அம்மனின் சக்தி பீட வரிசையில் மகோத்பலா பீடமாகக் கருதப்படும் உஜ்ஜைனி மங்கள சண்டி கோயில், சிவபெருமானின் ஜோதிர்லிங்கத் தலமாகவும் கருதப்படுகிறது. ஏழு மோட்ச நகரங்களில் (அயோத்தி, மதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, அவந்திகை, துவாரகை) ஒன்றாக உஜ்ஜைனி நகரம் கருதப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனி நகரத்தில் அமைந்துள்ளது மகா காளேஸ்வரர் கோயில். சிப்ரா ஆற்றங்கரையில் மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாக அமைந்துள்ள இது, தேவார வைப்புத் தலமாகும். சிவபெருமானின் லிங்க வடிவம் தன்னுள்ளேயே சக்தி ஓட்டத்தை உள்வாங்கி தானாகத் தோன்றியதாக ஐதீகம். இத்தலத்தில் தெற்கு நோக்கியபடி தட்சிணா மூர்த்தியாக சிவபெருமான் அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு
அவந்தி மாநகரில் விலாசன் என்ற அந்தணர் வசித்து வந்தார். சிறந்த சிவபக்தரான இவர், தினமும் சிவலிங்கம் பிடித்து வைத்து சிவ ஆராதனை செய்து வந்தார். இவருக்கு நான்கு மகன்கள். அவர்களும் தந்தைக்கு உதவியாக சிவத் தொண்டு புரிந்து வந்தனர். அச்சமயம் தூஷணன் என்ற அரக்கன், அவந்தி மாநகர மக்களுக்கு பலவிதங்களில் இன்னல்கள் கொடுத்து வந்தான். ஊர் மக்கள் அனைவரும் விலாசனை அணுகி, தங்களைக் காக்குமாறு வேண்டினர்.
ஒருநாள் விலாசன், சிவபூஜை செய்யும்போது, தூஷணன் வந்து பூஜைப் பொருட்களை களைத்து, சிவலிங்கத்தை அழிக்க முற்பட்டான். அப்போது லிங்கத்தைப் பிளந்து கொண்டு, மகா காளர் தோன்றி, அரக்கனை அழித்தார். அதுமுதல், ஊர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, லிங்க வடிவில் இத்தலத்தில் கோயில் கொண்டு, ஈசன் அருள்பாலிப்பதாக நம்பிக்கை.
தேவகிக்கு பிறந்த எட்டாவது குழந்தையான கிருஷ்ணர், யசோதையின் வீட்டில் விடப்பட்டார். அவருக்குப் பதிலாக நந்தகோபர் இல்லத்தில் பிறந்த பெண் குழந்தையை, வசுதேவர் தூக்கி வந்தார். அந்தப் பெண் குழந்தையை விண்ணில் தூக்கி எறிந்து வாளால் வெட்டுவதற்கு கம்சன் முற்பட்டபோது, அக்குழந்தை காளி உருவம் கொண்டு இங்கு தங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. காளிதாசருக்கு அருள்புரிந்த காளி மாதா இவரே என்பது நம்பிக்கை.
மகா காளி
உஜ்ஜைனியில் மகா காளருக்கு கோயில் அமைந்திருப்பதுபோல், ஹரசித்தி தேவி என்று பெயர் பெற்ற மகா காளிக்கும் கோயில் அமைந்துள்ளது. விக்கிரமாதித்ய மன்னரும், பட்டியும் இக்காளியின் அருள்பெற்று பல ஆண்டுகள் ஆட்சி புரிந்ததாகக் கூறப்படுகிறது.
கயிலை மலையில் ஒருசமயம் சிவபெருமானும், பார்வதி தேவியும் சொக்கட்டான் ஆடிக் கொண்டு இருந்தனர். அப்போது, மும்மூர்த்திகளாலும் வெல்ல முடியாத வரத்தைப் பெற்ற சண்டன், பிரசண்டன் என்ற அசுரர்கள் அங்கு வந்தனர். கயிலாயத்தில் காவல் புரிந்த நந்திதேவரை துன்புறுத்தினர். ஏற்கெனவே தேவலோகத்தின் மீது போர் தொடுத்து, தேவர்களை வெற்றி கண்ட இவர்கள், முனிவர்களுக்கும் இன்னல்கள் விளைவித்திருந்தனர்.
சண்டன், பிரசண்டன் பெற்ற வரத்தைப் பற்றி பார்வதி தேவியிடம் கூறிய சிவபெருமான், அவர்களை அழிக்கும் வல்லமை தேவிக்கே உள்ளது என்றார். ஈசனின் கூற்றுக்கு ஏற்ப, மகா காளியாக மாறிய பார்வதி தேவி, நவசக்தி தேவிகளையும் அழைத்துக் கொண்டு, சிங்க வாகனத்தில் எழுந்தருளி, அரக்கர்களுடன் போர் புரியக் கிளம்பினார். மகா காளியின் உருவத்தைக் கண்டு அஞ்சிய அரக்கர்கள், உஜ்ஜைனி காட்டுக்குள் ஓடி ஒளிந்தனர். மகா காளியும் அவர்களைப் பின் தொடர்ந்தார். எருமைக் கடா உருவம் கொண்டு, மகா காளியை அவர்கள் தாக்க முற்பட்டபோது, மகா காளி அரக்கர்களை மாய்த்தார்.
ஹரனின் (சிவபெருமான்) சித்தத்தைப் பூர்த்தி செய்தமையால் தேவிக்கு ‘ஹரசித்தி தேவி’ என்ற பெயர் வழங்கி, மக்கள் கோயில் எழுப்பி வழிபட்டனர். மிகவும் சக்தி வாய்ந்தவராகக் கருதப்படும் ஹரிசித்தி தேவி, வரப்பிரசாதியாக அருள்பாலித்து வருகிறார். இரு சண்டர்களையும் அழித்து மங்களத்தை ஏற்படுத்தியதால் ‘மங்கள சண்டி’ என்றும் அன்னை போற்றப்படுகிறார்.
உஜ்ஜைனி சிறப்பு
உத் + ஜைன என்று உஜ்ஜைனியைப் பிரித்தால் ஜைன மதத்தை உச்ச நிலைக்குக் கொண்டு வந்த நகரம் என்று அறியப்படுகிறது. மாமன்னர் விக்கிரமாதித்தன் காளி தேவியை குலதெய்வமாக வழிபட்டு, பல வெற்றிகளைப் பெற்றார். அமிர்தம் சிந்திய நான்கு நகரங்களில் (ஹரித்வார், நாசிக், அலகாபாத்) ஒன்றாக உஜ்ஜைனி நகரம் கருதப்படுகிறது. ‘மகா காள வனம்’ என்று இத்தலம் அழைக்கப்படுவதாக ஸ்கந்த புராணம் உரைக்கிறது, சிப்ரா நதி புண்ணிய தீர்த்தங்களில் மிகவும் முக்கியத்துவம் பெறுவதாக அக்னி புராணம் கூறுகிறது. இந்த நதியில் நீராடி மகா காளரை வழிபட்டு, காளி தரிசனம் செய்தால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. மேலும், ஒருவரிடத்தில் உள்ள அசுர குணமும் மறையும். புராண காலம், சரித்திர காலம், இதிகாச காலம் என்று எந்தக் காலத்திலும் சிறப்பிடம் பெற்றுள்ளதாகவே உஜ்ஜைனி நகரம் விளங்குகிறது.
ஸாந்தீப முனிவர் ஆசிரமத்தில் தங்கியிருந்து, கிருஷ்ண பரமாத்மா, பலராமர், சுதாமா உள்ளிட்டோர் குருகுல கல்வி பயின்றுள்ளனர். கிருஷ்ண பரமாத்மா இங்கு வான சாஸ்திரம் பயின்றுள்ளார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு நடைபெறும் கும்பமேளா விழாவுக்கு பக்தர்கள் குவிவது வழக்கம். பெரிய நகரம் என்பதால் எவ்வளவு சுற்றுலாப் பயணிகள் வந்தாலும், தங்குவதற்கும், உணவு வசதிக்கும் குறைவில்லை.
முன்பொரு காலத்தில் அசுரர்களும், வேதாளங்களும் இங்கு நிறைந்து காணப்பட்டதால், சிவபெருமான் இங்கு எழுந்தருளி மக்களைக் காத்தருளியுள்ளார். அசோக சக்ரவர்த்தி, உஜ்ஜைனி வர்த்தகரின் மகளைத் திருமணம் புரிந்துள்ளார். மவுரியப் பேரரசின் தலைமைப் பீடம் இங்கு அமைந்துள்ளது. பாணினி, பெரிபுளூசு, ஹியான்சான் போன்ற வெளிநாட்டு தூதர்கள், உஜ்ஜைனி நகரத்தைப் போற்றி எழுதியுள்ளனர். பதஞ்சலி முனிவர், காளிதாசர், திருமங்கையாழ்வார் போன்றோர் தங்கள் பாடல்களில் உஜ்ஜைனி நகரச் சிறப்பைப் போற்றியுள்ளனர்.
மகாபாரதப் போரில் அவந்தி இளவரசர்கள், கௌரவர்கள் பக்கம் இருந்து போரிட்டதாகக் கூறப்படுகிறது. ராமாயண காலத்தில் ராமபிரான் இங்கு நீராடியதால், ‘ராமர் காட்’ என்ற குளியல் கட்டம் ஏற்பட்டுள்ளது. இங்கு உள்ள ‘சித்திவடம்’ என்ற பழமையான ஆலமரம், பல வருடங்களாக சிறிய அளவிலேயே இருந்து வருகிறது. உதயணன் கதை நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்றதாக பெருங்கதை உரைக்கிறது. இந்த நகரத்தின் அமைந்துள்ள கட்டிடங்களின் நிழல்களை வைத்து, மணி, நிமிடம், திதி, நட்சத்திரம் ஆகியவற்றை அறிய முடியும்.
கோயில் அமைப்பு
மகா காளேஸ்வரர் கோயில் வடக்கு பார்த்த பிரதான வாயிலுடன் விஸ்தாரமான வெளிப் பிரகாரத்துடன் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும், ஆதி கோயிலின் சிதைந்த கல் சிற்பங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இவற்றுக்கு எதிரே மகா காளர் சந்நிதி அமைந்துள்ளது. மகா காளர் சந்நிதி வாயிலில் நீலகண்டேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
மூன்று அடுக்குகளில் மூன்று லிங்க வடிவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பூமி மட்டத்துக்கு கீழே இருப்பவர் மகா காளர். இவரே ஜோதிர்லிங்கமாக வழிபடப்படுகிறார். இவரை தரிசிக்க சில படிகள் இறங்கிச் செல்ல வேண்டும். எப்போதும் இருள் சூழ்ந்திருப்பதால் எந்நேரமும் விளங்கு எரிந்து கொண்டே இருக்கும். இவருக்கு சமர்ப்பிக்கப்படும் எந்தப் பொருளும் நிர்மால்யம் ஆவதில்லை, அவற்றைக் கொண்டு மீண்டும் அர்ச்சனை செய்யலாம்.
மகா காளருக்கு மேலே பூமி மட்டத்தில் ஓங்காரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அவருக்கு மேலே மூன்றாவது மாடியில் தாரகேசுவரர் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் விநாயகர், பார்வதி தேவி, சுப்பிரமணியர், நந்திதேவர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.
பிற கோயில்கள்
சுதன்வா என்ற ஜைன மதத்தைச் சார்ந்த அரசர், ‘அவந்திகை’ என்று இந்நகரத்துக்கு பெயர் வைத்தார். இந்த நகரத்தின் அருகில் ரிண முக்தேஸ்வரர், மங்களேஸ்வரர், பரா கணபதி கோயில், கிருஷ்ண பரமாத்மாவின் குருநாதர் ஸாந்தீப முனிவர் ஆசிரமம், பர்த்ருஹரி குகை அமைந்துள்ளன. கால பைரவர் கோயில், சிந்தாமணி விநாயகர் கோயில் திரிவேணி நவக்கிரக கோயில், சித்தர் கோயில் ஆகியவையும் அமைந்துள்ளன. சிப்ரா நதிக்கரையில் இயற்கை எழிலைக் காண எப்போதும் சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிவது வழக்கம். இங்கு ஜயசிம்ஹன் நிறுவிய வான ஆராய்ச்சி நிலையமும் உள்ளது.
மங்கள சண்டிகா ஹோமம்
அதிக சாமர்த்தியம், அதிக கோபம் கொண்டவராக மங்கள சண்டி விளங்குகிறார். திருமணத்தை அருளும் மங்கள நாயகியாகப் போற்றப்படுகிறார். மனு வம்சத்தில் பிறந்த மங்களன் என்பவன், சண்டியை வணங்கிய பின்பு ஏழு கண்டங்களையும் வெற்றி கண்டான். நவராத்திரி நாட்களில் சிவன் கோயில்களில் மகா சண்டி யாகம் நடைபெறும். சிங்க வாகனத்தைக் கொண்ட மங்கள சண்டிகை, ஒன்பது மாதர்களால் சூழப்பட்டுள்ளார். தனது எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், கதை, வாள், கேடயம், அம்பு, வில், பாசம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்.
திருமால் முதலான தேவர்கள் திரிபுரங்களில் வெற்றி உண்டாக, தேவியைப் பூஜித்து போற்றினர். மங்கள சண்டி துர்கையாகத் தோன்றிய தேவி, ருத்திர மூர்த்தியால் திரிபுர வெற்றி உண்டாகும் என்று தேவர்களிடம் கூறினார். துர்கையின் வாக்குப்படி சிவபெருமான் திரிபுரங்களை அழித்தார். வெற்றிக்கு வித்திட்ட மங்கள சண்டிகையை, தேவர்கள் தேன், பால், பழங்களுடன் வணங்கி, ஆடல் பாடல், வாத்திய இசையால் போற்றிப் புகழ்ந்தனர். மங்கள சண்டிகை ஸ்லோகங்களை செவ்வாய்க் கிழமைகளில் கூறி, தேவியை வழிபட்டால் அனைத்து பாக்கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.
திருவிழாக்கள்
சிவராத்திரி, பிரதோஷம், நவராத்திரி, கார்த்திகை மாத பவுர்ணமி, ஆடி மாத நாக பஞ்சமி நாட்களில் இங்கு சிவபெருமான், காளி தேவிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும். அப்போது பக்தர்கள், பல விதமான பூக்கள், வில்வம் கொண்டு அர்ச்சனை செய்வது வழக்கம்.