[X] Close

உங்க வீட்டில் குழந்தை கிருஷ்ணர் படம் இருக்கா? பிள்ளை வரம் நிச்சயம்!


balakrishnar-pillai-varam

  • kamadenu
  • Posted: 30 May, 2018 18:19 pm
  • அ+ அ-

ஜோதிடர் ஜெயம் சரவணன்

புத்திரதோஷத்தைப் பற்றி மட்டும் எழுத ஆரம்பித்தால் ஒரு பெரிய புத்தகமே போடலாம். அவ்வளவு விஷயங்கள் உள்ளன.  பரிகாரம் என்று நீங்கள் ஏமாறாமல் இருக்கவும, உண்மையான பரிகாரம் எது என்பதை உணர்த்தவும் இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவும்.

மற்ற எந்த தோஷத்தைவிடவும் இந்த புத்திர தோஷத்திற்காக பரிகாரம் என்ற பெயரில் பணத்தையும் மனநிம்மதியையும் தொலைப்பவர்கள்தான் அதிகம். எனவே பொறுமையாகவும், கவனமாகவும் படியுங்கள். எளிய பரிகாரம் மூலம் இறைவனின் அருளோடு எல்லா நன்மையும் உண்டாகும். அழகன் முருகன் அருள்புரிவான்.

ராகு,கேது, குரு இவர்கள் தரும் புத்திர தோஷத்தைப் பார்த்தோம், இனி மற்ற கிரகங்கள் தரும் புத்திர தோஷத்தைப் பார்க்கலாம்,

அதற்கு முன்னர் குரு பகவான் எப்படி எல்லாம் தோஷத்தைத் தருகிறார் என்று பார்க்கலாம்.

அஸ்தமனம் என்னும் ஒரு நிலை மற்றும் வக்கிரம் என்னும் ஒரு நிலை மற்றும் கிரகயுத்தம் என்னும் நிலை என வரிசையாகப் பார்க்கலாம்.

குரு பகவான் அஸ்தங்கம் என்னும் அஸ்தமனம் அடைந்தால் புத்திர பாக்கியத்தில் தாமதம் ஏற்படும்.

வக்கிரம் என்னும் நிலை அடைந்தாலும் தாமதம் ஏற்படும்.

குரு பகவான் கிரக யுத்தத்தில் தோற்றாலும் தாமதம் என்ற நிலை ஏற்படும்.

’’இதை நாங்கள் எப்படி அறிவது? “ என்கிறீர்களா?

நீங்கள் எளிமையாக அறியம்படி கூறுகிறேன்.

உங்கள் ஜாதக ராசி மற்றும் அம்சம் கட்டம் அருகருகே இருக்கும்.

அதில் ராசிக் கட்டத்தில் குரு பகவானும் சூரிய பகவானும் ஒரே கட்டத்தில் இருந்து, அம்ச கட்டத்திலும் ஒரே ராசியில் இருந்தால் குரு அஸ்தமனம் அடைந்துள்ளார் என அறியலாம். மேலும் அம்ச கட்டத்தில் சூரியன் இருக்கும் கட்டத்திற்கு முன், பின் கட்டங்களில் இருந்தாலும் அஸ்தமனமே.

வக்கிரம் அறிவது எப்படி?

ராசிக் கட்டத்தில் குரு இருக்கும் கட்டத்தில் இருந்து சூரியன் 5, 6, 7, 8, 9 ஆக இருந்தால் குரு வக்கிரம் என்னும் நிலையை அடைவார். ( இதில் 5 மற்றும் 9 கட்டங்களில் பாதியில் இருந்து கணக்கிட வேண்டும் இதை ஜோதிடர்கள் மட்டுமே அறிய முடியும்).

கிரக யுத்தம்? குரு பகவான் இருக்கும் கட்டத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருக்க அங்கே “கிரகங்களுக்குள் யுத்தம் ஏற்படும்.” அதில் வெற்றி பெற்றவர் மற்ற கிரகங்கள் தரவேண்டிய பலன்களை தானே ஏற்றுக்கொண்டு பலன் தருவார்,

இந்த யுத்தத்தில் குரு தோற்றாலும் புத்திர பாக்கியத்தில் தாமதம் ஏற்படும்,

அப்படியானால்... இதற்கு என்ன பரிகாரம் உள்ளது?

எளிமையான பரிகாரங்களே போதும்,

குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வியாழன் தோறும் கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து தானம் தாருங்கள்.

அரசமர விநாயகரை அதிகாலை 5 மணிக்கு 48 முறை வலம் வாருங்கள்.

குருவாயூர் கண்ணனை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக்கொள்ளுங்கள். உடனே புத்திரபாக்கியம் உண்டாகும்.

திருச்செந்தூர் சென்று முருகனை வேண்டுங்கள். புத்திரத்திற்கு உத்திரவாதம் உண்டு.

வீட்டுக்கு அருகில் உள்ள குழந்தைகளை வரவழைத்து, லட்டு மற்றும் சர்க்கரைப் பொங்கல் மற்றும் பாயசம் உண்ணக்கொடுங்கள். அவர்களோடு நேரத்தைச் செலவழியுங்கள். அந்த மழலைகளின் சப்தமானது, சிறந்த அதிர்வலைகளை உண்டு பண்ணும்.

யானைக்கு உணவு வழங்குங்கள் (வாழைப்பழம், கரும்பு, தென்னை ஓலை). நிச்சயம் உண்டு குழந்தை.

கருமாரி அம்மனை மனதார வணங்குங்கள். கரு உண்டாகும். அதிசயம் உணர்வீர்கள்,

குழந்தை கண்ணனின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுங்கள். குழந்தை பாக்கியம் சர்வ நிச்சயம்.

மிக முக்கியமாக “ குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்யுங்கள்” குலதெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபட்டு தானம் செய்யுங்கள்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று சிவசக்தி சொரூபத்தை வழிபட குழந்தை பாக்கியம் ஏற்படும்.

ஶ்ரீஅனுமன், நித்ய பிரம்மச்சாரிதான். ஆனாலும் கேட்ட வரத்தை கேட்ட படி வழங்குவார் ஆஞ்சநேயர். எனவே ஸ்ரீராமஜெயம் எழுதி வணங்குங்கள். நல்ல வழி கிடைக்கும்.

அபிராமி அந்தாதி படித்து வாருங்கள். அழகான குழந்தை கிடைக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக வறியோர்க்கு உதவுங்கள். சந்தான பாக்கியம் முதலான சகல நல்லதுகளும் நடக்கும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close