[X] Close

ஆன்மிக நூலகம்: அகஸ்தியருக்குத் திருமணம்


  • kamadenu
  • Posted: 18 Apr, 2019 12:10 pm
  • அ+ அ-

சாஸ்திரத்தில் விதித்தபடி அகஸ்தியருக்கும் லோபமுத்ரைக்கும் திருமணம் ஆயிற்று. பரம சுப வைபவம்.

பிற்பாடு விந்திய பர்வதத்தின் செருக்கை ஒறுக்கப் போவதால், ‘விந்திய தர்பக்நர்’ எனப் பெயர் பெறப் போகும் முனிவர் இன்று ‘விதர்ப ஜாமாதா’ என நாமம் கொண்டு விதர்ப நாட்டு மருமகப் பிள்ளையானார்.

அகத்திய- லோபமுத்ரையரான புதுமணத் தம்பதியரை அகக்கண்ணில் நிறுத்தி அடிபணிந்து ஆசி பெறுவோம். வர முனிவரும், வரப்ரதாவும் நாம் விரும்புவனவெல்லாம் வழங்குவர்.

அகத்திய தம்பதியர் கிளுகிளுவென முளைத்திருந்த பாலிகையைக் கரைத்த தடாகம், பிற்காலத்தில் இதனால்தான் ‘ஸித்த தீர்த்தம்’ என்றே பெயர் பெறப்போகிறது.

எப்பேர்ப்பட்ட தம்பதி! நுண்ணுணர்வு போதாதவர்கள் வேண்டுமாயின் குள்ளக் கோமாளித் தோற்றக் கிழவர் எல்லையில்லா அழகுச் சுகுமாரிக்குப் பொருத்தமில்லாத வரன் என்று நினைக்கலாம்.

பக்தியுணர்வுடன் பார்ப்போருக்கோ புனிதமும் கருணையும் ஈருருக் கொண்டு ஸதிபதியானதாகத்தான் தெரியும்.

இத்தம்பதியின் ஈடிலா இறைப் பெருமைக்கு ஒன்றே ஒன்று சொல்லிவிட்டால் போதும். ‘தம்பதி பூஜை’ என்பதாக ஸதி-பதி ஜோடியை சிவசக்திகளாகக் கருதிப் பூஜிக்கும் வழக்கு உள்ளதல்லவா?

இவ்வழக்குக்கு ஆதித் தொடக்கமாகப் பூஜை பெற்ற முதல் தம்பதியர் அகஸ்திய லோபமுத்ரையர்தான். அதுவும் பரமேச்வரனின் உத்தரவுப்படி அவர்களுக்கு இந்த உத்தம ஸ்தானம் தரப்பட்டது.

தேவி வழிபாட்டு முறைகளுக்குப் பிரமாண நூலான ‘பரசுராம கல்ப’த்தில் இந்த அற்புதமான விஷயம் தெரிவிக்கப்படுகிறது.

கன்யா பூஜை, ஸுவாஸினி (சுமங்கல) பூஜை, தம்பதி பூஜை முதலியவை பற்றி அந்நூல் சொல்லுமிடத்தில் இவ்வுண்மை விளக்கப்படுகிறது.

தேவர்கள், பார்வதி பரமேச்வரர்களுக்குத் தம்பதி பூஜை செய்ய விரும்புகின்றனர்.

அப்போது ஈசன், “அகஸ்திய- லோபமுத்ரா தம்பதியர் சிவசக்தியரான நாங்கள் இருவருமே ஆவர்” என்று அமரர்களுக்குக் கூறி, தங்களுக்குப் பதில் அந்த ஜோடியைப் பீடத்தில் அமர்த்தி வழிபாடு புரியச் சொல்கிறான். “இவர்களைக் காமேச்வர காமேச்வரிகளாக உணர்ந்து பூஜியுங்கள்” என்று திருவாய் மலர்கிறான்.

பரசுராம கல்பம் கூறும் அக்கதை பிற்பாடு நிகழப் போவது. தற்போது பார்வதியே அவதரிக்கவில்லை. அவளது பூர்வ அவதாரமான தாக்ஷாயணியும் தேகம் துறந்துவிட்டாள்.

உலக நாடகத்துக்குக் காமமும் காமேசனும் காமேச்வரியும் வேண்டும் என்றுணர்ந்து, ஓட்டில் ஒட்டா விளாங்கனியாக மாயா விநோதம் காணும் பரஞானப் பெருநிலையில் இன்று அகஸ்தியர் முற்றிலும் ஆரோகணித்தும் விடவில்லை; சிருங்காரத்தை மாய விளையாட்டாகக் கண்டு ரஸிக்க முடியாத வறட்டுப் பிரம்மச்சர்யத்திலிருந்து அவர் விடுபடவில்லை- மாலவன் இவ்விஷயமாக அவரைத் தூண்டியிருந்த போதிலும்கூட! அதுவும் அவனது மாயா சக்தி உலகுக்குத் தெரிவதற்காகத்தான்!

அகத்தியர்: ஐக்கிய சக்தியின் அவதாரம்

ரா. கணபதி

வெளியீடு: சிவ சாகரம் அறக்கட்டளை

தொடர்புக்கு: 96000 15230 / 7358481420

விலை: ரூ. 200/-

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close