[X] Close

'செவ்வாய் தோஷம் என்பதே இல்லை, நம்புங்கள்!’


jodhidam-arivom-2-32

செவ்வாய் பகவான்

  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 10:40 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 32 : இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

நாம் இப்போது ரூசக யோகம் பற்றி பார்க்கலாம்.இந்த யோகத்தை நமக்கு அருளுபவர் செவ்வாய் பகவான்.

செவ்வாய் என்பவர் பூமிக்கு காரகன். அதாவது நிலத்துக்கு காரகன், அதிபதி. வீடு, வீட்டின் சமையலறை, உணவுத்தொழில், ரியல் எஸ்டேட், மிகப்பெரிய நிறுவனங்கள், காவல்துறை, ராணுவம், உயர்அதிகாரம், விளையாட்டுத்துறை, வீரசாகசங்கள், உயிரைப் பணயம் வைக்கும் விளையாட்டு, இன்னும் ஏராளம்... சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படி பல விதங்களிலும் யோகத்தைச் செய்யும் செவ்வாய் பகவானை தோஷம் எனக்கூறி நிராகரிப்பது நியாயமா?  

சரி ரூசக யோகம் பற்றி முதலில் பார்ப்போம்.

இந்த யோகமானது உங்கள் ஜாதகத்தில் லக்னம் முதற்கொண்டு 1,5,9 ஆகிய இடங்களில் இருந்தாலும், சந்திரன்( ராசி) முதற்கொண்டு 4,7,10 ஆகிய இடங்களில் இருந்தாலும், இந்த ரூசக யோகம் உங்களுக்கு உண்டு.

இந்த யோகம் கொண்டவர்களுக்கு சொந்த வீடு 100 சதவிகிதம்  இருக்கும்.  இல்லை என்றாலும் சொந்த வீடு கண்டிப்பாக வாங்குவீர்கள்.  விவசாய நிலம் உண்டு, கால்நடை வளர்ப்பு யோகமும் உண்டு.

வீட்டு வளர்ப்புப் பிராணிகள் வளர்க்க செவ்வாய் பகவானின் கருணை இருந்தால் மட்டுமே வளர்க்க முடியும். ஹோட்டல் தொழில், வீட்டு கட்டுமானப் பொருட்கள் விற்பனை (ஹார்டுவேர்ஸ்) , செங்கல் சூளை வைத்தல், 

அரசாங்கத்தில் அதிகாரமிக்க பதவி, முக்கியமாக காவல்துறை உயர் அதிகார பதவி, சிறைத்துறை பதவி, கனரக வாகன தொழிலதிபர், விவசாய வாகனங்கள், வாகன உதிரி பாகங்கள் விற்பனை, வாகன டீலர், இப்படி பலவிதமான வாய்ப்புகள் செவ்வாயின் ரூசக யோகத்தால் கிடைக்கப் பெறுவோம்.  

இந்த ரூசக யோகம் இருப்பவர்களுக்கு செவ்வாய் தோஷம் எதுவும் செய்யாது. இன்னும் சொல்லப்போனால் யோகத்தை மட்டுமே தரும்.

செவ்வாய் தோஷத்தையே நாம் தவறாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம், செவ்வாய் தோஷமானது மிதுனம், கன்னி, கும்பம் இந்த மூன்று ராசிகளுக்கு மட்டுமே பார்க்கப்படவேண்டும்.

மற்ற ராசிகளான மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய இந்த 9 ராசிகளுக்கு கடுகளவும் தோஷம் தருவதே இல்லை.

இது குறித்து, பல ஜோதிட நூல்களும் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றன. ஆனாலும் ஜோதிடர்களாலும், ஜோதிடத்தை அரைகுறையாக அறிந்தவர்களாலும் பொய்யாகவே பரப்பப்பட்டு வருகிறது என்பதே உண்மை.  

அப்படியானால் மிதுனம், கன்னி, கும்பத்திற்கு தோஷம் இருப்பதாகச் சொன்னீர்களே... அப்படியெனில் சரிதானே? எனக் கேட்பது புரிகிறது.

அதற்கு ஏகப்பட்ட விதிவிலக்குகள் உள்ளன.  

மிதுனம், கன்னி, கும்பத்திற்கு தோஷம் தரும் செவ்வாயை குரு பார்த்தாலும், சேர்ந்தாலும்,

சனி பார்த்தாலும், சேர்ந்தாலும்,

சூரியன் பார்த்தாலும், சேர்ந்தாலும்,

சந்திரன் பார்த்தாலும், சேர்ந்தாலும்,

கேது பார்த்தாலும், சேர்ந்தாலும்,

ராகு பார்த்தாலும் சேர்ந்தாலும், 

நவாம்ச கட்டத்தில் செவ்வாய், மகரத்திலோ, கடகத்திலோ இருந்தாலும்

செவ்வாய் தோஷம் என்பதே இல்லை.

இப்போது சொல்லுங்கள், இத்தனை விதிவிலக்குகளில் ஏதாவது ஒன்று கூடவா ஒரு ஜாதகத்தில் இல்லாமல் இருக்கும்?

அதனால்தான் சொல்கிறேன்... செவ்வாய்தோஷம் என்பதே இல்லை! இல்லை! இல்லை!

சரி... ரூசக யோகம் இருப்பவர்கள் எந்தத் தெய்வத்தை வணங்கினால் இன்னும் யோக பலனை அதிகரித்துக் கொள்ளலாம்.

 இந்த யோகம் இல்லாதவர்கள் என்ன செய்தால் யோகம் கிடைக்கும்? 

செவ்வாய் பகவானின் அதிதேவதை முருகப்பெருமான். எனவே முருகப்பெருமானை வணங்கி வந்தாலே போதும். இந்த யோகம் அதிகப்படியான பலன்களைத்தரும். செவ்வாய், வெள்ளி என்றில்லாமல் கிடைக்கும்போதெல்லாம் முருகப்பெருமானை வணங்கி, ஒரு சல்யூட் போட்டு வாருங்கள். மனதிலும் வார்த்தையிலும் முருகப்பெருமானையே நினைத்து, அவனின் திருநாமத்தையே உச்சரித்து வாருங்கள்.

செவ்வாயின் மறு அம்சம் பைரவர். எனவே, பைரவரை செவ்வாய்க்கிழமையிலும், தேய்பிறை அஷ்டமியிலும் வணங்கிவாருங்கள். அளப்பரிய நன்மைகள் அதிகரிக்கும். நீங்கள் நினைத்துப் பார்க்காத நன்மையெல்லாம் வந்துசேரும்.

இங்கே இன்னொரு விஷயம்...

அஷ்டமியில் புதிய தொழில் தொடங்கலாமா? கூடாது என்பதுதானே சரி என்று 100க்கு 90 சதவிகிதம் பேர் நினைப்பீர்கள்.

உண்மையில், அஷ்டமியில் தொடங்கும் தொழில் அபரிமிதமான வளர்ச்சி அடையும். எதிரிகளே இல்லாத, எதிர்ப்புகளே இல்லாத, தனிகாட்டு ராஜாவாக பீடுநடை போட்டு வளருவீர்கள் என்பதே உண்மை.  

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில் நிறுவனம் இன்றளவும் தன் புதிய தொழிலை அஷ்டமியில்தான் தொடங்குகிறது. அந்த நிறுவனம் அரை நூற்றாண்டுகளாக இந்திய அளவில் கோலோச்சிக்கொண்டிருக்கிறது.  

சரி... செவ்வாய் பகவானுக்கு வருவோம்.

செவ்வாய் பகவானின் தானியம் துவரை. எனவே பருப்பு சாதம், பருப்பால் செய்யப்பட்ட உணவுகளைத் தானமாகத் தருவது நல்லது, அவரின் உலோகம் செம்பு. எனவே, செம்பு உலோகத்தால் செய்யப்பட்ட அணிகலன் காப்பு உள்ளிட்டவற்றை அணிந்துகொள்வது நன்மைகளை வாரி வழங்கும்!  

செவ்வாய் பகவானை குளிரச் செய்ய இன்னொரு வழியும் உண்டு. அதாவது தானம். விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள். அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கித்தாருங்கள். அவர்கள் போட்டியில் கலந்துகொள்வதற்கான தொகையை செலுத்துங்கள். விளையாட்டின் போது உத்வேகத்துடனும் ஊக்கத்துடனும் கலந்துகொள்ள, சத்துப் பொருட்கள் வாங்கிக் கொடுங்கள். இவையெல்லாம் உங்களை இன்னும் இன்னுமாக உயர்த்திக்கொண்டே இருக்கும்.

அங்காரகன் என்னும் செவ்வாய் பகவான், உங்களுக்கு அருளுவதற்காகவே காத்துக்கொண்டிருக்கிறார். சீர்காழி அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று அங்காரக தரிசனம் செய்யுங்கள். நவக்கிரகங்களில், செவ்வாய்க்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். ‘அட... ஒருகாலத்துல இவன் படாத கஷ்டமா? இப்போ, எங்கேயோ போயிட்டாம்பா’ என்று உங்களை மனதார வாழ்த்துகிற அளவுக்கு உச்சம் தொடுவீர்கள்.

- தெளிவோம்

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close