திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி திருவிழா திருக்கல்யாணம்


திருக்கல்யாண வைபவத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சிவகாமசுந்தரி அம்மன், திருத்தளிநாதர், பிரியாவிடை.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி திருவிழாவை யொட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி திருவிழா மே 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதை யொட்டி சோழிய வெள்ளாளர் உறவின்முறை சார்பில், தென் மாபட்டு வேலாயுதசாமி மடத்திலிருந்து திருமண சீர்வரிசை எடுத்து வரப்பட்டது.

தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 10.10 மணிக்கு திருத்தளி நாதருக்கும் சிவகாமசுந்தரிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பெண்களுக்கு மாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல்கள் வழங்கப்பட்டன. இரவு 9 மணிக்கு யானை வாகனத்தில் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.