[X] Close

தெய்வத்தின் குரல்: அவர்தான் விக்னராஜா


  • kamadenu
  • Posted: 23 May, 2019 08:59 am
  • அ+ அ-

காஞ்சிபுரத்தில் ‘விகட சக்ர விநாயகர்’ என்ற பெயரில் விநாயகர்  இருக்கிறார். தம்பி மூலவராகவுள்ள குமரக் கோட்டத்தில் அந்த விகட சக்ரர் இருக்கிறார். அதென்ன விகட சக்ரரர் என்றால், சக்ரபாணியான மாமா விஷ்ணுவிடமும் பிள்ளையார் விகடம் பண்ணியிருக்கிறார். ஒரு விநாயக சதுர்த்தியன்று ‘மருமகன் பிறந்த நாளாச்சே!’ என்று மஹாவிஷ்ணு நிறையப் பரிசுகளோடு கைலாசத்துக்கு வந்தாராம்.

குழந்தை சுவாமியானால் அந்தப் பரிசுகளையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு மாமாவின் சக்கரத்தைப் பிடுங்கிக்கொண்டு விட்டாராம். அந்த சுதர்சனம் இல்லாமல் மஹாவிஷ்ணு இருப்பாரா? பிள்ளையாரைப் பிடித்து அவரிடமிருந்து திரும்பி வாங்கிக் கொள்ள முயற்சி செய்தாராம். பிள்ளையார் ‘லபக்’கென்று அதை வாயில் போட்டு அடக்கிக்கொண்டு விட்டாராம்!

மஹாவிஷ்ணு தம்முடைய சதுர்புஜத்தால் இரண்டு காதையும் பிடித்துக்கொண்டு தொப்புத் தொப்பென்று தோப்புக்கரணம் போட்டாராம். அதைப் பார்த்துப் பிள்ளையார் குபீர் குபீரென்று சிரித்தாராம்.

அப்போது வாயில் அடக்கிக்கொண்டிருந்த சக்கரம் வெளியில் வந்து விழுந்ததாம். விஷ்ணு அதை எடுத்துக்கொண்டு விட்டாராம். விஷ்ணுவின் சக்கரத்தைத் தம்மிடம் வைத்துக் கொண்டு விகடம் செய்தவர்தான் விகட சக்ர விநாயகர்.

மூன்று பேர்

கஜகர்ணகர் விசிறிக் காதால் வண்டை விரட்டி விளையாடிச் சிரிக்கப் பண்ணுகிறவர். லம்போதரர் தொங்குகிற தொப்பையாலேயே பார்த்த மாத்திரத்தில் சிரிக்கப் பண்ணுகிறவர். விகடர் அனேக தமாஷ்கள், சேஷ்டைகள், குறும்புகள் செய்து சிரிக்கப் பண்ணுகிறவர். சுமுகராகச் சிரித்த முகத்தோடு முதல் பேரில் வந்தவருக்கு அடுத்தடுத்து இப்படி மூன்று பேர்கள் – கஜகர்ணகர், லம்போதரர், விகடர்.

சதா ஏதாவது கஷ்டத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கிற லோக ஜனங்களை சந்தோஷப்படுத்த விக்னேச்வரருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.

அடுத்த பேர் ‘விக்னராஜர்’. அதாவது விக்னேச்வரர். விக்ன ஈச்வரரேதான் விக்னராஜா. ஈச்வரன் ராஜாவுக்கு ரொம்ப மேலே என்று தோன்றும். ஆனாலும், ‘ரூட் மீனிங்’ பார்த்தால் ஈச்வரனும் ராஜா செய்கிறதைச் செய்பவன்தான். ‘ஈச்’ என்கிற தாதுவுக்கு ஆட்சி பண்ணுவது என்றே அர்த்தம். ஆட்சி பண்ணுகிறவன் ஈச்வரன்.

ஸ்வாமி பெயர்களில் ராஜா, ஈச்வரன், நாதன் என்கிற வார்த்தைகள் ஒரே அர்த்தத்தில்தான் வரும். நடராஜா என்ற பேரையே நடேசன், நடேச்வரன் என்றும் சொல்கிறோம். ரங்கராஜா என்ற பேரையே ரங்கநாதன், ரங்கேசன் என்றும் சொல்கிறோம். ‘திருநாவுக்கு அரசர்’ என்பதையே ‘வாக்-ஈசர்’ என்கிறோம். அப்படி விக்ன ராஜா என்றாலும் விக்னேச்வரர் என்றாலும் ஒன்றுதான்.

8.jpg 

பிரத்யேக அதிகாரம்

பிள்ளையாருக்கு இருக்கப்பட்ட பிரத்யேகமான அதிகாரத்தைக் காட்டுவது விக்னராஜா என்ற பேர்தான். அவர் பிரத்யேகமாக எதற்காக ஏற்பட்ட ஸ்வாமி? ப்ரம்மா சிருஷ்டிக்கு; விஷ்ணு ஸ்திதிக்கு: ருத்ரன் லயத்துக்கு; துர்க்கை வெற்றிக்கு; லக்ஷ்மி செல்வத்திற்கு; சரஸ்வதி படிப்புக்கு; தன்வந்தரி வியாதி நிவாரணத்துக்கு என்றெல்லாம் பரமேச்வரனின் பிரபஞ்ச சர்க்கார்களில் ஒவ்வொருத்தருக்கு ஒரு ஆபீஸ் இருக்கிற மாதிரி, பிள்ளையாருடைய ஆபீஸ் என்ன? விக்னங்களைப் போக்குவதுதான்.

எடுத்த காரியம் எதுவானாலும் அதில் விக்னம் – இடையூறு – உண்டாகாமலிருக்கவே எடுத்த எடுப்பில் அவரைத் தொழுகிறோம். விக்ன நீக்கத்திற்கென்றே ஏகப் பரம்பொருள் எடுத்துக்கொண்ட ரூபம்தான் விக்னேச்வரர் அல்லது விக்நராஜா.

விக்னத்துக்கு ஈச்வரர், ராஜா என்றால் விக்னங்களை உண்டாக்குவதில் தலைவர் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக்

கூடாது. விக்னங்களை அடக்கி அழிப்பதால் அவர் விக்ன ராஜாவாக இருக்கிறார். ஒரு ராஜாவுக்கு முக்கியமான வேலை சத்ருக்களை அடக்கி வைப்பது. அப்படி விக்னங்களை அடக்கி வைக்கும் விக்ன ராஜா அவர்.

ஆக்குபவர் அழிப்பவர்

ஆராய்ச்சிக்காரர்கள் ஆதியில் உக்கிர தேவதையாகப் பிள்ளையார் இருந்தபோது அவர்தான் விக்னங்களை உண்டு பண்ணுபவராக இருந்தாரென்றும், அதனால்தான் விக்நேச்வரர் என்ற பேர் ஏற்பட்டதென்றும், அப்புறம் சௌம்ய மூர்த்தியாக அவரை வழிபட ஆரம்பித்த பிறகும் அந்தப் பெயர் நீடித்து விட்டதென்றும் சொல்கிறார்கள்.

அங்கங்கே அவர் விக்னமும் கொஞ்சம் உண்டாக்கித்தான் இருக்கிறார். பரமசிவனே திரிபுர சம்ஹாரத்திற்குப் புறப்படும்போது தம்மை நினைக்காமல் புறப்பட்டதால் அவருடைய ரதத்தின் அச்சு முறிந்து போகும்படிப் பண்ணியிருக்கிறார்.

ஆனால் இதெல்லாமும், பரமேச்வரனேயானாலும் அவருங்கூட லோக நிர்வாகத்தில் மற்ற தெய்வங்களுக்கு இருக்கிற அதிகாரத்தை மதித்து அதற்குக் கீழ்ப்படிந்து காட்டுவதுதான் முறை என்று புரிய வைப்பதற்குத்தானேயொழிய, கெடுதல் பண்ண வேண்டும் என்பதற்காகவே கெடுப்பதல்ல. சட்டத்துக்குக் கீழ்ப்படிய; தனி ஆசாமியைவிட – அவன்

சாமியாகவே இருந்தால்கூட – சட்டந்தான் பெரிது என்று புரியச் செய்வதற்கும், அடங்கிப் போகும் அடக்க குணம் எவருக்கும் இருக்க வேண்டும் என்று பாடம் கற்பிப்பதற்காகவும்தான் அவர் எப்போதாகிலும் விக்னம் உண்டாக்குவது.

அதனால் அப்போதைக்கு பாதிக்கப்பட்டவர்கள் முடிவிலே நாசமானதாகக் கதையே கிடையாது. ஏனென்றால், விக்னத்தை உண்டாக்கிய விக்நேச்வரரே தத்-த்வாரா [அதன் வழியாக] அதனால் பாதிக்கப் பட்டவருக்கு, ‘நாம் பராசக்தியின் ஆட்சியில் விக்ன நிவாரணத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகார புருஷரை மறந்து நாமே சாதித்துவிட முடியும் எனறு காரியத்தில் இறங்கியதால்தான் இப்படி உபத்ரவம் உண்டாகியிருக்கிறது’ என்ற நல்லறிவையும் ஊட்டி, அவர் அடக்கத்தோடு பிரார்த்தனை பண்ணும்படிச் செய்துவிடுவார். அப்புறம் ஒட்டிக்கு இரட்டியாக நிரம்ப அனுக்ரஹம் புரிந்து விடுவார். அவர்தான் விக்னராஜா.

(தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதி)

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close