[X] Close

சூபி வழி 15: ஆசையும் பற்றும் தொலைவாக்கும்


15

  • kamadenu
  • Posted: 16 May, 2019 11:27 am
  • அ+ அ-

-முகமது ஹுசைன் 

இந்தச் சொற்களை எனது உதடுகளிலிருந்து உதிர்ப்பது யார் ?

                                                               - ஜலாலுதீன் ரூமி

உலகைத் துறந்து, அதன் சுகங்களைத் துறந்து, துறவறத்தை விரும்பி ஏற்று, கடும் தவத்தாலும் ஆழமான பக்தியாலும், ஆன்மிகத்தின் பரிபூரண நிலையை அடைந்த பெரும் ஞானியே அப்துல் வாஹித் இப்னு ஸைத். தனது வாழ்நாள் முழுவதும் செல்வத்தை மனத்தாலும் தீண்டியதில்லை. பணத்தைக் கையால் தொட்டதில்லை.

”செல்வத்தை ஒதுக்கி, பணத்தைத் தீண்டாமல் இவ்வுலகில் நீங்கள் வாழ்வதன் காரணம் என்ன?” என்று ஒருவர் வாஹித்திடம் கேட்டார். அதற்கு அவர் “உலக வாழ்வின் இன்பத்தை விரும்பும் மக்களுக்குச் செல்வமும் பணமும் பிரதானமாக இருக்கலாம்.

இறைவனின் அன்பை மட்டும் விரும்பும் என் போன்ற துறவிகளுக்கு, இந்த உலகின் எதுவும் பிரதானமாக இருக்காது. எங்களின் கையும் வயிறும் பையும் எப்போதும் காலியாகவே இருக்கும். அவ்வாறு இல்லையெனில், துறவி என்று அழைப்பதற்கே தகுதியற்றவராக மாறி விடுவோம்.” என்று பதிலளித்தார்.

பஸராவைப் பூர்வீகமாகக்கொண்ட வாஹித், ஸைத் அவர்களுக்கு மகனாக எட்டாம் நூற்றாண்டில் பிறந்தார். இறையாசியால் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தைப் பருவம் இவருடையது. பசியை விடப் பக்தியே இவருக்குப் பிரதானமாக இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய, ஆன்மிக ஞானியான ஹஸன் அவர்களிடம் மறைஞானத்தின் அடிச்சுவடுகளையும் மெய்ஞானத்தின் ரகசியங்களையும் கற்றார். அதன் பின்னர் ஹபீப் அஜமீ, ஹூமைல் இப்னு ஸியாத் ஆகியோரிடம் பல நிலைகளைக் கற்றுத் தேர்ந்தார். கற்றல் நிறைவுற்றபின், ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 40 ஆண்டுகள் கடுமையான துறவறத்தை மேற்கொண்டார்.

அவரது துறவு வாழ்வு நோன்பாலும் தொழுகையாலும் நிறைந்த ஒன்றாக இருந்தது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உட்கொண்டார். அதுவும் தனது தொழுகைக்குத் தேவையான உடல்

வலுவைப் பெறும் நோக்கில் சிறிதளவு மட்டுமே உணவை உட்கொண்டார். அவர் தனது துறவறத்தை ஒரே இடத்தில் சுருக்கிக் கொள்ளவில்லை. கடுமையான துறவின்போதும் அவர் இடைவிடாத பயணங்களைப் பல நாடுகளில் மேற்கொண்டார். அந்தப் பயணங்களின்போது சந்திக்கும் மனிதர்களிடமிருந்து ஞான ஒளியைப் பெற்று, தனது ஞானத்தின் சக்தியை அதிகரித்துக்கொண்டார்.

காடும் வீடும் ஒன்று

ஒருமுறை அடர்ந்த காட்டின் நடுவே பயணித்தபோது, அங்கே 20 ஆண்டுகளுக்கு மேலாகக் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்த ஒரு முதியவரைச் சந்தித்தார். ”இந்த அடர்ந்த காட்டில் உங்களுக்குத் துணையாக இங்கு யாருமில்லையா?” என்று அவரிடம் கேட்டார்.

அதற்கு அவர் “எங்கும் நிறைந்த இறைவன் இங்கு மட்டும் இல்லை என்று நினைக்கிறாயா?” என்று பதில் கேள்வி கேட்டார். "எங்கும் இறைவன் இருக்கும்போது, நீங்கள் ஏன் இந்தக் காட்டில் வந்து தனியே வசிக்க வேண்டும்” என்று வாஹித் கேட்டார்.

அதற்கு அவர் "மெய்ஞ்ஞானிகளின் இதயத் தேடலாக இருக்கும் எல்லையற்ற பரம்பொருளை நேசிப்பவனுக்குக் காடும் ஒன்றுதான், வீடும் ஒன்றுதான். உலக மக்கள், துறவிகளுக்கு மிகுந்த அயர்ச்சியை ஏற்படுத்தி, அவர்களின் அறிவை நீர்த்துப் போகச் செய்துவிடுவர்.

அதனால்தான், நான் இங்கே தனிமையில் எனது இறைவனுடன் மட்டும் வாழ்கிறேன்” என்று கூறி, வாஹித்தின் ஞானத்தை மேலும் கூர்மையாக்கினார்.

இந்தச் சந்திப்பால்தானோ என்னவோ வாஹித் தன்னுடைய சீடர்களிடம் எப்போதும் “இந்த உலகம் பாவங்களின் உறைவிடம். ஆசையும் பற்றும் உங்களை இறைவனிடமிருந்து தொலைவுபடுத்தும். ஆசை அனைத்து இன்னல்களின் ஆணிவேர். உலகையும் பற்றையும் ஆசையையும் மனத்திலிருந்து தள்ளி வைப்பவரே உண்மையான ஞானி.

 இறைவனே ஞானிகளின் உலகம். இறைவனே ஞானிகளின் ஆசை. இறைவனே ஞானிகளின் பற்று. ஞானிகளும் தேடல்களும் வாழ்வும் இறைவனைக் குறித்தவையாக மட்டும் இருக்கும். நீங்கள் ஞானிகளாக மாறிவிட்டீர்களா என்பதை நீங்களே முடிவுச் செய்துகொள்ளுங்கள்” என்று கூறுவார்.

தூக்கமும் ஓய்வும் ஆடம்பரம்

முதுமைப்பருவத்தில் வாஹித் மெய்ஞான நிலையின் உச்சத்திலிருந்தார். பக்தியின் உருவமாக அவர் ஒளிர்ந்தார். அவர் வாயிலிருந்து உதிர்க்கப்படும் வார்த்தைகள் ஞானத்தின் பிழம்பாக இருந்தன.

அவரது இருப்பே மக்களை நல்வழிப்படுத்தியது. அவர் உதிர்க்கும் வார்த்தைகள் கேட்பவர்களை ஆன்மிகப் பரவசத்துக்கு இட்டுச் சென்றன.. “தூக்கமற்றவனாகவும் ஓய்வற்றவனாகவும் இறைவன் இருக்கும்போது, அவனது அடிமைகளான நமக்குத் தூக்கமும் ஓய்வும் ஆடம்பரம் என்பதை மறவாதீர்கள். இறைவணக்கத்தைவிட இந்த உலகில் பெரியது எதுவும் எப்போதும் இல்லை என்பதை மறவாதீர்கள்” என்று தான் செல்லுமிடம் எல்லாம் கூறினார்.

வயது ஏற ஏற, வாஹித் இறைச்சிந்தனையில் முற்றிலுமாக மூழ்கத் தொடங்கினார். கொட்டும் பனியிலும் வெறும் மேனியுடன் திரிந்தார். குளிரையோ அது அளிக்கும் நடுக்கத்தையோ உணரும் நிலையை இழந்தார். மெய்ஞான நிலையே அவரது நிலையாக இருந்தது. அவரது உள்ளும் புறமும் இறை எண்ணங்களே ததும்பி வழிந்தன.

அவரைக் காண ஏராளமான மக்கள் அவரது வீட்டின் முன் கூடுவது வாடிக்கை. ஆனால், நாளாக ஆக அவர் அங்கே கூடிய மனிதர்களை மறக்கத் தொடங்கினார். உரை கேட்க வரும் மக்கள் இறுதியில் வேடிக்கை பார்க்கவரும் மக்களாக மாறினர். எனினும், தன்னுள் திளைத்து, இறையன்பில் மூழ்கியிருக்கும் அவரது இருப்பே அந்த மக்களுக்குப் போதுமானதாக இருந்தது.

தனது இறுதிக் காலத்தில், வாஹித் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அவரைச் சுத்தம் செய்து தொழுகைக்குத் தயார் செய்ய ஒரு ஊழியர் இருந்தார். 793- ம் ஆண்டு ஜூன் 13 அன்று வெளியே சென்றிருந்த அந்த ஊழியர் குறித்த நேரத்துக்குள் வரவில்லை.

தொழுகை நேரம் நெருங்கியது. மிகுந்த சிரமத்துடன் எழுந்து, தன்னைத் தானே சுத்தம் செய்துகொண்டு வாஹித் தொழுகைக்குத் தயாரானார். மிகுந்த சிரமத்துடன் தொழுதும் முடித்தார். அந்தத் தொழுகையே அவரது கடைசி தொழுகை. ஆம். தொழுகையை முடிந்த மறுகணம் இவ்வுலகை விட்டு விடுதலை அடைந்தார்.

(விடுதலை அடைவோம்)

கட்டுரையாளர், தொடர்புக்கு:

mohamed.hushain@thehindutamil.co.in

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close