[X] Close

செல்வம் தரும் ‘மாளவிகா யோகம்’; அறிவைத் தரும் ‘பத்ர யோகம்’


jodhidam-arivom-2-29

சுக்கிர பகவான்

  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 11:05 am
  • அ+ அ-

ஜோதிடம் அறிவோம் 2 (29)  - இதுதான்... இப்படித்தான்!

ஜோதிடர் ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே. இப்போது நாம் பார்க்கப்போகும் யோகம் மாளவிகா யோகம் மற்றும் பத்ர யோகம்.

இவற்றைக் கொஞ்சம் விரிவாகவே பார்ப்போமா?

முதலில் “மாளவிகா யோகம்.”

 மாளவிகா என்றால் “முழுமையான, நிறைவான” அல்லது “பூரண சௌந்தர்யம்” என்று பொருள்.

அதாவது நிறைவான வாழ்க்கை என்பதன் முழு வடிவமே மாளவிகா. இது எந்த கிரகத்தின் அருளால் கிடைக்கும்? 

ஒரு மனிதனின் அடிப்படை மற்றும் ஆடம்பரம் நிறைந்த சொகுசான வாழ்வு என்பதன் அளவுகோல் என்ன? 

சொந்த வீடு, தேவையான பணம், சொல்லப்போனால் தேவைக்கும் அதிகமாகவே பணம், சொகுசு வாகனம்,  அழகான, பொறுப்பான வாழ்க்கைத்துணை, அறிவான குழந்தைகள், காழ்ப்பு உணர்ச்சி இல்லாத சொந்தபந்தங்கள், கலகலப்பான குடும்பச் சூழல், இதுதான் ஒவ்வொரு மனிதனின் கனவாக இருக்கும். இதுவே வாழ்க்கைக்கான தேவையாகவும் இருக்கிறது.

இதையெல்லாம் தருபவர் சுக்கிர பகவான்.  

இந்த சுக்கிரன் நம் ஜாதகத்தில் சரியான இடத்தில் இருந்தால் இவை அனைத்தும் கிடைக்கும்.  

அது எந்த இடம்? எப்படி அறிவது?

உங்கள் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் சுக்கிரன் இருக்கவேண்டும். அந்த இடமும் ரிஷபம், துலாம், மீனமாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த மாளவிகா யோகம் உங்களுக்கு இருக்கிறது என்று அர்த்தம்!

அப்படி இருந்துவிட்டால், இந்த யோகத்தின் காரணமாக, ஆடம்பர வீடு, விலைஉயர்ந்த சொகுசு கார், செல்வச் செழிப்பு, ஆபரணப் பிரியராக, வாசனை திரவியங்கள் பூசி மனம் மயக்கும் நபராக, நேர்த்தியான ஆடைகள் அணிபவராக, உங்களை கவர்ச்சிகரமான மனிதராக உங்களை அப்படியே மாற்றிவிடுவார் சுக்கிர பகவான்.

பணத்தட்டுப்பாடு என்பதே இல்லாமல், கடன் முதலான தொந்தரவு இல்லாதவராக, பெரிய நோய்த் தாக்கங்கள் ஏதும் இல்லாதவராக இந்த மாளவிகா யோகம் உங்களை வைத்திருக்கும்.  

 இந்த யோகம் இருப்பவர்கள் அடிக்கடிச் செல்ல வேண்டிய ஆலயம்.... கும்பகோணம் அருகில் உள்ள “கஞ்சனூர் அக்னீஸ்வர்ர் ஆலயம்.” பெயரில் வேண்டுமானால் கஞ்சனூர் என்றிருக்கலாம். ஆனால் இங்குதான் அருளையும் பொருளையும் அள்ளித்தருகிற சுக்கிர பகவான் குடியிருந்து அருள்மழை பொழிகிறார். நவக்கிரகங்களில், இது சுக்கிர பரிகார ஸ்தலம்.  

மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயமும் சுக்கிரனின் ஸ்தலம்தான்!  இந்த ஆலயங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று சென்று தரிசித்து வாருங்கள். மாளவிகா யோகமானது இன்னும் பலமாகும். இன்னும் இன்னும் வளப்படுத்தும்!  

’எனக்கு மாளவிகா யோகம் ஜாதகத்தில் இல்லை. நான் என்ன செய்வது?’ என்று கேட்கிறீர்கள்தானே.

இந்த யோகம் இல்லாதவர்கள் கூட, கஞ்சனூர் திருத்தலத்திற்கும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் சென்று தரிசித்து வர... சுக்கிரனின் பேரருள் உங்களுக்குக் கிடைக்கும். அதனால், செல்வவளம் பரிபூரணமாக கிடைக்கப் பெறுவீர்கள் என்பது உறுதி.  

அதிலும் மிக முக்கியமாக சொந்த வீடு இல்லையே என்ற ஏக்கம் இருப்பவர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று மனமுருக வேண்டிக் கொள்ளுங்கள். மிகச்சரியாக, ஒரே வருடத்தில் உங்களுக்கு சொந்த வீடு கிடைக்கும். இதுவரை அவதிப்பட்டு வந்த கடன் தொல்லையில் இருந்தும் மீள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புத்திர பாக்கியம் கிடைக்கும். சகல சம்பத்துகளும் கிடைத்து நிம்மதியாகவும் ஆனந்தத்துடனும் அமைதியாகவும் உற்சாகமாகவும் வாழ்வீர்கள்!

அடுத்து பத்ர யோகம்.

பத்ர என்றால் பத்திரப் பதிவு செய்வோமே அது போன்ற உத்திரவாதம் தருகின்ற யோகமே பத்ர யோகம்.

இது நம் ஜாதகத்தில் உண்டா? உண்டு எனில் எப்படி அறிவது? பார்ப்போம்... 

ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 4,7,10 ஆகிய இடங்களில் புதன் இருக்கவேண்டும், அதுவும் அந்த இடம் (ராசி) மிதுனம் அல்லது கன்னி ராசியாக இருக்க வேண்டும்,

அப்படி இருந்தால் உங்களுக்கு பத்ர யோகம் உண்டு என அறியலாம்.

என்ன பலன் தரும்? சிறந்த கல்வி அறிவு, ஞானம், எதையும் ஆராய்ந்து உண்மை அறியும் குணம், கலை, இலக்கிய ஆர்வம் ஆகியவற்றை வழங்கும்.  

எழுத்துப்பணி அதாவது கதை, கவிதை எழுதுதல், இசை, நடனம், போன்றவற்றில் ஆர்வம், அதில் சாதிக்கும் திறமை ஆகியன உண்டாகும்.

ஆய்வுப் படிப்பு, ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், அசாத்திய கணிதத் திறமை உடையவர்களாக இருப்பார்கள். இது தொடர்பான தொழில் அல்லது உத்தியோகமே பார்ப்பார்கள்.

ஆசிரியர், வங்கிப் பணி, இன்சூரன்ஸ் நிறுவனம், பேச்சையே  தொழிலாகக் கொள்வது, உபன்யாசம், பின்னணிப் பாடகர், டப்பிங் தொழில் என இந்தத் துறைகளில் எந்தத் துறையாக இருந்தாலும் சாதனை செய்வார்கள்.

சொந்த வீடு உண்டு. ஆனாலும் நிலங்களாக வாங்கிப் போடுவதில் ஆர்வம் காட்டுவார்கள். அதேபோல் ஆபரண ஆர்வத்தை விடவும் ஆடைகள் வாங்குவதிலும் உடுத்துவதிலும் பிரியர்களாக இருப்பார்கள்.

வணிகம், கமிஷன் தொழில், நிறுவனங்களை நடத்துதல், நைச்சியமாகப் பேசி வியாபாரம் செய்தல் இவர்களுக்கு கைவந்தக் கலை,

இவர்களுக்கு உள்ள ஒரு குறை, அதை குறை என்று கூட சொல்லக் கூடாது. எதிர்பார்ப்பு என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம்.

இவர்கள் பின்னணியில் இருந்துகொண்டு, யாரேனும் இருந்து உந்தி தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும். அல்லது பாராட்டுப் பத்திரம் வாசித்து கொண்டே இருக்க வேண்டும்.

ஆமாம்... இவர்கள் விளம்பரப் பிரியர்கள், பாராட்டுக்களை எதிர்பார்ப்பவர்கள். பாராட்டு கிடைக்கவில்லை என்றால் துவண்டு விடுவார்கள்.

இந்த ஜாதக அமைப்பு உள்ளவர்கள் வணங்க வேண்டிய கடவுள்,  அவசியம் செல்ல வேண்டிய கோயில் எது தெரியுமா?

திருவெண்காடு புதன் ஸ்தலம், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்.  இந்த ஆலயங்களுக்கு புதன்கிழமை அன்று சென்று வணங்கி வந்தால், இந்த பத்ர யோகம் மேலும் வலுவடையும். அது மட்டுமல்ல... கல்வியில் மந்த நிலை உள்ளவர்களும், உயர்கல்வியை முடிக்க முடியாமல் தடை உள்ளோரும்  இந்த ஆலயங்களுக்குச் சென்று வர தடைபட்ட கல்வி தடையில்லாமல் கிடைக்கும்.

மேலும் யோகங்கள் குறித்து அடுத்த பதிவில் பார்க்கலாம்.

- தெளிவோம்

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close