[X] Close

கடகம் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 09:49 am
  • அ+ அ-

-ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

கடக ராசி வாசகர்களே!

ஏணிப்படியாக இருந்து மற்றவர்களை ஏற்றுவதுடன், தானும் வாழ்வின் உயர்ந்த அந்தஸ்தைப் பிடிப்பவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதியற்ற போக்கு மாறும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். மனைவிவழியில் மதிப்பு கூடும். கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும்.

இந்த வருடம் முழுக்கச் சனியும், கேதுவும் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அயல்நாடு, வேற்றுமாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் இருந்த போராட்டம் விலகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நெடுநாட்களாக வட்டி மட்டுமே கட்டிக் கொண்டிருந்தீர்களே! இனி அசலையும் கட்டி முடிக்கும் அளவுக்கு வருமானம் உயரும்.

இந்த ஆண்டு முழுக்க ராகு பகவான் ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாகப் போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். யோகா, தியானத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.  சிலரைப் பண்படுத்துவதற்கு முயன்று தோல்வியடைவீர்கள்.

குருபகவான் இந்த ஆண்டு தொடக்கம் முதல் 18.05.2019 வரை உங்கள் ராசிக்கு அதிசார வக்கிரமாகி 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில நேரம் வீண் டென்ஷன், மன உளைச்சல், வேலைச்சுமை, வீண் பழி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மறைமுக எதிரிகளை இனம் காண்பீர்கள். எதிரிகளில் சிலர் நண்பர்களாவார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகள் வேண்டாம். திட்டமிட்ட காரியங்களை இரண்டு மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒருபகுதியைக் கொடுத்து முடிப்பீர்கள்.

ஆனால், 19.05.2019 முதல் 27.10.2019 வரை உங்களின் குருபகவான் 5-ம் வீட்டில் நிற்பதால் செல்லும் இடமெல்லாம் செல்வாக்கு கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் சில காரியங்களைச் சாதித்துக் காட்டுவீர்கள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். தூரத்து சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள்.

பூர்விகச் சொத்தை சீர் செய்வீர்கள். வாகன வசதி பெருகும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். ஆனால், 28.10.2019 முதல் 27.03.2020 வரை குரு 6-ம் வீட்டில் மறைவதால் அதுமுதல் வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், அலைச்சலும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் அதிகரிக்கும். சில காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். குடும்பத்தில் சாதாரண பிரச்சினையெல்லாம் சண்டையில் போய் முடிய வாய்ப்பிருக்கிறது.

kadagam 2.jpg

வியாபாரிகளே! வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த துண்டுப் பிரசுரம், வானொலி விளம்பரத்துக்குச் செலவிடுவீர்கள். பக்கத்துக் கடைக்காரருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். வேலையாட்கள் அடிக்கடி மாறிக் கொண்டேயிருப்பார்கள். கெமிக்கல், கமிஷன், வாகன உதிரிப் பாகங்களால் லாபமடைவீர்கள். அரசுக் கெடுபிடிகள் தளரும்.

பங்குதாரர்களின் துரோகங்களை மறந்து பழைய நிலைக்குத் திரும்புவீர்கள். பாக்கிகள் வசூலாகும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். புதிய தொழிலில் கால்பதிக்கும் முன்பு அனுபவஸ்தர்களிடம் ஆலோசனை செய்யுங்கள்.

உத்யோகஸ்தர்களே! இழுபறியாக இருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். மேலதிகாரி உங்களிடம் சிலநேரத்தில் கோபப்பட்டாலும் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார். சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த பனிப்போர் நீங்கும்.

பெண்களுக்கு: சனிபகவான் சாதகமாக இருப்பதால் பிள்ளைகள் உங்களை மதிப்பார்கள். உங்களுக்கு இருந்து வந்த தைராய்டு தொந்தரவு குறையும். பழைய கடனைப் பைசல் செய்ய உதவிகள் கிட்டும். மாமியார், மாமனாரின் ஆதரவு கிடைக்கும். மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை குரு 5-ல் அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும்.

இந்தப் புத்தாண்டு விரக்தியின் விளிம்பில் நின்ற உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சனிக்கிழமைகளில் சென்று வணங்குவதுடன் நுங்கைத் தானமாகக் கொடுங்கள். இன்பம் பெருகும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close