[X] Close

உட்பொருள் அறிவோம் 14: கடவுளின் சேவகர்கள்


14

  • kamadenu
  • Posted: 09 May, 2019 11:55 am
  • அ+ அ-

-சிந்துகுமாரன்

பல்லாயிரக்கணக்கான ஜீவன்களைக் கடவுள் உருவாக்கினார். பிறகு சில ஆண்டுகள் (நமக்கு பல கோடிக்கணக்கான ஆண்டுகள்) கழித்து அந்த ஜீவன்களுக்கு உடல்களைக் கொடுத்தார். அதுவும் அந்தந்த ஜீவன்களின் விருப்பப்படி!

எல்லா ஜீவன்களையும் வரிசையாக நிற்கவைத்தார். முதலில் ஜீவன்களுக்கு உலகத்தைக் காட்டினார். பத்தில் ஒன்பது ஜீவன்கள் உடனே உலகைத் தேர்ந்தெடுத்துவிட்டன. அடுத்ததாக மீதமிருந்த ஜீவன்களுக்கு சொர்க்கத்தைக் காட்டினார்.

அவற்றில் பத்துக்கு ஒன்பது ஜீவன்கள் அதை ஆவலுடன் தேர்வு செய்துவிட்டன. மூன்றாவதாக மிஞ்சியிருந்த ஜீவன்களுக்கு நரகத்தைக் காட்டினார். மீதமிருந்த ஜீவன்களின் பத்தில் ஒன்பது நரகத்தைக் கண்டு அங்கிருந்து பயந்து ஓடிவிட்டன.

கடைசியாக ஒன்றும் பேசாமல் நின்றிருந்த சில ஜீவன்களைப் பார்த்த கடவுள், 'என்ன முட்டாள் ஜீவன்களே, உங்களுக்கு என்னதான் வேண்டும்?' என்று கேட்டார். அதற்கு அவை, ‘அனைத்தும் அறிந்த உங்களுக்குத் தெரியாதா, எங்களுக்கு நீங்கள்தான் வேண்டுமென்று? எப்போதும் உங்கள் பிரசன்னத்தில் நாங்கள் இருக்க வேண்டும் என்பதுதான் நாங்கள் வேண்டுவது,' என்றன.

‘என்னை வேண்டுவது என்பது மிகவும் வலியும் துயரமும் சங்கடங்களும் சோதனைகளும் பல அபாயங்களும் நிறைந்தது. ஏன் அதைப் போய்க் கேட்கிறீர்கள்? நீங்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்றுதானே உலகம், சொர்க்கம் எல்லாவற்றையும் படைத்திருக்கிறேன்? அதையெல்லாம் விட்டுவிட்டு எதற்காக என்னுடன் இருக்கவேண்டும் என்று கஷ்டமான விஷயத்தைக் கேட்கிறீர்கள்?' என்றார் கடவுள்.

‘எங்களுக்கு உலகத்தின் இன்பங்கள் வேண்டாம். சொர்க்கத்தின் லாகிரிகள் வேண்டாம். நீங்கள்தான் வேண்டும். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் உங்களுடன் இருப்பதற்காக அவற்றை நாங்கள் சந்தோஷத்துடன் தாங்கிக்கொள்வோம்.

அனைத்தையும் நாங்கள் இழந்துவிடத் தயார், உங்கள் பிரசன்னத்தில் இருக்கும்போது அனைத்தும் எங்களுக்குக் கிடைத்துவிடும் என்பதால்,' என்றன அந்த ஜீவன்கள்.

கடவுளைச் சந்தோஷப்படுத்திய ஜீவன்கள்

‘அப்படியென்றால் உங்களுக்கு நான் நிறைய வேலைகள் கொடுத்துக்கொண்டே இருப்பேன். என் சேவகர்களாக நீங்கள் இருக்கவேண்டியிருக்கும். என் வேலைகளைச் செய்ய உங்களைப் பயன்படுத்திக் கொள்வேன்,’ என்றார் கடவுள்.

`இதைவிட வேறென்ன பாக்கியம் வேண்டும்? எங்களை வைத்து உங்கள் வேலைகளைச் செய்துகொள்ளுங்கள். உங்கள் கருவிகளாக நாங்கள் இருப்போம்,’ என்றன அந்த ஜீவன்கள். கடவுள் சந்தோஷப்பட்டார்.

அந்த ஜீவன்கள்தான் மகான்களாக, அவதார புருஷர்களாக உலகில் அவதரித்தன. உடலெடுத்து உலகில் பிறந்த பின்பும் அவை எப்போதும் கடவுளின் பிரசன்னத்திலேயே இருந்தன.

இது ஒரு ஸூஃபிக் கதை. ஸூஃபிகள் இஸ்லாமிய மதத்தின் புறவயமான சட்டங்களை விடுத்து உட்சாரத்தைத் தமக்குள் கிரகித்தவர்கள். அபி கைரின் மகனான அபு ஸையத் சொன்னது இதுதான்: ‘ஸூஃபி என்பவர் இறுகிப்போன கருத்துக்களிலிருந்தும், உண்மையை அறியும் முன்னர் உருவாக்கிக்கொண்ட கோட்பாடுகளிருந்தும் விடுபட்டவர்கள். தம் நிலையை உணர்ந்து அதைத் தவிர்க்க விழையாமல் இருப்பவர்கள்.'

உலகில் உள்ள பல்வேறு மனிதர்களுக்கிடையில் நாம் காணும் வேறுபாடுகளுக்கு இது ஒரு முக்கியமான காரணமாக இருக்கக்கூடும். உலகில் அவதரித்த மகான்களின் வாழ்க்கையைக் கவனத்துடன் பார்க்கும்போது இந்தக் கதையில் வரும் விஷயம் உண்மையென்றுதான் படுகிறது.

புத்தர், இயேசு, ராமர், கிருஷ்ணர், நபிகள் நாயகம் போன்ற பல மகான்கள் தம் வாழ்வில் எதிர்கொண்ட இன்னல்களும், துன்பங்களும்தாம் எவ்வளவு? தாம் சொல்ல, செய்ய விழைந்ததைச் சொல்வதற்கும், செய்து முடிப்பதற்கும் அவர்கள் சந்தித்த இடையூறுகள்தாம் எத்தனை?

உம் சித்தப்படி நடக்கட்டும்

ஆனால் அவையனைத்தையும் தம் நிலை பிழறாமல் எதிர்கொண்டு, வெற்றி கொண்டு, கடந்து சென்ற கதைகள் நாமறிந்தவையே. ‘ஆண்டவரே, நடப்பது என் சித்தப்படி அல்ல, உம் சித்தப்படி நடக்கட்டும்,' என்றுதான் கெத்சமனெ தோட்டத்தில் இயேசுபிரான் சொன்னார்.

சிறுவயதில் கிருஷ்ணரைக் கொல்லக் கம்சன் செய்த இடைஞ்சல்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வளர்ந்த பிறகும் அவர் ஒவ்வொரு கட்டத்திலும் பல இடையூறுகளை எதிர்கொண்டார். ராமபிரான் சிறு வயதைக் கடந்த பிறகு அனுபவித்த இன்னல்கள் கணக்கற்றவை.

நபிகள் நாயகம் தான் கண்ட உண்மைகளைச் சொல்ல விழைந்தபோது மக்காவை விடுத்து மதீனாவிற்குச் சென்று இருந்து அவர் வாழவேண்டியிருந்தது. அப்படி அவர் சென்றதை வைத்துத்தான் முகம்மதிய நாட்காட்டியே தொடங்கியது என்பதை நாமறிவோம்.

ராகவேந்திரர் வேங்கடநாதனாக இருந்தபோது தம் இளம் மனைவியையும் சிறிய மகனையும் விட்டுவிட்டுப் போய்ச் சந்நியாசம் கொள்ள வேண்டியிருந்தது. இப்படி உலகின் நன்மைக்காக அவதரித்த அனைவரும் தம் காலத்தில் பட்ட துன்பங்கள் எத்தனை! கடவுளின் சாந்நித்தியத்திலேயே எப்போதும் இருக்க வேண்டும் என்று விழைந்த ஜீவன்கள்தான் இவர்கள்.

இங்கு ஒரு கேள்வி எழுகிறது. மற்ற இன்பங்கள் அனைத்தையும் விடுத்துக் கடவுளின் சாந்நித்தியத்தைத் தேர்ந்தெடுத்த ஜீவன்கள் ஏன் பல இடையூறுகளை எதிர்கொண்டாக வேண்டும்? ஏன் துயரங்களை அனுபவித்தாக வேண்டும்? எப்போதும் கடவுளுடனேயே இருந்தால் துன்பத்தின் கலப்பு சிறிதுமற்ற எல்லையற்ற ஆனந்தத்துடன்தானே இருக்க வேண்டும்? அதுதானே நியாயம்?

பரிணமிக்கும் பிரபஞ்சம்

கேள்வி நியாயமானதாகத்தான் படுகிறது. சரி. ஆனால் உண்மை அப்படியல்ல. இந்தப் பிரபஞ்சம் வளர்ந்துகொண்டு இருக்கிறது. வெறும் பௌதிக அளவில் வளர்வதைச் சொல்லவில்லை.

பிரபஞ்சத்தின் பிரக்ஞை நிலை வளர்ந்து கொண்டிருக்கிறது. புதிய தளங்களையும் நிலைகளையும் அது அடைந்து கொண்டிருக்கிறது. கல்லாய், மண்ணாய், புல்லாய், பூண்டாய், விலங்காய், மனிதனாய்ப் பரிணமித்துக்கொண்டிருக்கிறது பிரபஞ்சம்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்

என்று உயிரின் பரிணாம வளர்ச்சியின் கதி முழுவதையும் இந்தப் பாட்டில் சொல்லிவிடுகிறார் மாணிக்கவாசகர்.

இதைப் பார்க்கும்போது, ஒவ்வொரு கட்டத்திலும் பிரக்ஞையின் அளவும் தளங்களும் அதிகரித்துக்கொண்டு வருகின்றன என்பது தெளிவாகிறது. வெறும் ஸ்தூலமாக இருந்த பிரபஞ்சம் இப்போது மனிதன் தோன்றிய பிறகு தன்னுணர்வு அடைந்திருக்கிறது.

முடிவில் அனைத்துக்கும் ஆதாரமான பரம்பொருளைப் பிரக்ஞைபூர்வமாக முழுமையாக அறிந்துகொண்டு, தான் அதனிலிருந்து வேறுபட்டதல்ல என்ற சத்தியத்தைச் சுயமாக உணர்ந்து கொள்ளும் நிலையை நோக்கிப் பிரக்ஞை மலர்ந்து கொண்டிருக்கிறது.

(மேலும் மலர்வோம்)

கட்டுரையாளர், தொடர்புக்கு:

sindhukumaran2019@gmail.com

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close