[X] Close

பாம்பன் சுவாமிகள் குருபூஜை: ஆதரித்தருளும் பரம ரகசிய சக்தி


  • kamadenu
  • Posted: 16 May, 2019 11:35 am
  • அ+ அ-

மக்கள் துன்ப நீக்கமும், இன்ப ஆக்கமும் பெறவேண்டுமென்ற கருணை உள்ளத்தால் சாத்திரமாகவும் தோத்திரமாகவும் 6 ஆயிரத்து 666 பாடல்களையும் 32 வியாசங்களையும் அருளியவர் பாம்பன் சுவாமிகள்.

‘என்னை ஆதரித்தருள் பரம ரகசிய சக்தி என்னை நம்பினாரை ஆதரியாது விடுமோ! ஐயம் வேண்டாம்!’ என்ற நம் அச்சமகற்றும் வாசகத்தைக் கூறிய அவர் 18-ம் நூற்றாண்டின் மத்தியில் ராமேஸ்வரத்தில் தோன்றி 1929-ம் ஆண்டில் சென்னையில் மறைந்தவர்.

ராமநாதபுரத்தையடுத்த பிரப்பன்வலசை சிற்றூரிலுள்ள மயானத்தில் ஆறு அடிச் சதுரக்குழியில் 35 நாட்கள் ஊன் உறக்கமின்றி தொடர்ந்து நிஷ்டை செய்து முருகப்பெருமானை நேரில் தரிசித்து உபதேசம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

“35 நாள் கானுந் தனி நிட்டையில் காத்திருந்த ஞான்று கௌபீனதாரியாய் வெளிப்பட்ட இறைவன் எமக்கொரு மொழி உணர்த்தியருளின்” என்று தம்முடைய ‘தகராலய ரகசியம்’ நூலில் பகிர்ந்துள்ளார். ஞானமார்க்கம் மூலம் வீடுபேறு அடைய முடியும் என்று நம்பிய மகான் அவர்.

முருகனின் தரிசனம்

‘வானம் இடிந்து தலையில் விழும்படி வம்பு வந்தாலும் அந்தக் கானமயில் முருகையன் திருவருள் கைவிட மாட்டாதே’ என்று அவர் பாடிய பாடலுக்கேற்ப வாழ்ந்த வாழ்க்கை அவருடையது. 1923-ம் ஆண்டு வடசென்னை தம்புச்செட்டித் தெருவில் வந்த குதிரை வண்டி ஒன்று பாம்பன் சுவாமிகளின் மீது மோதியதால், அவரது இடது கால் எலும்பு முறிந்தது.

6.jpg

அவருக்கு 73 வயதான நிலையில் முறிந்த எலும்பு ஒன்று சேருவதற்கு வாய்ப்பில்லை என்று அரசுப் பொதுமருத்துவமனையில் கூறப்பட்டது. மருத்துவமனையில் சேர்ந்த 11-ம் நாள், பாம்பன் சுவாமிகள் சண்முகக் கவசத்தைப் பாடியபடி உறங்கிப் போனபோது, மயூர வாகனத்தில் முருகன் காட்சி தந்ததாகக் கூறப்படுகிறது.

கால்கள் தரையில் பதியாமல் ஆடிய பொன்னாய் ஒளிரும் மயில்கள் அவை என்று பாம்பன் சுவாமிகள் வர்ணித்துள்ளார். அறுவை சிகிச்சை தவிர வேறு வழியில்லையென்ற நிலையில் முறிந்த எலும்புகள் சேர்ந்து சீக்கிரத்தில் குணம்பெற்றார்.

திருவான்மியூரில் சமாதி

1929-ம் ஆண்டு மே மாதம், 29-ம் தேதி இரவு நெடுநேரம் பாம்பன் சுவாமிகள் விழித்திருந்தார். உடன் அவரது சீடர்கள் ராஜாபாதர் முதலியாரும் மதுரை முதலியாரும் இருந்தனர். “மயூரவாகன சேவை விழாவை விடாது நிகழ்த்தி வாருங்கள்.

என்னுடைய உடலைத் திருவான்மியூரில் சேர்த்துவிடுங்கள்.” என்று கூறியுள்ளார். மறுநாள் வியாழக்கிழமை காலையில் சுவாமிகள் சத்தமாக மூச்சை உள்ளுக்கு இழுத்தார். அது வெளிவராமல் உந்தியிலேயே எழும்பி அடங்குவதாயிற்று.

- செ.வே. சதாநந்தன்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close