[X] Close

விவிலிய மாந்தர்கள்: எலியா எனும் ஊழியர்!


  • kamadenu
  • Posted: 23 May, 2019 08:58 am
  • அ+ அ-

-ஜோ. ஆரோக்யா

இயேசுவின் காலத்துக்கு முன்பு கடவுளின் ஊழியர்கள் பலர் இஸ்ரவேல் தேசத்தில் தீர்க்கதரிசிகளாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் ஒருவர் எலியா. இவர், ஆகாப் என்ற அரசன் இஸ்ரவேலை ஆண்டுவந்தபோது அங்கே வாழ்ந்துவந்தார்.

ஆகாப், சீதோன் நாட்டின் இளவரசியான யெசபேலை திருமணம் செய்துகொண்டான். அவள் தனது தேசத்தின் கடவுளாகிய பாகாலை இஸ்ரவேலுக்குக் கொண்டுவந்து நாடு முழுவதும் அதன் சிலையை நிறுவி, அதை வணங்கும்படி யூதர்கள் உள்ளிட்ட மக்கள் அனைவரையும் வற்புறுத்தினாள்.

பாகாலை வணங்காதவர்களைக் கொலை செய்தும் நாட்டைவிட்டுத் துரத்தவும் செய்தாள். ஆனால் ஆகாப் அரசனுக்கும் யெசபேல் ராணிக்கும் தீர்க்கதரிசி எலியா பயப்படவில்லை. பரலோகத் தந்தையாகிய கடவுளை விட்டு விலகிச் செல்ல வேண்டாம் என்று மக்களிடம் எடுத்துக் கூறினார்.

ஆனால் மக்கள், அரசனுக்கும் அரசிக்கும் பயந்து நடுங்கினார்கள். பரலோகத் தந்தையே உலகைப் படைத்துக் காக்கிறார் என்பதற்கு அடையாளமாக அவர் கடவுளின் பெயரால் பல அற்புதங்களைச் செய்தார்.

அரசனுக்கும் அரசிக்கும் மந்தைகளாக உண்மைக் கடவுளை மறந்துசென்ற மக்களுக்கும் பாடம் புகட்டுவதற்காக ‘மழை பெய்யக் கூடாதென்று அவர் கடவுளை நோக்கி பிரார்த்தனை செய்தபோது, பூமியில் மூன்றரை வருஷங்களுக்கு மழை பெய்யவில்லை.

பயிர் விளைச்சல் இல்லாமல் போய் இஸ்ரவேலை பெரும் பஞ்சம் தாக்கியது. மக்கள் படும் துன்பத்தைப் பார்த்து எலியா மீண்டும் பிரார்த்தனை செய்தபோது கடவுள்  வானத்திலிருந்து மழை பெய்யச் செய்து பூமிக்கு அதன் பலனைக் கிடைக்கும்படி செய்தார்.

குறையாத மாவும் எண்ணெய்யும்

இஸ்ரவேலில் பஞ்சம் தலைவிரித்தாடிய சமயத்தில் அந்தக் கஷ்டத்தை எலியாவும் அனுபவித்தார். கடவுள், எலியாவிடம், “எலியாவே.. என் ஊழியனே.. நீ சாரிபாத் நகரத்துக்குப் போ. அங்கே வசித்துவரும் ஒரு கைம்பெண் உனக்கு உணவு கொடுப்பாள்” என்றார். கடவுள் கூறியபடியே அந்த நகரத்துக்குச் சென்றபோது கடவுள் கூறிய அந்த ஏழைக் கைம்பெண் விறகுக் குச்சிகளைச் சேகரித்துக்கொண்டிருப்பதை எலியா பார்த்தார்.

அவரிடம் “பெண்மணியே எனக்குக் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்” என்று கேட்டார். அப்பெண் தண்ணீர் கொண்டுவர வீட்டுக்குள் போனபோது, எலியா அவரை அழைத்து, “அம்மா.. தயவுசெய்து எனக்குக் கொஞ்சம் ரொட்டியும் கொண்டுவந்து தாருங்கள்” என்று கேட்டார். அதற்கு அப்பெண்  ‘உங்களுக்குக் கொடுக்க என்னிடம் ரொட்டி இல்லையே.

சிறுவனாக இருக்கும் என் மகனுக்கும் எனக்கும் ஒரு  ரொட்டி சுடுகிற அளவுக்கே சிறிது மாவும் எண்ணெயும் இருக்கின்றன’ என்று சங்கடத்துடன் கூறினார். அப்போது எலியா, “கையில் இருப்பது குறித்து கவலைப்பட வேண்டாம். நீங்கள் எனக்கு ஒரு சிறு ரொட்டியைச் செய்து கொண்டுவாருங்கள்.

மறுபடியும் மழை பெய்து பஞ்சம் தீரும்வரை, உங்களுடைய பானையில் ரொட்டிக்கான மாவும் அதைச் சுடுவதற்கு ஜாடியில் எண்ணெயும் குறையவே குறையாது என்று நம் கடவுளாகிய பரலோகத் தந்தை வாக்குக் கொடுத்திருக்கிறார்” என்று கூறினார்.

இதைக் கேட்ட அக்கைம்பெண், சிறிதும் யோசிக்காமல் எலியா மீது நம்பிக்கை வைத்து இருந்த மாவில் எலியாவின் பசியைப் போக்க ரொட்டி செய்து கொண்டுவந்து கொடுத்தாள். எலியா கூறியபடியே மூன்றரை ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் மழை பெய்து பஞ்சம் தீரும்வரை அக்கைம்பெண்ணும் மகனுக்கும் வயிறார உணவு கிடைத்தது. அவளுடைய ஜாடியில் மாவும் எண்ணெயும் குறையவே இல்லை. இந்த அற்புதம் குறித்து அக்கைம்பெண் எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்தினாள்.

உயிர்கொடுத்த எலியா

பஞ்சம் முடிந்த காலத்தில் அந்த விதவையின் மகனாகிய சிறுவன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டான். எலியாவிடம் இறந்த மகனைத் தூக்கிக்கொண்ட ஓடோடி வந்த அப்பெண் தனது வாழ்க்கையாக இருந்த ஒரே மகன் இறந்துவிட்டான் என்று கூறிக் கதறி அழுதார்.

எலியா அச்சிறுவனின் உடலை வாங்கி, அவனைக் கட்டிலில் படுக்க வைத்தார். பின்னர்  “ தந்தையே.. தயவுசெய்து இந்தச் சிறுவனுக்கு உயிர் கொடுங்கள்”  எனப் பிரார்த்தனை செய்தார். எலியாவின் பிரார்த்தனைக்குச் செவிகொடுத்த கடவுள், அவர் கேட்டபடி சிறுவனுக்கு உயிர்கொடுக்க, அவன் எழுந்து ஓடிவந்து தனது தாயைக் கட்டிப்பிடித்துக்கொண்டான்.

அப்போது கண்ணீர் வழிய அவள் எலியாவிடம், “நீங்கள் உண்மையிலேயே கடவுளுடைய ஊழியர். அதற்கு நானும் என் மகனுமே சாட்சி” என்று கூறினார். எலியாவின் அற்புதம் பற்றிக் கேள்விப்பட்ட இஸ்ரவேல் மக்கள், பாகால் தெய்வத்தை வணங்குவதைக் குறித்து வெட்கித் தலைகுனிந்து மனம் மாறினார்கள்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close