[X] Close

உட்பொருள் அறிவோம் 15: மகான்கள் திறக்கும் கதவுகள்


15

  • kamadenu
  • Posted: 16 May, 2019 11:52 am
  • அ+ அ-

-சிந்துகுமாரன்

கல்லாக, மண்ணாகத் தொடங்கித் தாவரமாகப் பரிணமித்து, விலங்காக வளர்ச்சி கொண்டு, மனிதனாக எழுச்சி கொண்டிருக்கும் இந்த வளர்ச்சியின் முறைப்பாடு சுலபமானது அல்ல. ஒரு கட்டத்திலிருந்து மறு கட்டத்துக்குப் போகும்போது பல இடர்களை எதிர்கொண்டுதான் கடந்து போக வேண்டியிருக்கிறது. குழந்தை பிறந்து, தவழ்ந்து, எழுந்து நடக்கும் வரையில் தட்டுத் தடுமாறிக் கீழே விழுந்து எழுந்துதானே வளர வேண்டியிருக்கிறது?

அப்படி இந்தப் பிரபஞ்சம் பரிணமிக்கும் மலர்ச்சியில் பல தடைகளையும் எதிர்கொண்டு அவற்றைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. பொதுவாக, ஒரு கட்டத்தில் இருக்கும் ஜீவன்கள், அந்தக் கட்டத்திலேயே பொதிந்து இருப்பதால், மறுகட்டத்துக்குச் செல்ல விழைவதில்லை.

இருக்கும் நிலையிலேயே இருந்துவிடத்தான் முயல்கின்றன. ஆனால் அப்படி இருந்துவிட்டால் பிரபஞ்சம் நின்று போய்விடும். அவ்வாறு நின்றுவிடாமல் மேலே செல்லத் தூண்டுகோலாய் இயங்குவதுதான் அவதார புருஷர்களின் வேலை.

அவதார புருஷர்கள் இந்த வேலையைச் செய்யும்போது பல இடர்களைச் சந்திக்கிறார்கள். அனைத்து மனிதர்களின் பிரதிநிதியாக அவர்கள் இந்த இடர்ப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். துன்பங்களைத் தாங்களே ஏற்றுக் கொள்கிறார்கள். புதிய கதவுகளைத் திறப்பதுதான் அவர்களது முக்கிய வேலை.

அதில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை அவர்கள் நம் சார்பில் அனுபவிக்கிறார்கள்.  இந்த அர்த்தத்தில்தான்,  ‘இயேசு நம் பாவங்களுக்காகச் சிலுவையில் மாண்டார்,' என்னும் கருத்து இரண்டாயிரம் வருடங்களாக நிலவி வருகிறது. அதில் முக்கியமான உண்மை இருக்கிறது.

அறியாமையே பிரிவுகளாக…

இயேசுபிரான் சிலுவையில் மாண்டது முழு மனித இனத்துக் காகவும்தான். ஜாதி, மதம், நாடு, இனம், போன்ற பிரிவுகள் எல்லாம் அறியாமையில் தோய்ந்திருக்கும் மனத்தில் மட்டும்தான் இருக்கிறது. உண்மையில் மனிதப் பிரக்ஞை என்று ஒன்றுதான் இருக்கிறது. அதில் பிரிவுகளேதும் கிடையாது. நாம் ஒவ்வொருவரும் மனிதப் பிரக்ஞை என்னும் அந்த உயிருள்ள விருட்சத்தின் மலர்கள்.

நம் ஒவ்வொருவரின் செயல்பாடும் அந்தப் பிரக்ஞை முழுவதையுமே பாதிக்கிறது. அதனால்தான் நாம் ஒவ்வொருவரும், நம் ஒவ்வொருவரின் ஒவ்வொரு செயலும், முழு மனித குலத்துக்கும் பொறுப்பு. மனிதகுலத்தின் எதிர்காலத்துக்கும் பொறுப்பு. இந்தக் காரணத்தினால் ஒரு தனிமனிதன் தன் ஆழங்களுக்குள் சென்று அங்கு மாற்றம் ஏற்பட வழிவகுத்தால் மொத்த மனிதப் பிரக்ஞையையே அது மாற்றத்துக்குள்ளாக்கிவிட முடியும்.

ஆனால் தன் ஆழங்களுக்குள் செல்லும் பாதை கரடுமுரடானது. மிகக் கடினமானது. ஆபத்து நிறைந்தது. பயணத்தில் கிளம்பும் பல்லாயிரக்கணக்கான நபர்களில் ஒரு சிலர் மட்டுமே இறுதிக் குறிக்கோளைச் சென்றடைகிறார்கள். பெரும் ஆரவாரத்துடன் தொடங்கும் பலர் பாதி வழியில் தம் பயணத்தைக் கைவிட்டு சமூகம் படைத்துள்ள வாழ்க்கை முறையை மேற்கொண்டுவிடுகிறார்கள். இன்னும் சிலர் தாம் அறிந்துகொண்டுள்ள அரைகுறை விஷயங்களை வியாபாரமாக்கி விடுகிறார்கள்.

வாழ்க்கை ஒரு பரிசோதனை

அவதார புருஷர்கள் என்று நாம் அழைக்கும் மனிதர்கள் மனித குலத்தின் பாதையைச் சீர்ப்படுத்துபவர்கள். அவர்கள் செய்யும் வேலையின் காரணமாக, ஆழ்மனத்தினுள் சென்று நம் தோற்ற மையத்தை நாம் அடையும் பயணம் ஓரளவுக்கு எளிதாகிக்கொண்டு வருகிறது. நம் பிரக்ஞையின் வளர்ச்சிக்காகத் தம்மையே, தம் வாழ்க்கையையே ஒரு புதிய பரிசோதனையாக ஆக்கிக்கொண்டவர்கள் அவர்கள்.

அவர்களுடைய வேலை ஸ்தூலப் பரிமாணத்தில் மட்டுமல்லாமல், பெருமளவுக்குப் புலன்களுக்குப் புலப்படாத சூட்சுமப் பரிமாணங்களில் நடக்கிறது. தம் உடலையும் மனத்தையும் பிரக்ஞையையும் பரிசோதனைக்கூடமாக ஆக்கிக் கொண்டு அவர்கள் நிகழ்த்தும் ரசவாதத்தின் பயன், மனித வாழ்க்கையில் வெளிப்படுவது எதிர்காலத்தில்தான் இருக்கிறது. மனித குலத்தின் எதிர்காலத்தை இப்போது இவர்கள் நிர்ணயித்துக்கொண்டு இருக்கிறர்கள்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் மனிதப்பிரக்ஞை பெரும் அக இருளில் தன்னுணர்வு சிறிதுமற்று இயங்கிக் கொண்டிருந்தது. இந்த அவதார புருஷர்கள்  அந்த இருளை நீக்கும் பொருட்டு, மனித குல விழிப்புதான் தம் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் என்ற கண்ணோட்டத்தில் வாழ்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக பிரக்ஞையில் உள்ளொளி விரியச் செய்திருக்கிறார்கள். பரிணாம வளர்ச்சியைப் பின்னாலிருந்து இயக்கும் இயக்கவிசை இவர்கள்தான்.

நமக்கு இருக்கும் பொறுப்பு

இயேசுபிரான் மட்டுமல்ல. ஒவ்வொரு அவதார புருஷரும் நமக்காக, நம் எல்லோருக்காக, தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள். இந்தப் பிரபஞ்சம் தன்னளவிலேயே முழுமையானது. பகுதிகளால் ஆனது அல்ல. இந்த உண்மை இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மனிதனுக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது. காலில் அடிபட்டால் ஏன் கண்களில் நீர் வழிகிறது? அது போலத்தான் இதுவும்.

உலக அனுபவத்தை, சொர்க்க அனுபவத்தை, 'நான் தனியான ஒரு ஜீவன்' என்ற எண்ணத்துடன் வாழும் வாழ்க்கையைப் பெரிதாக நினையாமல், இங்கே அவதரித்து, வலியும் துயரமும் அனுபவித்துக் கடந்து, நமக்காகத் தம் வாழ்வை அர்ப்பணிக்கும் அவதார புருஷர்கள் பரம்பொருளின் நேரடிப் பிரதிநிதிகள். கடவுளின் சேவகர்கள்.

உண்மையில் நாம் அனைவருமே கடவுளின் சேவகர்கள்தாம். ஒரு அளவில் அவதார புருஷர்கள்தாம். நம் ஒவ்வொருவருக்கும் அந்தப் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அந்தப் பொறுப்பைப் பணிவுடன் ஏற்றுக் கொண்டு செயல்பட நம்மில் எவ்வளவு பேர் தயாராக இருக்கிறோம்? அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதென்றால் உடனே குடும்பத்தை விட்டு, எல்லாவற்றையும் விட்டு சந்நியாசியாக ஆகிவிட வேண்டும் என்பதல்ல பொருள்.

ஒவ்வொருவரும் தனக்குள்ளே, தன் பிரக்ஞையின் உள்ளே,  செய்ய வேண்டிய வேலை இது. இந்த சத்திய சோதனை ஒவ்வொரு மனித ஜீவனின் பிரக்ஞைக்கு உள்ளேதான் நடக்க முடியும். மலையேறி உச்சியை அடைவதே நம் குறிக்கோள் என்றால் அந்த அனுபவத்தில் உள்ள  கஷ்டங்களுக்கும் சுகங்களுக்கும் ஆட்பட்டுத்தானே ஆகவேண்டும்? அதுபோலத்தான் இதுவும்.

நம்மில் பல பேர் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரானால் இந்த வாழ்க்கை இன்னலும் துன்பமும் இல்லாமல் போய், சொர்க்க பூமியாகத் திகழ முடியும். சொர்க்கமும் நரகமும் இங்கேதான் இருக்கின்றன. நாம்தான் அவற்றை உருவாக்குகிறோம். எல்லாம் உண்மையில் நம் கையில்தான் இருக்கிறது. கடவுளின் சேவகர்களாக ஆக நாம் தயாரா?

(சொர்க்கத்தை உருவாக்குவோம்) கட்டுரையாளர்,

தொடர்புக்கு:

sindhukumaran2019@gmail.com

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close