[X] Close

இந்து தமிழ் திசை வார ராசி பலன்கள் மே 9 – மே 15 வரை (துலாம் முதல் மீனம் வரை)


9-15

  • kamadenu
  • Posted: 09 May, 2019 12:19 pm
  • அ+ அ-

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்பார்த்தபடி பணவரவு இருக்கும். சேமிப்புக்குத் திட்டமிடுவது அவசியமாகும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் நடந்தேறும். புதிய கடனுக்கான முயற்சிகளை இக்காலகட்டத்தில் செய்ய வேண்டும். உத்தியோகஸ்தர்கள், வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேர பொன்னான காலமிது.

மேலிடத்தில் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் தேக்கநிலை மாறி உற்சாகம் பிறக்கும். சுபகாரியங்களில் சிக்கல்கள் விலகும். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை அதிகரிக்கும். பிதுரார்ஜித சொத்து விஷயமாக ஒரு நல்ல முடிவு வரும். கலைத் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். அரசியல்வாதிகளுக்கு, பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை கூடும். செல்வாக்கு ஓங்கும். மாணவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. எதிர்காலப் படிப்புகளுக்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்கலாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, நீலம்

எண்கள்: 4, 6, 9

பரிகாரம்: கோளறு பதிகம் படித்து. சிவன் கோயிலுக்கு இளநீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் நிதானத்தைக் கடைபிடியுங்கள். சில விரயங்கள் ஏற்பட்டாலும் அவை சுபச்செலவுகளென்பதை உணருங்கள். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தைச் சீரமைப்பதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும். வங்கிக் கடன்கள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தைச் சாராத ஒருவரால் தொழிலில் சிரமம் ஏற்பட்டுப் பின்னர் மறையும்.  பெண்களுக்கு, உற்றார் உறவினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மனநிறைவடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

கலைத் துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அரசியல்வாதிகளுக்கு, நல்மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். மாணவர்களுக்கு, படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, மேற்கு

நிறங்கள்: சிவப்பு, நீலம், பச்சை

எண்கள்: 3, 6, 7

பரிகாரம்: துர்க்கையை வழிபடுவது நல்லது. மதுவை அறவே விட வேண்டும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம். உங்கள் யோசனைகளை மற்றவர்கள் கேட்டு அனுசரித்துச் செல்வார்கள். தொழிலில் வியாபாரிகள் லாபம் ஈட்டும் காலமிது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். உத்தியோகஸ்தர்கள், வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு அரசு அனுகூலம் உண்டு.

கடன்களிலிருந்து விடுபடுவதற்கு உகந்த நேரமிது. குடும்பத்தில் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையையும் சாதுரியமாகக் கையாள்வீர்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். பெண்களுக்கு,  கூடியமட்டும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பெரியோர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டுச் செய்ய வேண்டும். கலைத் துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களைப் பரிமாறும் முன் பொறுமை, நிதானம் அவசியம். புதிதாக வீடு, மனை வாங்கும் எண்ணம் ஈடேறும். அரசியல்வாதிகளுக்கு, விரும்பிய நண்பர்களைப் பிரியும் நிலை வரலாம். மாணவர்களுக்கு, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.  நண்பர்களுடன் பழகும்போது கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 3, 5, 6

பரிகாரம்: முன்னோர்கள் வழிபாடும் சித்தர்கள் வழிபாடும் நன்று.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் சந்தோஷத் தருணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி தனவரவு இருக்கும். தொழிலில் வியாபாரிகள் போட்டி, பொறாமைகளைச் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜிதத்தால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். மேன்மைகளை அடைவீர்கள்.

வெளிநாட்டு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் மிகவும் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும் பெண்கள் திருமண பாக்கியம் கைகூடி வரும். நெடுங்காலமாக குழந்தை பாக்கியம் கிட்டாதவர்களுக்கு நல்லசேதி உண்டு. கலைத் துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள்.

புதிய பதவி, பொறுப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு, அடுத்தவர்களை நம்பி ஏமாற வேண்டாம். யாருடனும் ஒப்பிட்டுப் பேச வேண்டாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை

எண்கள்:  2, 3, 5

பரிகாரம்: ராதா கிருஷ்ணரை வழிபடுவது நல்லது.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் தடங்கல்கள் காரணமாக நின்ற பணிகள் சிக்கலின்றி நடைபெறும். கொடுக்கல் வாங்கல் முறையாக நடக்கும்.  தொழில் பயணங்களால் பொருள்சேர்க்கை ஏற்படும். சகோதரர்களுக்கு வெளிநாட்டுப் பயணம்  உண்டு.

சுயச்சார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். குடும்ப பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். கைவிட்டுப் போன பொருட்கள் வந்து சேரும். எதிர்பாலினத்தவரால் தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். கலைத் துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும்.

 மேன்மையடையுமாறு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு, அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களை எதிர்ப்பவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு, புதிய கல்வி சந்தோஷத்தைத் தரும். நல்ல நட்பு வட்டாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, மேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை

எண்கள்: 5, 6, 9

பரிகாரம்: முன்னோர்கள் வழிபட்டு நவக்கிரகங்களைச் சுற்றிவர வேண்டும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் நிறைவேறாத கடமைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பங்கள் உண்டாகும். தொழிலில் பொருள்சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வரும். சிலருக்கு வெளியூர் மாறுதல் கிடைக்கும்.

பணவரவு திருப்திகரமாக இருக்கும். தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும்.. சுபகாரியங்கள் தொடர்பாக வெளியூர் செல்ல நேரிடலாம். குடும்பத்தில் அனைவரும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள். பெண்களுக்கு, வாழ்வில் குதூகலம் பிறக்கும். 

குடும்பத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். கலைத் துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்த முயற்சியையும் தயக்கமின்றிச் செய்யலாம். மாணவர்களுக்கு, விளையாட்டு, கேளிக்கைகளில் எச்சரிக்கை தேவை. 

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை

எண்கள்: 3, 5, 7

பரிகாரம்: காக்கைக்கு தினமும் சாதம் வைக்க வேண்டும். தினமும் ராமர் கோயிலுக்குச் சென்று வரவும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close