[X] Close

‘நீங்கள் ஏழுதலைமுறைக்கு சொத்து சேர்க்கணுமா?’ - திருப்பதி தரிசனம்; சனீஸ்வர வழிபாடு!


jodhidam-arivom-2-30

  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 11:26 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 - 30 : இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே. இந்தப் பதிவில் நாம் பார்க்க இருக்கும் யோகம், சச யோகம்.  இந்த யோகம் என்ன மாதிரியான பலன்களைத்தரும்? யாருக்கு இந்த யோகம் இருக்கிறது? அதை எப்படி அறிவது? பார்ப்போம்.

கிராமங்களில் ஏன் நகர்ப்புறங்களில் கூட பாரம்பரியமான வீடுகளை பார்த்திருப்பீர்கள். பரம்பரை பரம்பரையாக அந்த வீடுகள் தலைமுறைகளைக் கடந்து, கம்பீரமாக காட்சி அளித்துக்கொண்டிருக்கும்.

இப்போதெல்லாம் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை, வங்கி உதவியோடு வாங்கி அதற்கான EMI தொகையைக் கூட சரியாகக் கட்டமுடியாமல், விற்க வேண்டியோ அல்லது கைவிட்டோ போகும் நிலையை பாரத்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

அப்படி இருக்கும்போது, பரம்பரை வீடுகள் எப்படி சாத்தியம்? என்று கேட்கிறீர்கள்தானே.

இதற்கு எளிமையான, மிக மிக எளிமையான பதில் ஒன்றே ஒன்றுதான். அந்த சொத்தை வாங்கிய அந்த முன்னோருக்கு இந்த சச யோகம் இருந்திருக்கும்.

ஆம், சச யோகத்தில் இருப்பவர்கள் வாங்குகிற சொத்து, பல தலைமுறைகளையும் தாண்டி நிலைத்திருக்கும். இன்னும் சொல்லப்போனால் ஏழு தலைமுறைகளுக்கு சொத்து இருக்கிறது என்கிறோமே... அதற்குக் காரணம்... இந்த யோகம்தான்... சச யோகம்தான்!

அப்படியானால் ஏழுதலைமுறை தாண்டியபின் பிறக்கும் குழந்தை சச யோகம் இல்லாமல் இருந்தால்?

ஆமாம்... அதன் பிறகே சொத்துக்களை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

ஆக, இந்த யோகம் எந்த கிரகத்தால் உண்டாகிறது? ஏன் அழியாமல் காக்கப்படுகிறது? 

இது சனீஸ்வர பகவானால் உண்டாகிறது. சனி கொடுக்கும் எதுவும் அழிவதில்லை. அது நிரந்தரமயமாக இருக்கும்.

சரி... வேறு என்னென்ன பலன்கள்?

லாபம் மட்டுமே தரக்கூடிய தொழிலை, இந்த சச யோகக்காரர்கள் கிடைக்கப்பெறுவார்கள். அதுவும் வெளிநாடுகளின் தொடர்புடைய தொழில், பலதரப்பட்ட பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்கிற தொழில் என்று இருப்பார்கள்.  

அதிலும் கப்பல் போக்குவரத்தோடு கூடிய தொழில், இன்னும் சொல்லப்போனால் கப்பல் சொந்தமாகவே வாங்கி இயக்கக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய தொழிலைக் கொண்டிருப்பார்கள்.  

ஏற்றுமதி, இறக்குமதி தொழில், தொழில் நிறுவனங்கள், அதாவது தொழிற்சாலை நிறுவி பலருக்கும் வேலைவாய்ப்பு அளித்தல், மிகப்பெரிய இயந்திரங்களைக் கொண்டு செயல்படும் தொழில் நிறுவனம் என்று இருப்பார்கள்.

உத்தியோகமாக இருந்தால் மனிதவள மேம்பாடு பணி(HR) நிர்வாக அதிகாரி, தலைமைப் பதவி, இப்படி பலருக்கும் தலைமை ஏற்று வழிநடத்துதல் எனும் உத்தியோகத்தைச் செய்துவருவார்கள்.

அரசியலில் சுயநலம் இல்லாமல் பொதுநலனோடு புகழ் பெறுவார்கள். மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி மேம்படுத்துவார்கள். ஆயிரம் குறைகளை மற்றவர்கள் சொன்னாலும் சேவையில் பின்வாங்காதவர்கள். அழியாப் புகழை பெறுபவர்கள். சரித்திரத்தில் இடம் பெறுபவர்கள், இத்தனைக்கும் உதாரணம்  மகாத்மா காந்தி.  

சரி, இது நம் ஜாதகத்தில் இருக்கிறதா என்று பார்ப்போமா?

உங்கள் ஜாதகத்தில் சந்திரனுக்கு 1,5,9, அல்லது 4,7,10ல் சனி பகவான் இருக்க வேண்டும். அப்படி அவர் அமர்ந்த இடம் மகரம், கும்பம், துலாம் முதலான ராசியாக இருக்க வேண்டும்.  

அப்படி இருந்தால் இந்த சச யோகம் உங்களுக்கு உண்டு என்று அர்த்தம். நீங்கள் தைரியமாக எந்த வேலைவாய்ப்புகளையும் தேடிப் போகலாம். அல்லது பல வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடியும் வரலாம். 

சொந்தமாகத் தொழில் செய்ய விரும்பினால் நிச்சயம் தொழிலானது, வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும்.  இயந்திரங்களைக் கையாளும் தொழில் முதல் கண்டெய்னர் தொழில் வரை எதையும் செய்யலாம்.

நீங்கள் செய்யும் தொழில் பலருக்கும் உதவும் வகையில் இருக்க வேண்டும், பண்ணைத்தொழில் அதாவது ஆடு, மாடு, கோழி, முயல், பன்றி வளர்ப்பு தொழில், தோல் தொடர்பான தொழில்,  கேட்டரிங் தொழில் (ஓட்டல் தொழில் அல்ல) போன்றவை நன்கு கைகொடுக்கும். 

இன்னொரு முக்கியமான விஷயம். சச யோகம் கொண்டவர்களுக்கு, எதிரிகள் என்பவர்களே இருக்கமாட்டார்கள். எதிர்ப்பு எனும் நிலையே இருக்காது. அப்படி எதிர்ப்பவர்கள் உங்களை எதிர்க்கமுடியாமல் தோற்றுப்போய் காணாமல் போவார்கள்.

தலைமுறைகளைத் தாண்டியும் இருக்கும் என்றால் ஏன் சிலர் அனைத்தையும் இழந்து விடுகிறார்கள்? என்கிற கேள்வியும் எழலாம்.

அதற்குக் காரணம் உண்டு. இது 7 தலைமுறைகள் மட்டுமே தொடரும். எட்டாவது தலைமுறையில் இந்த யோகம் இல்லாமல் ஒருவர் பிறந்தால் அனைத்தையும் விற்க வேண்டிய சூழல் ஏற்படும்.

எனவே இப்படி தலைமுறைகள் தாண்டி சொத்துக்களை உடையவர்கள், இந்த யோகம் பெற்றவர்கள்.

’சரி... இந்த சச யோகம் எனக்கில்லை. ஆனால் அப்படியான யோகத்தை அடைய என்ன செய்யவேண்டும்?’ என்கிறீர்கள்தானே.

தெய்வம்தான் அருள் செய்யவேண்டும். தெய்வத்தைத்தான் வணங்கித் தொழவேண்டும். எந்தத் தெய்வத்தை வணங்கவேண்டும்? எந்தக் கோயிலுக்குச் செல்லவேண்டும் என்பதைப் பார்ப்போம்.

திருமலை திருப்பதி இதுவே முதன்மையான தெய்வம். இங்கே குடியிருக்கும் வேங்கடாஜலபதி பெருமாளே இந்த யோகத்தைத் தரக்கூடிய கண்கண்ட தெய்வம்.

திருப்பதி ஏழுமலையான் மட்டுமல்ல... கொங்கணர் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடமும் இதுதான் என்பது தெரியும்தானே.  கொங்கணர் எனும் சித்தர், மக்கள் அனைவரும் செல்வ வளத்தோடு வாழவேண்டும் என விருப்பப்பட்டார். அதனால் இரும்பை தங்கமாக்கும் ரசவாதம் தெரிந்ததனால் வீடு வீடாகச் சென்று தங்கம் தரமுடியாததால் மலையையே தங்கமாக்க முயன்றார். அது இறைவனால் தடுக்கப்பட்டு திருமலைக்கு திருப்பி விடப்பட்டார்.

அதனால்தான் திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படுகிறது என்கிறோம். திருப்பதி சென்று வந்ததும்  செல்வம் சேருகிறது என்று பூரிக்கிறோம்.  

மேலும் சில ஆலயங்களும் இருக்கின்றன.

கும்பகோணம் நாச்சியார்கோவில் அருகே உள்ள  திருநரையூர் திருத்தலம். இங்கு சனி பகவான் தன் மனைவி நீலாதேவி, மகன்கள் மாந்தி மற்றும் குளிகன் ஆகியோரோடு அருள்பாலித்து வருகிறார்.  இவரை தரிசித்து வணங்கி வந்தால், தலைமுறைகள் தாண்டி வம்சமும் விருத்தி அடையும். அழியாச் செல்வமும் அமையப் பெறுவீர்கள்.  

அதேபோல், சனியின் அதிதேவதை சாஸ்தா. இவரை வணங்கிவந்தாலும் குடும்பம் செழிக்கும். அதனால்தான் ஒவ்வொருமுறை சாஸ்தாவான ஐயன் ஐயப்ப சுவாமியைத் தரிசித்துவிட்டு வருவோருக்கெல்லாம் பல நல்லதுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.  

இப்படியாக, இந்த சச யோகம் சகல யோகத்தையும் தரவல்லது. சனியை வணங்குவோம். சகல சம்பத்துகளையும் பெறுவோம். 

அடுத்து ஹம்ச யோகம் பற்றிப் பார்ப்போம்.

-  தெளிவோம்

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close