கல்வியில் சேரவும் இந்தப் பரிகாரம் உதவும்.

அரசுபணிதான் இல்லை, அரசு தொடர்பான ஒப்பந்தங்கள் கிடைக்கவும், அதில் முன்னேற்றமும் உண்டாகவும், வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்து வழிபாடு செய்து வாருங்கள். நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

அதேபோல், பைரவருக்கு செவ்வரளி மலர் மற்றும் புனுகு சாத்தி வழிபட்டு வந்தால் அரசுப் பணிக்கான தேர்வுகளில் நூறு சதம் வெற்றி கிடைக்கும்.

சனி பகவானுக்கு நல்லெண்ணெய் காப்பு, நீலநிற மலர்கள், கருப்பு வஸ்திரம், எள் கொண்டு செய்த பலகாரம், எள் கலந்த தயிர்சாதம் நிவேத்தியம் செய்துவந்தால், அரசு பணி மற்றும் அரசியல் பதவியும் கிடைக்கும்,

அரசு தேர்வுகள் எழுதச் செல்கிறீர்களா? மாணவர்கள் தேர்வு எழுதப் போகிறீர்களா? காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சித்ரகுப்தன் ஆலயம் சென்று, நோட்டு பேனா முதலானவற்றை சித்ரகுப்தனுக்குத் தந்து, ஏழு நெய் தீபம் ஏற்றுங்கள். தெரியாத கேள்விக்கும் விடை கிடைக்கும்.  காரணம் ஞாபக சக்தியை அதிகப்படுத்துபவர் இந்த சித்ரகுப்தன் என்பதை மறந்துவிடாதீர்கள்.

கல்வியும் ஞானமும் தந்தருளும் ஹயக்கிரீவரின் மூல மந்திரத்தை பாராயணம் செய்துவாருங்கள். சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு சாலையில் மகேந்திராசிட்டிக்கு அருகில் உள்ள செட்டிபுண்ணியம் என்ற ஊரில் இருக்கும் ஹயக்கிரீவர் ஆலயத்திற்கு சென்று தரிசித்து வந்தாலும் நினைவுத்திறன் அதிகரிக்கும். விரும்பிய கல்வி, நல்ல வேலை மன அமைதி கிடைக்கும், 

நாள் செய்யாததை, கோள் (கிரகம்) செய்யாததை..... இறை நம்பிக்கை செய்யும் என்பதே முக்கியம்.

இன்னும் சில விவரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

- தெளிவோம்

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close